Tuesday, 27 March 2012

பால் குடித்துறங்கும் குழந்தை



ஒவ்வொரு நாட்டுப்பாடலும் ஒவ்வொரு விதத்தில் தன் சிறந்த பண்பை எடுத்துச்சொல்லும். அந்த வகையில் இந்த நாட்டுப்பாடல் ஈழத்து மாந்தையிலிருந்த பாலாவியில் வாழ்ந்த ஓர் இளம் தாய் தன் முதற்குழந்தைக்கு பாலூட்டி தழுவி மகிழ்ந்ததை எமக்குச் சொல்கின்றது. தாய் குழந்தைகுப் பாலூட்டும் காட்சியை எடுத்துச் சொல்லும் பழைய நாட்டுப்பாடல்கள் இக்காலத்தில்  கிடைப்பது மிக அரிதாகும். சங்க இலக்கியத்திலும் முலைப்பால் ஊட்டும் காட்சி மிக அரிதாகவே உள்ளது. அதனால் கீழே இருக்கும் இரு நாட்டுப்பாடல்களும் முதன்மை பெறுகின்றன.
தென்னைமரச் சோலை. அங்கே ஒர் வீடு. அவ்வீட்டில் வாழ்ந்த இளம் பெண் ஒருத்தி குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள்.  வீட்டுக்கு வெளியே தென்னைமரச் சோலையில் தென்றற்காற்று தவழ்ந்து விளையாடியது.  அந்தப் பச்சிளம் குழந்தையையுடன் தென்றற் காற்றை நுகர்ந்திருக்க தென்னைமரச் சோலைக்கு வந்தாள். அங்கே வேலை செய்து கொண்டு அவள் கணவனும் இருந்தான். குழந்தை அழுதது. அவள் குழந்தைக்கு பால் கொடுக்க சேலையைத் திறந்தாள். பால் மணம் வீசியது. அந்த மணத்தை நுகர்ந்தபடி அவள் என்ன செய்கிறாள் என்பதைப் பார்த்து மகிழ்ந்திருந்த கணவன், அவள் செயலை பாடலாக வடித்தான்.

கணவன்:  தென்னைமரச் சோலையிலென்
                           தேன் மொழியாள் போயிருந்து
                 வன்ன முலை திறந்த
                           வாசமல்லோ வீசின காண்
கணவன்:  குரும்பை இளமுலைப் பால் 
                           குடித்துறங்கும் தவ்வலை
                 தாமரைக் கையால தழுவி
                           அணைக்குதுஉ  காண்.
                                 - நாட்டுப்பாடல் (பாலாவி)
                                            - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)   
      
பேயனார் என்ற சங்ககாலப் புலவர் ஐங்குறுநூற்றின் முல்லைத் திணையைப் பாடியவர். சங்ககாலப் பெண்ணொருத்தி தனது ஆண்குழந்தைக்கு முலைப்பால் ஊட்டினாள். அதனைப்பார்த்த அவள் கணவன் அவளது முதுகுப் புறத்தை அணைத்த காட்சியை, பேயனார் தாம் பாடிய பாடலில் பதிவு செய்திருக்கிறார். 

“வாணுதல் அரிவை மகன்முலை ஊட்ட
தானவள் சிறுபுறம் கவையின னன்று 
நறும்பூந் தண்புற வணிந்த
குறும்பல் பொறைய நாடுகிழ வோனே”           - (ஐங்குறு நூறு - 404)

மனைவி பாலூட்டுவதை பார்த்து மகிழும் கணவன்மார்கள் காலங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இந்த ஆசைக்கவிதைகள் எடுத்துக் காட்டாகும்.
இனிதே, 
தமிழரசி.

குறிப்பு:
சொல்விளக்கம்.
வன்னமுலை - பொன்போன்ற முலை
குரும்பை இளமுலை - தென்னங்குரும்பை போன்ற முலை
தவ்வல் - குழந்தை
வாணுதல் - ஒளி பொருந்திய நெற்றி 
அரிவை - பெண்
சிறுபுறம் - முதுகுப்புறம்/ பின்பக்க கழுத்தை
கவையினன் - அணைத்தனன்
நறும்பூ - நறியபூ 
புறவு - முல்லைநிலம் 
குறும்பல் பொறைய - குறுகிய பல சிறுமலைகளையுடைய
நாடுகிழவோன் - நாட்டின் தலைவன்.

No comments:

Post a Comment