Sunday, 1 January 2023

அன்றைய சைவசமயப் பெண்களின் உயர்நிலை



இன்றைய சைவசமயப் பெண்களின் நிலை எப்படியுள்ளது என்பதை அறிய வேண்டுமா? அதற்கு நாம் அன்றைய சைவசமயப் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை ஆராய்தல் நன்று. எல்லோரும் அன்றைய சைவசமயப் புரட்சியும் வளர்ச்சியும் [நாயன்மார் காலத்தில்] ஆண்களால் நடந்தது என்கிறார்கள். அதன் உண்மை நம் எத்தனை பேருக்குத் தெரியும்.


அன்றைய சைவசமய வளர்ச்சியில் தமிழ்ப் பெண்களின் பங்கு என்ன? வீட்டுக்கு வீடு திண்ணையில் இருந்து கதை பேசினார்களா? வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்டு இருந்தார்களா? அல்லது இன்றைய பல பெண்கள் போல  சைவசமயம் சொல்வது என்ன? எதற்காகக் கோயிலுக்குப் போகிறோம்? எவையுமே தெரியாது வாழ்ந்தார்களா?


தமிழர் வரலாற்றில் இருண்டகாலம் களப்பிளர் ஆண்டகாலமே. அதன் பின்னர் பௌத்தமும் சமணமும் தலைவிரித்தாடிய காலத்தில் சைவசமயம் மீண்டும் வீறுகொண்டு எழுந்தது. அதற்கு முதன்முதல் வித்திட்ட பெருமை காரைக்கால் அம்மையாரையே சாரும். அவரே நாயன்மார்களிலே காலத்தல் மூத்தவர். அதனாற்றான் அவரியற்றிய இரு பதிகங்கள் மூத்த திருப்பதிகங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. அம்மையார் தாம் இயற்றிய திருஇரட்டை மணிமாலையில் தான் புண்ணியம் செய்ததால் பொய் நெறிகளாகிய பௌத்தம், சமணம் போன்ற வழிகளில் போகாது ஐந்தெழுத்து தன்னுடன் சேர்ந்து கொண்டது என்பதை

புண்ணியங்கள் செய்தனவும் பொய்நெறிக்கட் சாராமே

எண்ணியோரைந்தும் இசைந்தனவால்

- (தி.முறை: 11: 3: 16)

எனச் சுட்டுகிறார். மற்றவர்களைப் பார்த்து பிறவிதோறும் வரும் துன்பக் கடலில் வீழாமல் இன்பமடைய விரும்புவோர் சிவனை வழிபடுங்கள் என அழைத்தும் இருக்கிறார்.

கீழாயின துன்பவெள்ளக் கடல்தள்ளி உள்ளூறப்போய்

வீழாது இருந்தின்பம் வேண்டும் என்பீர் விரவார்புரங்கள்

பாழாயிடக்கண்ட கண்டன் எண்தோளன் பைம்பொற்கழலே

தாழாது இறைஞ்சிப் பணிந்து பன்னாளும் தலைநின்மினே

- (தி.முறை: 11: 3: 9)

அத்துடன் சைவசமயத்தவரைப் பார்த்து, ‘சைவநெறியைப் பின்பற்றி சிவனின் பேரருளைப் பெறுவதற்காக அந்தச் சிவன் எங்கே இருக்கிறான்? என்று  கேட்கிறீர்கள். இங்கே என் போன்றவர்களின் சிந்தையிலும் இருக்கின்றான். எளிதாக அவனைக் காணலாம்என்பதை

பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்

பிரானவன்தன் பேரருளே வேண்டி - பிரானவனை

எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்

இங்குற்றான் காண்பார்க்கு எளிது

- (தி.முறை: 11: 4: 45)

என்றும்பணமிருந்தும் எதையும் எவர்க்கும் கொடுக்காத ஏழைகளே! அறிவில்லாதவர்களே! அந்தோ! சிவனை மனதினுள் நினைந்து அந்த எண்ணத்துடன் வாழும் திறமை இருக்கிறதே! இது அல்லவா! மிக எளிமையானதுஎன அவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதியில் கூறியுள்ளார்.

எளியது இதுவன்றோ ஏழைகாள் யாதும்

அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற்று

எந்தைஅராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த

சிந்தையராய் வாழும் திறம்

- (தி.முறை: 11: 4: 46)

இவ்வளவு அற்புதமாக சைவசமயத்தின் உட்கருத்தை கோபத்துடன் ! !! எனக்கத்தி ஓலமிட்டுச் சொன்னவர்கள் காரைக்கால் அம்மையாரைவிட எவராவது இருக்கிறார்களா? 

இந்த சிந்தையராய் வாழும் திறமையை இன்றைய சைவசமயப் பெண்களில் எத்தனை பேர் அறிவார்கள்? அறிந்திருந்தால் கோயில் உண்டியல்களை நிரப்பி, குருக்கள்மார், சுவாமிமார் கால்களில் வீழ்ந்து வணங்குவார்களா? வருங்கால இளம் சந்ததியினரையும் பாழாக்குவதை உணர்வார்களா? இவற்றை எப்போது நிறுத்துவார்கள்? கோயில் தர்மகர்த்தாக்கள் கோயில் வாசல்களில் இவ்விரு பாடல்களையும் எழுதி வைப்பார்களா? பூனைக்கு மணிகட்டுவது யார்? எது சரி, எது பிழை என்பதைத் தெரியாது செய்வோரை நெறிப்படுத்த வேண்டும் என்பதற்கே இதனைக் கூறுகிறேன். சிந்தனை செய்தால் உண்மை விளங்கும்.


உலகில் மூன்று வயதில் பாடல் இயற்றிய புகழாளர் திருஞானசம்பந்தக் குழந்தையே. குழந்தைப் பருவம் ஓர் அற்புதமான பருவம். சூதுவாது தெரியாத பருவம். எதை எப்படிக் கண்டதோ அதை அப்படியே சொல்லும் பருவமது. அதனால் திருஞானசம்பந்தக் குழந்தை தான் சென்ற ஊர்பற்றிய வரலாற்று உண்மைகளை தாம் பாடிய பதிகங்களில் பதித்து வைத்துள்ளது. எனவே அன்றைய சைவசமயப் பெண்களின் உயர்நிலையை ஞானக் குழந்தை சொல்வதைக் கொண்டு பார்ப்போமா?


சைவசமயம் நிலைகுலைந்து நின்ற காலத்தில் (கி பி 630) ஞானக் குழந்தை சிறுவனாக பூம்பாவையை உயிரெழப் பாடிய பதிகத்தில் ஐப்பசி ஓணம், கார்த்திகை விளக்கிடு, மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய ஆறு விழாக்களையும் பூசையுடன் பெண்கள் செய்ததைக் கூறுவதைக் காணலாம்.

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்

கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்

துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்

- (தி.முறை: 2: 46: 2)

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்

கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்

நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்

தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்

- (தி.முறை: 2: 46: 3)

இவ்விரு தேவாரத்திலும் மடநல்லார் கைப்பயந்த நீற்றான், கைப்பூசு நீற்றான் என பெண்களின் கையால் திருநீறு பூசப்பெற்றவமன் (பயந்த - பெற்ற) கபாலீச்சரச்சிவன் என்பதை மிகநெருங்கி நின்று படமெடுத்துக் காட்டுகிறார். இன்று கபாலீச்சரரைத் தொட்டு திருநீறுபூசவும் பூசைசெய்யவும் எந்தப் பெண்ணால் முடியும்?


திருமணங்களை சைவசமயச் சடங்குகள் என்றே நாம் கருதுகிறோம். இங்கு நடைபெறும் திருமணங்களில் எத்தனை எத்தனை மாற்றங்கள்? இவை திருமணத்துக்குத் திருமணம் ஐயருக்கு ஐயர் மாறுபடுகின்றன. திருமணங்கள் ஆகமவிதிப்படி நடக்கின்றன என்கிறார்களே! அப்படியாயின் ஏன் இந்த விதிகள் மாறுபடுகின்றன? எம் திருமணங்களில் கண்டிராத சடங்குகளை எமது பிள்ளைகளின் திருமணங்களில் காணுகிறோம்.


அன்று வாழ்ந்த சைவசமயத்தவர் யாரைக் கொண்டு திருமணம் செய்வித்தனர் என்பதை மூன்றாம் திருமுறையின் திருவேதிக்குடி பதிகத்திலும் திருநல்லூர்பெருமணப் பதிகத்திலும் ஞானக்குழந்தை குறிப்பிடுவதைப் பாருங்கள்.

கன்னியரொடு ஆடவர்கள் மாமணம்

  விரும்பி அருமங்கலம் மிக

மின்னியலும் நுண்ணிடை நன் மங்கையர்

  இயற்றுபதி வேதிக்குடி  

                                                        - (தி.முறை: 3: 78: 7)


தருமணல் ஓதம்சேர் தண்கடல் நித்திலம்

  பருமணலாகக் கொண்டு பாவை நல்லார்கள்

வருமணம் கூட்டி மணம் செயு நல்லூர்  

                                                        - (தி.முறை: 3: 125: 2)

கன்னியரும் ஆடவரும் காதலித்து திருமணம் செய்ய விரும்பி திருமணம் கூடி வரும் பொழுது மின்னல் போன்ற இடையுடைய பெண்கள் அதனைச் செய்து வைக்கின்ற ஊர் என்றும் கடல் முத்துக்களை மணல் போல் பரப்பி திருமணத்தை நல்ல பெண்கள் செய்து வைக்கும் நல்லூர் எனவும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். திருஞானசம்பந்தரின் திருமணத்தின் போது பாடப்பட்டதே திருநல்லூர் பெருமணப்பதிகம். அவரது திருமணத்தையும் பெண்களே நடத்தி வைத்திருப்பர்.


சங்ககாலத்தில் இருந்தே திருமணத்தை பெண்களே செய்து வைத்தனர். கி மு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நல்ஆவூர்க்கிழார் சங்கத்தமிழ்ப் புலவர் அகநானூற்றில்

“…………………….முது செம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்

புதல்வர் பயந்த திதலையவ் வயிற்று

வாலிழை மகளிர் நால்வர் கூடி…..

வதுவை நன்மணம் கழித்த பின் - (அகம்:86 :9 - 17)

என திருமணத்தை பெண்கள் செய்து வைத்ததை விரிவாகக் காட்டுகிறார். அந்த நல்ஆவூர்க்கிழார் வாழ்ந்த ஆவூரைப் பாடும் ஞானக்குழந்தை

செறிகொள்மாடம் சுற்றிய வாசலின் மாதர்

  விழாச் சொற்கவிபாட நிதானம் நல்கப்

பற்றிய கையினர் வாழும் ஆவூர்  

                                                         - (தி.முறை: 1: 8: 6)

கோலவிழவின் அரங்கது ஏறிக்

  கொடியிடை மாதர்கள் மைந்தரொடும்

பாலெனவே மொழிந்து ஏத்தும் ஆவூர்  

                                                        - (தி.முறை: 1: 8: 9)


கவிதைகளைப் பாடும் பெண்களுக்குப் பரிசளிக்க பொன்னைக் கையில் வைத்திருப்போர் வாழும் ஆவூர் எனவும் அழகான விழா அரங்கில் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து பாடினார்கள் எனவும் புகழ்வதால் ஆவூர்ப் பெண்கள் கல்வியறிவு உடையவர்களாக அக்காலத்தில் வாழ்ந்திருந்தமை தெரிகிறது.


இவை மட்டுமல்ல வேறு நாடுகளில் இருந்து வந்த ஆண்களுக்கு திருமறைக் காட்டுப் பெண்கள் தமிழ் கற்றுக் கொடுத்ததைச் சொல்கிறார்.

ஊறுபொருளின் தமிழ் இயற்கிளவி

  தேருமட மாதர் உடனார்

வேறுதிசை ஆடவர்கள் கூறஇசை

  தேரும் எழில் வேதவனமே  

                                                        - (தி.முறை: 3: 76: 4)


திருமுதுகுன்றத்தில் பெண்கள் குறிஞ்சிப்பண்பாடி முருகனின் பெருமைகளைச் சொன்னார்கள் என்கிறார்.

கருங்குழல் மடவார்கடி குறிஞ்சியது பாடி

முருகனது பெருமை பகர் முதுகுன்று   

                                                                    - (தி.முறை: 1:12: 7)

திருஞானசம்பந்தக் குழந்தை இடும்பாவனப் பெண்கள் பற்றிச் சொல்லும் போது இவற்றை விட ஒருபடி மேலே சென்று உலகத்தவர் நலம் விரும்பும் பெண்கள் என்று சொன்ன அந்த வரலாற்று வரிகளைப் பார்ப்போமா? 

“…………….. உலகத்தவர் நலம்ஆர்

கோலமிகு மலர்மென் முலை

  மடவார் மிகு குன்றில்"     

                                                       - (தி.முறை: 1:17: 3)


இன்றைய பெண்களாகிய நாமும் அரங்குகளில் ஏறிப் பேசுகிறோம் பாடுகிறோம் ஆனால் இன்றைய சைவசமயப் பெண்களில் எத்தனை பேர் உலக நலன் கருதிப் பேசுகிறோம்? அன்றைய சைவசமயப் பெண்கள் வாழ்ந்த உயர்நிலை என்ன? இன்றைய பெண்களின் நிலை என்ன? நாம் நம்மை வளர்த்துக் கொள்ள நிறையவே இடம் இருக்கிறது.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment