Monday, 7 January 2013

வயிரமணித் தோள் அழகி!



அந்நாளில் யாழ்ப்பாணத்துக் கன்னியை திருமணம் செய்வதாக இருந்தால் மணமகன் பெண்வீட்டாருக்கு காசு கொடுக்கவேண்டும். அந்தக் காசும் மணமகன் உழைத்ததாக இருக்க வேண்டும். அவ்வழக்கம் ஆறுமுக நாவலர் காலத்திலும் இருந்ததை அவரது வரலாற்றால் அறியலாம். ‘பெண்வீட்டாருக்கு பணம் கொடுப்பது பெண்ணை விலைக்கு வாங்குவதாகும்’ எனக்கருதியே ஆறுமுக நாவலர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை அவரது வரலாறு கூறுகிறது.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இளைஞன் ஒருவனும் தன் மச்சாளை காதலித்தான். மாமனோ உழைப்பவனுக்கே தன் மகளைக் கொடுப்பேன் என்று கூறிவிட்டான்.  பிறர் தயவு இல்லாமலே உழைத்து பொருள் சேர்த்து அவளை மணந்து வாழமுடியும், எனக் கூறி உழைப்பதற்காக வேறு நாடு சென்று விட்டான்.  காலமும் மெல்ல நகர்ந்தது. அவன் நினைத்த பொருள் சேரவில்லை. மச்சாளின் நினைவு வர தனக்குத் தானே சொல்கிறான்.

“வஞ்சிக் கொடி அழகி
          வயிரமணித் தோள் அழகி
கொஞ்சிக் கிளி மச்சி!
          உன்னைக் கூடுவது எக்காலம்!”
                                -  நாட்டுப்பாடல் (யாழ்ப்பாணம்)
                                                - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
யாழ்ப்பாணத்து தந்தை சொன்னது போல் உழைப்பவனுக்கே மகளைக் கொடுப்பேன் என்று கூறும் வழக்கம் சங்ககாலத்திலும் இருந்திருகின்றது. சங்ககால இளைஞன் ஒருவன் தான் விரும்பிய மங்கையை திருமணம் செய்வதற்காக பொருள் தேடிச் சென்றான். அவனுக்கு வேண்டிய பொருளைச் சேர்த்துவிட்டான். அவளை நினைத்து தன் மனதிற்கு சொல்கிறான்.

“மருந்தெனின் மருந்தே! வைப்பெனின் வைப்பே!
அரும்பிய சுணங்கின் அம்பகட்டிளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்
கல்கெழு கானவர் நல்குவர் மகளே!”                        
                                               - (குறுந்தொகை: 71)

'அமிழ்தம் என்றால் அவள் அமிழ்தமே. சேமித்து வைத்திருக்கும் நிதி என்றால் நிதியே ஆவாள். அழகு தேமலுள்ள இளமுலையையும், பெரிய தோளையும், சிறிய இடையையும் உடைய மகளை, மலை வளம் பொருந்திய கானவர் தருவார்' என்கிறான். உழைத்துப் பொருள் சேர்த்ததால் தான் காதலித்தவள் கிடைப்பாள் என்பதில் அவனுக்கு எவ்வளவு இன்பம் பார்த்தீர்களா? சங்ககாலத்தில் இருந்து இன்றுவரை இத்தகைய திருமணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment