Wednesday, 7 February 2024

தோகை கூத்தாட....


சான்றோர்களால் காளமேகப் புலவர், வசைபாடக் காளமேகம் எனப் போற்றப்பட்டவர். அதற்காக அவர் வசையான பாடல்களையே பாடினார் என்று சொல்ல முடியாது. அதற்கு இந்தப் பாடல் ஓர் எடுத்துக் காட்டாகும். தமிழிலுள்ள வல்லின எழுத்துக்களால் மட்டும் பாடியிருக்கும் இப்பாடலை ஒருமுறை படித்துப் பாருங்கள்.


துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடற்

றொடுத்த தொடைகடுக்கை பொற்போற் - பொடித்துத்

தொடைபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்

கடிபடைத்துக் காட்டித்துக் காடு

- (காளமேகம் தனிப்பாடல்: 73)


என்ன உங்கள் பற்களுடன் நாக்கு போர் புரிகிறதோ? இப்பாடலின் கருதுத் தெரிகிறதா? கார்காலத்தில் அவர் பார்த்த காடு ஒன்றைப் பாடியிருக்கிறார். எப்படிப்பட்ட காடு இது? பாடலைக் கொஞ்சம் பிரித்துப் படிப்போமே.


துடித்துத் தடித்துத் துடுப்பு எடுத்த கோடல்

தொடுத்த தொடை கடுக்கை பொன்போல் - பொடித்துத்

தொடை படைத்த தோள் துடித்த தோகை கூத்தாடக்

கடிபடைத்துக் காட்டிற்றுக் காடு


கார்காலத்தில் மின்னல் மின்னும் இடி இடிக்கும். அப்படியான நேரம் ஒரு  நங்கை, தோழியருடன் காட்டினுள் செல்கிறாள். வானத்தில் மின்னல் மின்னி நடுங்கிற்று[தடித்து துடித்தது]. காந்தள் [கோடல்/கார்த்திகைப்பூ] பூங்கொத்துக்களாய்[துடுப்பு] முகிழ்ந்தன. பொன்போல விரிந்த [பொடித்து] கொன்றை [கடுக்கை] மலர்கள் தொடுத்த மாலைகளாகத் [தொடுத்த தொடை] தொங்கின. வளைகளை [தொடை/தோளில் அணியும் நகை] அணிந்த பெண்களின் தோள்கள் நடுங்கின [தோள் துடித்த]. மயில்கள் [தோகை] கூத்தாடின. அங்கே வானத்து மின்னல் மின்னி ஆட, காந்தள் மலர்க் கொத்துக்கள் ஆட, கொன்றைமலர் மாலைகளாக ஆட, அங்கே வந்த பெண்களின் தோள்கள் குளிரால் நடுங்கியாட, மயில்கள் தோகை விரித்தாட அக்காடு தனக்கென ஒரு மணத்தை [கடி] படைத்துக் காட்டியது என்கிறார்.


வல்லின எழுத்துக்களை வைத்து வானத்தில் இருந்து வனம்வரை கூத்தாட்டம் காட்டி, மலர்களின் மணங்கள் ஒன்றாய் கலந்து புதுமணத்தைப் படைப்பதைக் காட்டி, நாலடிக்குள் எவ்வளவு நளினமாக கூதிர்கால [கார்கால] காட்சி ஒன்றை தமிழ் அன்னைக்கு வரைந்து காட்டியுள்ளார்.

இனிதே, 

தமிழரசி.

No comments:

Post a Comment