மன்னாரில் ஒரு மணற்கேணி. அந்த மணற்கேணியில் நீர் இருப்பதே தெரியாது செம்பாசி படர்ந்து இருந்தது. செம்பாசி படர்ந்த கேணியாக இருந்தாலும் சிலவேளைகளில் ஊற்றெடுத்து நீர் நிறைவதும் உண்டு. அப்படி ஊற்றெடுத்த நேரம் புது ஊற்றால் சல சலத்தது மணற்கேணி. ஊரே அங்கு கூடி தண்ணீர் அள்ளியது. புதுக்குடத்துடன் அழகிய கன்னி ஒருத்தியும் வந்தாள். கேணியில் படர்ந்திருந்த செம்பாசியைத் தள்ளுவதற்காக அவளுக்கு முன்னே குடத்தை வைத்தாள். கேணியுள் இறங்கி நின்றுகொண்டு குடத்தை கரையில் வைத்து தண்ணீர் அள்ள முடியுமா? அவளின் செயலைப் பார்த்திருந்த இளைஞன் ஒருவன் அவளின் நளினத்தால் கவரப்பட்டு தன் நண்பனிடம்
ஆண்: பூவலிலே ஊற்றேடுக்கப் புதுக்
குடத்தை முன்னே வைத்து
ஆரல் படர்ந்த தண்ணீர்
அள்ளுதப்பா நல்ல மச்சி.
எனச் சொல்லிச் சிரிக்கிறான். அவர்களின் சிரிப்பை அறியாத அவள் கேணியிலே தண்ணீர் மொண்டு வருகிறாள். அவள் தண்ணீர் சுமந்து வரும் அழகை இரசித்தபடி குறுக்கே வந்து வழி மறித்தபடி அவளிடம் கேட்கின்றான்.
ஆண்: சட்டையிட்டுப் பொட்டெழுதித்
தண்ணீயள்ளி வாற பெண்ணேயுன்
சட்டையிட்ட கையாலே கொஞ்சம்
தண்ணி தந்தால் ஆகாதோ?
- நாட்டுப்பாடல் (மன்னார்)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
அவனின் சீண்டலுக்கு அவள் தண்ணீர் கொடுத்தாளோ இல்லையோ எமக்கு இளமையின் இயல்பை எடுத்துக்காட்டும் இரண்டு நாட்டுப்பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
1. பூவல் - மணற்கேணி
2. ஆரல் - செம்பாசி
No comments:
Post a Comment