சென்றது.....
நாகநாட்டு அரசனான விசுவகர்மாவின் மகன் மயன். அவனின் மனைவி இளமதி. அவளை அவன் காதலித்த காலத்தில் உலக நாடுகளை சுற்றிவரும் வழியில் அவளுக்காக அரசமாசுணத்திடம் இருந்து மனோமயமாமணியை எடுத்தான். மாசுணத்தால் தாக்கப்பட்ட அவனது நண்பன் முகிலனின் உயிரைக் காப்பாற்ற பணிலத்தில் நாககடத்திற்கு நண்பன் நத்தத்தனுடன் எடுத்துச் சென்றான்.
நாககடத்தில் இனி.....
நுதிமயிர்த்துகில்
“முதுமரப்பொந்து போல முழுமெய்யும் புண்களுற்றார்க்கு
இதுமருந்தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்து
பதுமுகன் பரவை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே”
- திருத்தக்கதேவர் [சீவகசிந்தாமணி]
இளநகையைப் பார்த்த மயனின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. இவள் முகிலனின் காதலி பத்மாவின் தங்கையல்லவா? அல்லது அவளே போன்று இன்னொருத்தியோ? அவள் நின்ற நிலையும் சொன்ன சொற்களும் பதுமாவின் தந்தையை அப்படியே அவன் முன் கொணர்ந்து நிறுத்தி இருந்தது.
சுக்கிராச்சாரியாரிடம் இசை கற்க வந்திருப்பாளோ! என நினைத்தான்.
இளநகையைக் கண்ட நகர்காவலன் மிகவிரைவாக காவல் யானையிலிருந்து இறங்கி ஏதோ சொல்ல வாய்திறந்தான். அவனைத் தன் பார்வையால் தடுத்து, மயனைப் பார்த்து, “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்றாள்.
மயன் மீண்டும் கூனிக்குறுகி நின்று, “என்னைத் தெரியிதில்லீங்களா....” எனக் கொஞ்சம் இழுத்து, அவள் தன்னை அடையாளம் காண்கிறாளா எனப்பார்த்தபடி பல்லை இளித்து, தலையைச் சொறிந்தான். அவளால் தன்னை அறிந்து கொள்ள முடியவில்லை என்பதை ஊகித்து, என் பெய சித்தேனுங்க. நாங்க குமரிமலக்கு கிழக்கால ஈந்து வந்தேமுங்க” என்றான்.
“புலத்தியபுரத்தில் இருந்து வருகிறாயா?” என்றாள்.
புலத்தியபுரமா? யங்க யேதேனு விசேசமுண்டாங்க?
“புலத்தியரிடம் இருந்து வருகிறாயா? என அறியக் கேட்டேன்”
“ இல்லீங்க, நாங்க நடுநாட்டு மலவாசிங்க” என மயன் சொன்னதைக் கேட்டதும் இளநகை தனது இடது உள்ளங்கையில் வலதுகை முட்டியை அடித்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்தவாறு யோசித்தாள்.
அவளின் செய்கையால் நாகநாட்டு மகாமந்திரி பதுமகோன் மகள் அவளே என்பதை மயன் புரிந்து கொண்டான். கடந்த இரண்டு வருடத்தில் இயற்கையின் கைவண்ணத்தால் அவள் அழகுமங்கையாக உருவெடுத்து நிற்பதைக் கண்டு மகிழ்ந்தான். நத்தத்தனும் தன் நிலையில் இருப்பதைப் பார்த்தான்.
தனது நடையை நிறுத்தாமலே, “என்ன சொன்னாய்! உன் பெயர் சித்தனா? நடுநாட்டு மலைவாசியா நீ? நீ நிச்சயமாக நடுநாட்டவனாக இருக்கமாட்டாய். அவர்கள் சுருண்ட முடியுடன் குள்ளமாக இருப்பார்கள். உண்மையைச் சொல்” என்று சொன்னவளின் கண்களில் வாலகன் மண்டியிட்டு இருப்பது தெரிந்தது. அவன் பொய் சொல்கிறான் என்பதை வாலகனின் செயல் உறுதி செய்தது.
இளநகை சித்தனைப் பார்த்து, “சித்தா! சுக்கிராச்சாரியாருக்கும் நாககடத்து நாயகிக்கும் மட்டுமே மண்டியிடும் வாலகன் இன்று உனக்கு மண்டியிட்டு இருக்கிறது. இப்பவும் எழுந்திராது உன் ஆணைக்காக காத்திருக்கிறது. இனியும் நீ பொய் சொல்லிப் பயனில்லை. வாலகனின் வாழ்த்தைப் பெற்ற உனக்கு, அரச மரியாதை செய்ய வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது. இது நாககட மக்கள் அறிந்த உண்மை” என்றாள்.
சித்தனும் நன்றாகக் குனிந்து கூழைக்கும்பிடு போட்டு, “தாயி! நம்மலுக்கு அரசமரியாதி யொன்னும் வாணாம். ரத்தம் சொட்டச் சொட்ட கிடக்கும் அந்த புள்ளய காப்பாத்து தாயி! அதுபோதும். நமக்கு தெரிய நாம சித்தேன் தானுங்க. நம்ம ‘மலக்காட்டாள்’ பேரில சத்தியமுங்க” என்றான்.
நத்தனைக் கவனித்த அவள் மயங்கிக் கிடக்கும் முகிலனைப் பார்த்தாள். முகிலன் நாடோடி உடையில் இருந்த போதும் அவளால் அவனை அடையாளம் காண முடிந்தது.
நத்தனிடம், “இவர் முகிலன் அல்லவா?” என்றாள்.
“ஆமாமுங்க அப்படித்தா பெய சொன்னாரு” என இழுத்தான்.
“யார் சொன்னார்?” என்று அவள் அதிர்ந்தாள்.
“இந்த முகிலன் தானுங்க சொன்னாரு”
“எப்படி உடலெங்கும் இப்படிக் காயங்கள் வந்தன?”
“மாசுணம் கவ்வி எறிஞ்சி வந்திச்சி”
“மாசுணமா?”
நானு சொலுறேனுங்க. நத்தனுக்கு நடந்தது தெரியாதுங்க,” என சித்தன் கதை சொல்லத் தொடங்கினான்.
முகிலனைக் கண்டதும், சித்தனின் கதை கேட்கும் நிலையில் அவள் இல்லை. “சித்தா! கொஞ்சம் பொறு!” என்றவள், “இவருடன் யார் யார் வந்தார்கள்?” எனக் கேட்டாள்.
“யாரும் வரயில்லீங்க” என சித்தன் சொன்னதும், நகர் காவற்றலைவனைப் பார்த்து “அரச மருத்துவரை உடனே அழைத்துவர ஏற்பாடு செய்” எனக்கூறி, “இவரை உள்ளே கொண்டு சென்று மஞ்சத்தில் படுக்க வையுங்கள்” என அங்கு நின்ற சேவகர்களிடம் முகிலனைக் காட்டிச் சொன்னாள்.
“சித்தா! வாலகன் உன் சொல்லுக்காக இன்னும் மண்டியிட்டு இருக்கிறது பார்” என்றாள்.
“நா, என்னங்க செய்யணு” என ஒன்றும் அறியாதவன் போல சித்தன் கேட்டான்.
அவளும், “வாலகனை எழுந்திருக்கச் சொல். நீ யார் என்று தெரிகின்றவரை உன்னை மரியாதைக் குறைவாகத்தான் நடத்த வேண்டி இருக்கிறது. வாலகன் வாழ்த்துப் பெற்றதால் உன் உயிர் உன்னுடலில் எஞ்சி நிற்கிறது. நடிக்காதே. சுக்கிராச்சாரியார் வந்ததும் உன்னிலைமை என்னாகும் என்பதை நீயே அறிந்து கொள்வாய். உனக்குத் தெரியுமோ என்னவோ சுக்கிரநீதி என்பது உலகப்புகழ் பெற்றவிடயம். உலகுக்கு நீதி சொன்னவர் மாளிகை முன் நிற்கிறாய்” என்றாள்.
“அப்படியாங்க, நமக்கு நீதி கிடக்குங்க. நாங்க முகிலன் உசிர காக்கத்தானுங்க ஈங்க வந்தேமுங்க” என மலைவாசிகள் போல மகிழ்வுடன் குதித்து வாலகனிடம் சென்று அதைத்தடவினான், சித்தன். வாலகன் எழுந்து துதிக்கையால் அவனை அணைத்தவாறு நின்றது.
இளநகையின் பின்னால் வந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சுக்கிறாச்சாரியாரின் மனைவி உரகவதி, ‘இளநகை’ என அவளின் பெயர் சொல்லி அழைத்து, சேவகர்களால் தூக்கிச் செல்லபடும் முகிலனைக் காட்டி, “இவரை உனக்குத் தெரியுமா?” என்றாள்.
உரகவதியின் குரல் கேட்டதும் திரும்பி மரியாதையுடன், “ஆம். இவர் நாகநாட்டு தானைத் தலைவர் குமணர் மகன் முகிலன்” என்றாள்.
“நாகநாட்டு தானைத் தலைவர் மகன் உயிர்காக்க வந்தவர்களை நாம் இப்படி நடத்தலாமா? இவர்களுக்கு பரிசளிப்பதல்லவா முறை” என்ற உரகவதியைப் பார்த்து சித்தன், “அப்படி சொல்லு தாயி! நீயி யாரு தாயி! என்றான்.
“சுக்கிராச்சாரியாரின் மனைவி” என்றாள் இளநகை.
“சுக்கிராச்சாரியாரின் மனைவி” என்ற சொல் கேட்டதும், சித்தன் உரகவதி நின்ற திசையில் வீழ்ந்து வணங்கினான். அவனைப்போலவே நத்தனும் வீழ்ந்து வணங்கினான். அளக்கர்களின் குருபத்தினி அல்லவா அவள்!
உரகவதி அவர்கள் இருவரையும் அன்புடன் ஆசிகூறி எழுந்திருக்கச் சொன்னாள். அதற்கிடையில் அங்கு அரசமருத்துவர் வந்து சேர்ந்தார்.
உரகவதிக்கு வணக்கம் கூறிய மருத்துவர், “நாடோடி மலைவாசிக்கு நான் மருத்துவம் பார்க்க வேண்டுமாம். உடனே என்னை அழைத்துவர இந்த வாயாடி சொன்னதாக நகர் காவற்றலைவன் சொன்னான். சுக்கிரர் இவளுக்கு நன்றாக செல்லம் கொடுத்து கெடுக்கிறார்” என்று இளநகையைக் காட்டி அலுத்துக் கொண்டார்.
உரகவதி அவரைப்பார்த்து சிரித்தபடி, “நீங்கள், மலைவாசி நாடோடிக்கு மருத்துவம் செய்ய வேண்டிய தேவை இப்போது இங்கு ஏற்படவில்லை. நாகநாட்டு தானைத் தலைவர் குமணர் மகனுக்கு மருத்துவம் செய்யவே இளநகை உங்களை அழைத்தாள்” என்றாள்.
“இங்கேயா? தானைத் தலைவர் குமணர் மகனா? எப்படி இங்கு வந்தார்? என்ன நடந்தது? எங்கே அவர்?” எனப்பரபரத்தார்.
சித்தனையும் நத்தனையும் காட்டி, அவருக்கு என்ன நடந்தது என்பது இந்த மலைவாசிகளுக்கு தெரியும். தானைத் தலைவர் மகனை உள்ளே தூக்கிச் சென்று மஞ்சத்தில் படுக்க வைத்துள்ளார்கள்” என்று மருத்துவருக்குச் சொன்ன உரகவதி, இளநகையைப் பார்த்து “அவர்களை அழைத்து வா” எனக் கூறி, மருத்துவருடன் மாளிகையினுள் சென்றாள்.
அவர்கள் இருவரையும் தொடர்ந்து மருத்துவரின் மருந்துப் பெட்டகத்தை இருவர் சுமக்க முடியாது சுமந்து சென்றனர்.
சித்தா! உனக்கு நல்ல காலம். உன் நண்பனுடன் உள்ளே வா” என்ற இளநகையை மயனும் நத்தத்தனும் தொடர்ந்து சென்றனர்.
அந்த மாளிகையின் உட்கூடம் ஒன்றில் இருந்த மஞ்சத்தில் முகிலன் கிடத்தப்பட்டிருந்தான். அரசமருத்துவர் அவனின் நாடித்துடிப்பைக் கணித்தபடி, தலைக்காயத்தையும் உடற்காயங்களையும் நோட்டம் விட்டார். மலைவாசிகள் வருவதைக் கண்டதும் முகிலனைக் காட்டி, “என்ன நடந்தது” எனக்கேட்டார்.
“நாம மலைவாசிங்க. மாசுணத் தோலுக்கும், மாசுண நெய்யுக்கும் மாசுணம் கொல்லுவது எங்க தொழிலுங்க. அதுக்காக அந்த காட்டண்ட போனா, இவரு மாசுணங் கவ்வியெறிந்து அடிபட்டு மயங்கி கிடந்தாரு. அவருக்கு மயக்கம் தீர்த்தப்போ, தா பணிலத்தில வந்ததென்னு சொன்னாரு. அவரு சொன்னாப்ப பணிலத்தில இட்டிட்டு வந்தேமுங்க. ஈங்க வந்ததும் மயங்கிட்டாரு” என்றான் சித்தன்.
மருத்துவர் முகிலனின் வாயைத் திறந்து பார்த்து “யார் இவருக்கு மருந்து கொடுத்தது?” என்றார்.
"நானுதானுங்க, நா மலைவாசி கைமருத்துவனுங்க ” என்ற நத்தனிடம் என்ன மருந்து கொடுத்தான் என்பதை அரச மருத்துவர் கேட்டறிந்தார்.
முகிலனின் உடம்பில் மாசுணம்கவ்விய இடத்தில் தசைகள் சிதைந்து தொங்கின. அதை உரகவதிக்குக் காட்டி, “உடனடியாக இரண்டு அறுவவை மருத்துவம் செய்தாக வேண்டும். மரப் பொந்து போல இருக்கும் இந்தக் காயங்களுக்கு குமிகைப் பற்று வைத்து நெய்க்கிழி சாத்த வேண்டும். நெய்க்கிழி சாத்தினால் நுதிமயிர் துகிற் குப்பாயம் அணிய வேண்டும். என்னிடம் இப்போது கையிருப்பில் நுதிமயிர் துகிற் குப்பாயம் இல்லை” என்றார்.
“எங்கே நுதிமயிர்த்துகில் வாங்கலாம்” என இளநகை அவரிடம் கேட்டாள்.
“நாககடத்து சிற்றாற்று அரங்கங்கள் எங்கும் வெள்ளெலிகள் வாழ்கின்றன. அந்த சிற்றாற்றங்கரை வாசிகள் வெள்ளெலிகளின் மயிரில் இருந்து நுதிமயிர் துகில் நெய்வார்கள். நுதிமயிர் (வெள்ளெலி மயிர்) சிதைந்து தொங்கும் மனிதத்தசை நார்களை ஒன்றோடு ஒன்று இணைத்து தசையை மேவி வளரச்செய்யும். அதனால் சிற்றாற்றங்கரை வாசிகள் நெய்யும் நுதிமயிர்த் துகிலை நாகநாட்டு அரசு வாங்கி, குப்பாயமாக செய்வித்து அறுவை மருத்துவர்களுக்கு தருவார்கள்” என்றார்.
“அப்படியா! நான் சிற்றாற்றங்கரை வாசிகளிடம் சென்று நுதிமயிர்த்துகில் வாங்கி வருகிறேன்” என்றாள் இளநகை.
“குழந்தாய்! எப்படியம்மா அடர்ந்த காடுள்ள சிற்றாற்று அரங்கப் பகுதிக்குப் போவாய்? நச்சுப் பூச்சிகள் வாழும் இடம் அல்லவா?” என ஒரு தாயின் பரிவோடு உரகவதி கேட்டாள்.
“எமது தேரோட்டி வீரன் என்னுடன் வருவான். நான் வசம்பு மாலைகளை காலிலும் கையிலும் அணிந்து செல்வேன். நச்சுப் பூச்சிகள் என்னை தீண்டாது” என்றாள்.
முகிலன் விடயத்தில் இளநகை காட்டிய பரபரப்பால் உரகவதி அவள்மீது சந்தேகப்பட்டாள். ஆதலால், இளநகையை தனியே அழைத்துச் சென்று, “ஏன் இப்படி பரபரக்கிறாய், முகிலனை நீ காதலிக்கிறாயா?” என்றாள்.
உரகவதியின் கேள்வியைக் கேட்டு, “நானா!” என திகைத்து நின்றாள், இளநகை.
நாயகி வருவாள்........
இனிதே,
தமிழரசி
சொல் சொற்றொடர் விளக்கம்:
“முதுமரப்பொந்து போல முழுமெய்யும் புண்களுற்றார்க்கு
இதுமருந்தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்து
பதுமுகன் பரவை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற் குப்பாயம் புகுகென நூக்கினானே” - முதிய மரத்தில் இருக்கும் பொந்து போல உடல் முழுவதும் காயம் ஏற்பட்டவர்களுக்கு இது மருந்து என்று கூறி மருத்துவர் நல்லெண்ணெய் சேர்த்த மருந்துப்பற்றை வைத்து பதுமுகன் என்பவனின் அகன்ற மார்பில் நெய் பூசிய துண்டை நன்றாக அழுத்திப் பொருத்தி கட்டி, வெள்ளெலி மயிரால் நெய்த வெண்ணிற துணியால் தைத்த உடைக்குள் புகு என்று கூறி போடுவித்தான்.
முதுமரப்பொந்து - வயதானமரத்தின் பொந்து
முழுமெய்யும் - முழு உடம்பும்
நல்லார் - மருத்துவர்
இழுது - எண்ணெய் (எள்+நெய்)
கவளம் - மருந்துப்பற்று
பரவை - அகன்ற
நெய்கிழி - நெய்ச்சீலை/துண்டு
பயில - நன்றாக
சேர்த்தி - அழுத்திப்பொருத்தி வைத்து
நுதிமயிர் - வெள்ளெலிமயிர்
துகில் - வெண்ணிற துணி
குப்பாயம் - சட்டை/உடை
புகுகென - புகச்சொல்லி
நூக்கினான் - போடுவித்தான்
புலத்தியபுரம் - இன்று அந்த இடத்தை பொலநறுவை என்கிறோம்
புலத்தியர் - புலத்தியமுனிவர்
ஆணைக்காக - கட்டளைக்காக
மலக்காட்டாள் - கொற்றவை
மஞ்சம் - கட்டில்
சுக்கிரநீதி - சுக்கிராச்சாரியாரால் எழுதப்பட்ட நீதி நூல்
அளக்கர்கள் - அரக்கர்கள்/அசுரர்கள்
காட்டண்ட - காட்டை அண்டிய பகுதி
கைமருத்துவன் - கைவைத்தியம் செய்பவர்
அறுவை மருத்துவம் - அறுவைச் சிகிச்சை
குமிகை - பிஞ்சு எள்
நுதிமயிற் துகிற் குப்பாயம் - வெள்ளெலிமயிரால் நெய்த துணியில் தைத்த சட்டை
நுதிமயிற்றுகில் - வெள்ளெலி மயிர்த்துணி
அரங்கங்கள் - ஆற்றிடைக்குறைகள்/திட்டுக்கள்/நான்கு பக்கமும் நீராலான திடல்கள்
வசம்பு மாலை - வசம்பால் கட்டிய மாலை. (வசம்பின் மணத்திற்கு நச்சுப்பூச்சிகள் அணுகா)
No comments:
Post a Comment