Monday, 30 January 2023

பாண்டிய இளவரசி வீரமாதேவியின் காதல்

மாறவர்மன் குலசேகர பாண்டியன் வீரமாதேவியின் தந்தை
40 ஆண்டுகட்கு மேல் இலங்கையின் ஒருபகுதியை ஆண்டவன்
17/03/2016 மதுரை சென்ற போது எடுத்தது.

இலங்கையை 750 ஆண்டுகட்கு முன் தமிழகத்திலிருந்து ஆண்ட கடைசிப் பாண்டிய பேரரசன் என்னும் பெருமைக்கு உரியவன் முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன். மேலே படத்தில் இருக்கும் இவனது சிலை மதுரை மீனாட்சி அம்மன் பொற்றாமரை குளத்தை சுற்றியுள்ள ஒரு தூணில் இருக்கிறது. இவனது தந்தை முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். தாயார் மகிழினி நாச்சியார். குலசேகர பாண்டியனின் தாயார் மகிழினி நாச்சியாரின் அரசியல் ஆளுமைபற்றி மார்க்கோபோலோ கூறத்தவரவில்லை.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சேர, சோழ, பல்லவ, போசள நாடுகளையும் இலங்கையின் ஒரு பகுதியையும் வெற்றி கொண்டு பேரரசனாக கி பி 1251 முதல் கி பி 1268 வரை இருந்தவன். தன் இலங்கையின் வெற்றியின் அடையாளமாக அவன் பொறித்த இரட்டைக் கயல்மீன் இலச்சனையை திரிகோணமலை Fredrick Fort உள்ளே கோணேசர் கோயிலுக்கு செல்லும் வழியில் இன்றும் காணலாம். அவன் மகாராசாதி ராச ஶ்ரீபரமேஸ்வரன், எம்மண்டலமும் கொண்டருளியவன் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டான்.

பாண்டியரின் ஆட்சியின் கீழ் 60 ஆண்டுகள், 
1251 முதல் 1311 வரை இருந்த பகுதிகள்

அவனுக்குப்பின் அவனது மகன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி பி 1268 தொடக்கம் 1311 வரை தந்தை ஆண்ட இடங்களை இன்னும் விரிவாக்கி ஆண்டான். 40 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையை தனக்குக் கீழ் வைத்திருந்தான். தந்தையும் மகனுமாக 60 ஆண்டுகள் இலங்கையின் பெரும் பாகத்தை ஆட்சி செய்தனர் என்பது வரலாறாகும். மகாவம்சமும் அவர்களது ஆட்சியைக் கோடிட்டுக் காட்டுகிறது. இவனது ஆட்சிக்காலத்தில் யுத்தங்கள் நடந்தபோதும் இவன் ஆண்ட இடங்கள் அமைதியாக இருந்தன. 

மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகளே புங்குடுதீவில் கோட்டை கட்டி வாழ்ந்த வீரமாதேவி. அவள் இவனது தாயார் மகிழினி நாச்சியாரிடம் சிறுவயதில் இருந்து வளர்ந்தாள். மகிழினி நாசியாரும் அவளும் தொண்டியில் இருந்து எங்கள் தீவுப்பகுதிக்கு வந்து சென்றார்கள். அதனால் வீரமாதேவிக்கு கடற்பயணம் மிகவும் பிடித்ததொன்றாக இருந்திருக்கிறது. ஒருநாள் அவளும் அவளது தோழிமாரும் ஆண்வேடமிட்டு இன்று ஆந்திராவுக்குள் இருக்கும் மல்லம் [மாமல்லபுரம் அல்ல] என்ற இடதிற்கு கடல்வழியாகச் சென்று இறங்கினார்கள். காகந்தி என அழைக்கப்பட்ட இடத்திற்கு அருகே மல்லம் இருந்தது. அதன் ஒருபகுதி கடல்கோளால் அழிந்தது. அக்கடற்கரையில் இருந்த அரங்கத்தில் ஓர் அழகிய இளைஞன் பரதம் ஆடிக்கொண்டிருந்தான்.

அவனது ஆடலைப் பார்த்தும் ஆடல் முடிந்து அவன் வாசித்த வீணையைக் கேட்டும் தனது நிலையை

வளியிடைத் தாவி வண்ணங்களாடி வாணுதல் அரிவையர்                                                                                         தோற்றிடநாணி

களியிடை வண்டென கண்மலராட காதலில் வீழ்ந்தேன்                                                                                             களிநடம்கண்டே

விளியிடைக் காதல் மொய்த்திடநின்றே வீணையின் நாதம்                                                                                         கேட்டிடலுற்றேன்

துளியிடை நீரில் தூலிகைபோல துவண்டதென் உள்ளம்                                                                                             பல்லவன்முன்னே

என்று தன் நாட்குறிப்பில் தனது காதல் கனிந்ததை எழுதி வைத்தாள். பாண்டிய இளவரசியின் இப்பாடலில் உள்ள

துளியிடை நீரில் தூலிகைபோல துவண்டதென் உள்ளம்                                                                                         பல்லவன்முன்னே

இந்த வரிகள் சுட்டும் அவளது மனவுறுதி எப்படித் தளர்ந்தது? ஆடலா வீணையின் நாதமா? யார் இந்தப் பல்லவன்? பார்ப்போம்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment