குறள்:
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் - 0167
பொருள்:
மற்றவரது மேன்மையைக் கண்டு நெஞ்சம் வெதும்பி பொறாமைப்படுபவனுக்கு இலக்குமி தனது தமக்கையாகிய மூதேவியைக் காட்டிவிடுவாள்.
விளக்கம்:
இத்திருக்குறள் அழுக்காறாமை என்னும் அதிகாரத்தில் ஏழாவது குறளாக இருக்கிறது. அழுக்காறு என்றால் என்ன? அழுக்குப் படிந்து படிந்து ஆறாகி அழுக்காறு ஆகிறது. பொறுக்கும் தன்மை பொறுமை. பொறுக்க முடியாத தன்மை பொறாமை அல்லவா! அந்தப் பொறாமை அழுக்காறாக மாறுகிறது. அழுக்கு + ஆறு = அழுக்காறு. அதாவது பிறரது அழகு, அறிவு, செல்வம், திறமை முதலானவற்றைப் பார்த்து மனம் பொறுக்கமுடியாது வெதும்ப வெதும்ப மனதில் மெல்ல மெல்ல அழுக்குப் படிகிறது. அந்த மன அழுக்குப் படிவு ஆறாக ஊற்றெடுத்து அழுக்காறாக ஓடத் தொடங்கும். இப்படி மன அழுக்கு ஆறு ஆகாத தன்மை ‘அழுக்காறாமை’ ஆகும்.
இத்திருக்குறளில் அழுக்காற்றையும் திருவள்ளுவர் அவ்வித்து அழுக்காறு என்று நீட்டி முழங்குகிறார். அவ்வித்து என்றால் என்ன? அவ்வி - ஔவி என்பது வேகுதல் என்று பொருள் தரும். அவித்த நெல் என்னும் போது வெந்த நெல் என்று புரிந்து கொள்கிறோம் அல்லவா! அது போல அவ்வித்து என்றால் வெந்து - மனம் வெந்து துடிப்பது. பிறரின் புகழ், உயர்ச்சி, பெருமை போன்ற நல்வாழ்வைப் பார்த்து மனம் வேக வேக மனதில் அழுக்குப் படிந்து அழுக்காறாகி சென்னையில் உள்ள கூவம் போல் நாறும். அதனாலேயே ஔவையும் ‘ஔவியம் பேசேல்’ என்றார்.
திருமாலின் நெஞ்சில் வீற்றிருப்பவள் செய்யவள் - திருமகள் - சீதேவி - இலக்குமி. அப்படிப்பட்டவள் அவ்வித்து அழுக்காறு ஓடும் மனதில் குடியிருப்பாளா? பூக்கூடைக் காரிக்கு மீன் கூடையின் பக்கத்தில் இருக்க முடியுமா? தவ்வை என்றால் தமக்கை - அக்கை - அக்கா. செய்யவள் ஆன சீதேவியின் அக்கா யார்? அவளே மூத்ததேவி - மூதேவி. அவள் வறுமையின் தெய்வம்.
எவர் நெஞ்சில் அழுக்காறு உண்டாகிறதோ அப்போதே சீதேவி தன் தமக்கையான மூதேவியை அழைத்து உனக்கு ஏற்ற இடம் இது எனக் காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நீங்கிவிடுவாளாம். செல்வம் உடையோரும் நெஞ்சில் அழுக்காறு உண்டானால் வறுமை அடைவர். எனவே அழுக்காறு ஆகாது நமது நெஞ்சை நாமே காத்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment