இவ்வுலகம் முழுவதும் வாழும் எம்தமிழ் அன்பர்கள் அனைவர்க்கும் எனது இனிய வேண்டுகோள்!
இன்று உலகின் பேசு பொருளாக திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இருக்கிறது. திருக்குறள் ஈராயிர ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. ஈராயிர ஆண்டுகள் கடந்தும் தமிழ் அன்னையின் இளமையையும் இனிமையையும் பொன்போல் காத்து வைத்திருக்கிறது. மனிதவாழ்வியலை நெறிப்படுத்தும் ஒரேயோர் உலகநூல் திருக்குறள் எனின் அது மிகையாகாது. உலக மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்பு எத்தனை மொழிகளில் உள்ளனவோ அவற்றை ‘மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகத்தில்’ வைப்பதற்கு உள்ளனர். அதற்காக உங்கள் உதவியை நாடி நிற்கிறேன்.
ஈராயிர ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்து பிரான்ஸின் தொடர்வண்டியில் காட்சிப் படுத்தியுள்ளதை மேலேயுள்ள படம் காட்டுகிறது. எந்த அளவிற்கு French மொழிபெயர்ப்பு சரி என்பது எனக்குத் தெரியாது. அக்குறள் காதலன் ஒருவனின் மனநிலையை எடுத்துச் சொல்கிறது.
“மாதர் முகம்போல ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி” - (குறள்: 112: 8)
ஒரு காதலன் நிலவைப் பார்த்து, ‘காதலியின் முகம் போல அழகுமிளிர நீயும் இருந்தால் என் காதலை அடைவாய்’ எனக் கேலி செய்கிறான். சந்திரனை விடவும் காதலியின்[வாசுகியின்] முகம் மிகவும் ஒளியுள்ளது என்பது அவனது [திருவள்ளுவரின்] எண்ணம் போலும்.
வலைத் தளங்களில் தேடியதில் ‘உலகில் உள்ள 120 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளன’ என ஒரு வலைத்தளம் சொல்கிறது. அவை என்னென்ன மொழிகள் என்பதை அது சொல்லவில்லை.
திருவள்ளுவரின் ஈராயிரமாண்டு விழாவை பண்டிதர் கா போ இரத்தினம் எம் ஏ, பி.ஒ.எல், பண்டிதர் மு ஆறுமுகன் இருவரும் முன்னின்று கிளிநொச்சியில் 1969ல் நடத்தினர்.
திருவள்ளுவரின் ஈராயிர ஆண்டு விழா 1969ல் கிளிநொச்சியில் நடந்தது. அதற்காக நடைபெற்ற வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான பேச்சுப் போட்டியில் மத்திய பிரிவில் இராமநாதன் கல்லூரிக்காகக் கலந்து கொண்டேன். எனக்கு முதற்பரிசு கிடைத்தது. ஈராயிர ஆண்டு விழாவில் திருக்குறள் புத்தகம் ஒன்றைப் பரிசாகப் பெற்றேன். அது அந்நாளைய ஆங்கில - தமிழ் Lifco dictionary போல நீல நிறத்தில் ஆனால் அதைவிடத் தடிப்பாக இருந்தது. அப்புத்தகத்தில் ஐந்து மொழிகளில் திருக்குறளும் விளக்கமும் இருந்தன.1969ம் ஆண்டுகளுக்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட நூல்கள் இன்றைய உலகில் தேவையற்ற குப்பையே. இந்நூல் இந்தியாவில் அன்றேல் மலேசியாவில் அச்சிடப்பட்டிருக்கலாம்.
அதில் 84 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் இருப்பதாக எழுதியிருந்தது. அம்மொழிபெயர்ப்புகள் எந்தெந்த மொழிகள்? திருக்குறள் முழுவதுமா? அன்றேல் சிலபகுதியா? என்பவற்றையும் சொல்லவில்லை. எனவே 84 மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் 1969ல் இருந்திருந்தால் இன்று கூடுதலாக இருக்க வேண்டும். ஆனால் நான் தேடியதில் 2021 ஆண்டுவரை பகுதியாகவும் முழுவதுமாகச் சேர்த்து திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் 47 மொழிகளில் இருப்பதை அறிந்தேன். அதனைக் கீழே இணைத்துள்ளேன்.
திருக்குறளை உலகமொழிகளில் முதலில் மொழிபெயர்த்தோர்
எண் | மொழி | மொழிபெயர்த்தவர் | மொழிபெயர்த்த ஆண்டு |
1 | Malayalam | ———— | 1595 |
2 | Sanskrit | Sri Chakrapani Iyer | 18th century |
3 | Latin | Constanzo Beschi (veeramaamunivar) | 1730 |
4 | French | Jacolliot Louis | 1767 |
5 | English | Nathaniel Edward Kindersley | 1794 |
6 | German | August Friederich Caemmerer | 1803 |
7 | Telugu | Sri Vidyananda Swami | 1877 |
8 | Kannada | R Narasimhachar | 1910 |
9 | Arabic | A M Ashame D Zubair | 1917 |
10 | Hindi | Khenand Rakar | 1924 |
10 | Marathi | Sane Guruji | 1930 |
11 | Gujarati | Najuklal Choksi | 1931 |
12 | Bengali | Nalini Mohan, Sanjal | 1939 |
13 | Czeech | Kamil V, Zvelebil | 1952 - 1954 |
14 | Polish | Umadevi, Wandy Dynowskiej | 1958 |
15 | Sinhalise | Govokgado Misihamy | 1961 |
16 | Russian | J J Glazov and A Krishnamurthi | 1963 |
17 | Burmese | U Myo Thant | 1964 |
18 | Dutch | D Kat | 1964 |
19 | Fijian | S L Berwick | 1964 |
20 | Malay | Ramily Bin Thakir | 1964 |
21 | Urdu | Muhamad Yusuf Kohan | 1966 |
22 | Chinese | Cheng xi | 1967 |
23 | Spanish | G Arul | 1968 |
24 | Swedish | Frykholm Yngve | 1971 |
25 | Finnish | Penthi Aalto | 1972 |
26 | Vaagri Booli | Kittu Sironmani | 1976 |
27 | Odia | Chittaranjan Das | 1978 |
28 | Saurashtra | Sankhu Ram | 1980 |
29 | Japanese | Shuzo Matsunaga | 1981 |
30 | Korean | Shuzo Matsunaga | 1981 |
31 | Rajasthani | Kamala Gurg | 1982 |
32 | Panjabi | Ram Murti DSharma | 1983 |
33 | Italian | Antonio Sorrentino | 1986 |
34 | Garo | A Antoni Selvadoss | 2000 |
35 | Konkani | Narayana Purushothama Mallaya | 2002 |
36 | Creole | Rama Valayden | 2007 |
37 | Thai | M Rajaram | 2009 |
38 | Indonesian | A S Kobalan | 2012 |
39 | Manipuri | Soibam Rebika Devi | 2014 |
40 | Mandarin ( Chinese) | Yu Hsi | 2014 |
41 | Norwegian | Kevin Raja, Kowsihaa | 2017 |
42 | Danish | Marianne Steen Isak | 2021 |
43 | Santali | Rev. Fr. Richard V Joe | ———— |
44 | Greek | ————— | ———— |
45 | Potuguese | ————— | ———— |
46 | Hungarian (Magyar) | —————- | ———— |
47 | Khmer (Cambodian) | —————— | ———— |
மதக்கொள்கைகளை கூறும் இந்துமத கீதை - 75 மொழிகளில், புத்தமத திரிபீடகம் - 70 மொழிகளில், கிறிஸ்தவமத பைபில் - 704 மொழிகளில், இஸ்லாமியமத குரான் - 114 மொழிகளில் இன்று மொழிபெயர்ப்புகள் உள்ளன. இவையாவும் பகுதியாகவும் முழுவதுமாகச் சேர்த்தே மொழிகளைக் கூறுகின்றன.
ஆனால் திருக்குறள் இன மொழி மதங்கடந்த நூல். தமிழர் வாழ்வியலை வளப்படுத்தும் பேராறு. மனிதப் பண்பை, ஒழுக்கத்தை, கல்வியை, செல்வத்தை, காதலை, இன்பத்தை, கோபத்தை, நீதியை, அறத்தை, நாட்டை, பொருளாதாரத்தை, அரசியலை, உழவை, மருந்தை மிகமிகக் குறுக்கிச் சொல்லி விளங்க வைக்கிறது. மனிதரை நனி சிறந்த மனிதராக வாழச்செய்யும் தன்னேரில்லாத் தமிழ் நூலுக்கு எத்தனை எத்தனை மொழிகளில் மொழிபெயர்ப்புகள் இருந்தன, இருக்கின்றன என்பவற்றை அறியவேண்டிய கடமை எமக்கு இருக்கிறது அல்லவா?
எனவே உலகம் தழுவி வாழும் தமிழ் நெஞ்சங்களே! நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகள் இருந்தனவா? இருக்கின்றனவா? எங்கே வாங்கலாம்? யார் மொழிபெயர்த்தது? எப்போது? என்பவற்றை அறியத் தாருங்கள். மேலே உள்ள பட்டியல் நீண்டு செல்ல அவை உதவும். திருக்குறள் மேல் பற்றுள்ள தமிழ் அன்பர்கள் இவற்றை தந்து உதவுவார்கள் என நம்புகிறேன்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
இதன் கீழே உள்ள Commentsல் உங்கள் பதிலைத் தாருங்கள்.
No comments:
Post a Comment