குறள்:
“உரம்ஒருவர்க்கு உள்ள வெறுக்கை அஃதுஇல்லார்
மரம் மக்களாதலே வேறு” - 600
பொருள்:
ஊக்க மிகுதியே ஒருவருக்கு வலிமையாகும். அந்த ஊக்கம் இல்லாதவர் மரங்களே. உருவத்தில் மனிதராகத் தெரிவதே அவர்களுக்கும் மரங்களுக்கும் உள்ள வேறுபாடாகும்.
விளக்கம்:
திடமான உடலோடும் உயரமாகவும் இருப்பதால் ஒருவரை வலிமையுடையவர் எனச் சொல்ல முடியாது. உள்ளத்தின் வலிமையே உண்மையான வலிமையாகும். மனவலிமை இல்லாதவரின் உடல்வலிமை வலிமையாகாது. இக்குறளில் வெறுக்கை என்பது மிகுதியான என்ற கருத்தை தருகின்றது. ஊக்க மிகுதி உள்ள வெறுக்கை எனப்படும். மனவலிமை உள்ள ஒருவனுக்கு இன்னும் வலிமையைத் தருவது ஊக்க மிகுதியே ஆகும். ஆதலால் எவனிடம் விடாமுயற்சி எனும் ஊக்கம் மிகவும் கூடுதலாக இருக்கின்றதோ அவனே வலிமையுடையவன் ஆவான்.
மரம், தான் வளர்ந்த இடத்திலேயே அசையாது நிற்கும். ஊக்கம் இல்லாதோர் மரத்தைப் போல் அசையாது நின்ற இடத்தில் நிற்பர் என்பதை உணர்த்தவே ‘அஃது இல்லார் மரம்‘ என்றார். அத்துடன் மரத்தை போல் இல்லாது உருவத்தால் மனிதராகத் தெரிகின்றனர் எனக் கூறினார். ஊக்கமில்லா மனிதர் உடலால் இயங்கித் திரிவதை மரத்தின் வேர், தளிர், இலை, கிளை, காய் போன்றவற்றின் இயக்கத்திற்கு சமமாகவே வள்ளுவர் எண்ணினார் போலும்.
அதுமட்டுமல்ல ‘மக்களாதலே வேறு’ என ஏகாரம் போட்டு, மரத்தைவிடவும் முயற்சி ஏதும் செய்யாது சோம்பலுடன் வாழும் மனிதரை பிரித்துக்காட்டுகிறார். ஏன் இந்தப் பிரிப்பு? மரங்களாவது உணவாகவும் மருந்தாகவும், விறகாகவும், வீடாகவும் எத்தனையோ விதத்தில் உயிர்களுக்கு உதவுகின்றது. தன்னையே காப்பாற்ற முடியாத ஊக்கமில்லாத மனிதரால் யாருக்கு உதவமுடியும்?
முயற்சி இல்லா மனிதரோ சோம்பலுக்கு அடிமைப்பட்டு மரத்தைவிடவும் வலிமை அற்று பேடியராய் வாழ்கின்றனர். வலிமையுடையோராய் வாழவேண்டுமா? முயற்சி உடையோராய் வாழுங்கள். விடாமுயற்சியே ஒருவரின் வலிமை எனக்கூறும் குறள் இது.
No comments:
Post a Comment