கம்பனின் கவிதைச் சுவையில் தம்மையே இழந்தவர்கள் பலர். அப்படி இழந்தவர்களில் பாரதியாரும் ஒருவர். அதனாலேயே “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலில்
“கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு”
என்று கம்பன் புகழைபாடிய பின்பே
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு”
என வள்ளுவனையும் சிலப்பதிகாரத்தையும் புகழ்ந்தார்.
தமிழில் உள்ள பா வகைகளில் எந்தெந்தப் புலவர் எந்தெந்தப் பா இயற்றுவதில் சிறந்து விளங்கினர் என்பதை பலபட்டைச் சொக்கநாதப் புலவர் ஒரு பாடலில் கூறியுள்ளார். அவர் அதில் “விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.
இருப்பினும் கம்பனை வம்பன் என்பாரும் உளர். எல்லோர் மனங்களையும் கொள்ளை கொண்ட கம்பனின் கவிதை ஒன்று இருக்கிறது. சூர்ப்பனகையின் நடை அழகைச் சொல்லும் அந்த கொஞ்சு கவிதையை விஞ்ச ஒரு கவிதை இல்லை எனலாம். கன்னித் தமிழ் அணங்கை கம்பன் மெல்லொலி எழக் கொஞ்சிக் கொஞ்சிச், சந்த நயம் சிந்திதச் சிந்த சிந்திய கவிதை அது.
“பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செஞ் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்”
இத்தகைய கொஞ்சு கவிதைகளில் தம் நெஞ்சு கரைந்தவர்களில் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர். கம்பனின் கவிதைச் சுவையில் நெஞ்சு கரைந்த கண்ணதாசன்
“பத்தாயிரம் கவிதை
முத்தாக அள்ளி வைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும்
வித்தாகவில்லை என்று பாடு”
எனப் போற்றியுள்ளார்.
கொழும்பு இந்துக்கல்லூரி - கம்பர் சிலை
தன் நெஞ்சைக் கரைத்த கம்பனின் கவிதைகளைக் கண்ணதாசன் தான் எழுதிய எத்தனையோ திரைப் பாடல்களில் கனிரசமாய் வடித்தான். வாருங்கள் பருகலாம்.
கம்பனின் தனிப்பாடல் ஒன்று. சோழநாட்டில் பொன்னி நதி ஓடுவதால் அதனை பொன்னிவளநாடு என்பர். அங்கு மாத்தத்தன் என்ற அழகன் ஒருவன் இருந்தான். பொன்னிவளநாட்டுக் கன்னியர் அவனை விரும்பினர். காதலால் உடல் மெலிந்தனர். அதனால் கைவளையல்கள் கழன்று விழுந்தன. அக் கன்னியரின் தோழியொருத்தி எங்கே கைவளையல்கள் என்று கேட்கிறாள். அதற்கு அவர்களில் ஒருத்தி
“இருந்தவளை போனவளை என்னை அவளை
பொருந்தவளை பறித்துப் போனான் - பெருந்தவளை
பூத்தத்தத் தேன் சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியினில் வந்து”
- (கம்பர் தனிப்பாடல்)
என்று பாடினாளாம் என்கின்றார் கம்பர். அவள் பாடிய பாடல் புரிந்ததா? இல்லையேல்
“இருந்தவளை போனவளை என்னை அவளை
பொருந்த வளை பறித்துப் போனான் - பெருந்தவளை
பூ தத்தத் தேன் சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியினில் வந்து”
இப்போது புரிந்ததா? குளத்தில் இருக்கும் பெருந்தவளை தாமைரைப் பூவில் தத்த [பாய] தேன் சொரிகின்ற வளமான பொன்னி நாட்டில் மாதத்தன் வீதியில் வந்து; அங்கே இருந்தவளை, தெருவில் போனவளை, என்னை, அதோ நிற்கும் அவளை - எங்கள் எல்லோரதும் பொருந்திய வளையல்களைப் பறித்துப்போனான் என்றாளாம்.
பண்டைத்தமிழர் போல்
திருமணத்தில் ஆண்கள் மெட்டி அணியும்
வழக்கம் இருந்ததைப் பாருங்கள்
கவிஞர் கண்ணதாசன் கம்பனைப் பின்பற்றி ‘அவளை’ வைத்தே புதிய பூமிப் படத்திற்கு
“சின்னவளை முகம் சிவந்தவளை - நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை - நான்
ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு”
எனப்பாட்டு இயற்றி கம்பனின் கவிதையை கனிரசமாய் தந்திருக்கிறார்.
இராமாயணத்தில் உள்ள பாலகாண்டத்தில் இராமன் வீதி உலா வருவது உலாவியற் படலத்தில் வரும் ஒரு காட்சி. இராமனைக் கண்ட கன்னியர் நிலையை
“தோள் கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்”
- (இரா: பா.கா: 20: 19)
எனக் கூறும் கம்பனின் கவிதையை உள்வாங்கிய கண்ணதாசன் அதனை இதயக்கமலம் படத்தில்
“தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்”
என்று கவிரசமாய்த் தந்துள்ளார்.
இப்படி கம்பனின் கவிதைகளை சாறாகப் பிழிந்த கனிரசத்தை கண்ணதாசனின் திரைப் பாடல்களில் சுவைத்து மகிழலாம்.
இனிதே,
தமிழரசி.
தமிழரசி.
No comments:
Post a Comment