Friday, 1 July 2022

சங்கத் தமிழ்ச்சொற்களுக்கு ஏற்ற ஆங்கிலச்சொற்கள் - 1

1.  பனிப்பாவை  ·  snow sculpture

அகநானூறு: 5

“ஓவச்செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றிபாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடுமணியுரு இழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே ”

காதலன் ஒருவன் தனது நண்பணிடம் பனிநீர் உருகி பனிப்பாவையை அழித்தது போல காதலியின் அழகிய தோற்றம்  பொலிவிழந்ததைக் கண்டு பொருள் தேடப்போகாது நின்றேன் என்கின்றான்.



2.  தண்வரல்  ·  gentle breeze

அகநானூறு: 304

"தண்வரல் ஆலியொடு"

தண்மையான குளிர்காற்றே தண்வரல். 






3.   ஐதுவரல்  ·  breeze

அகநானூறு - 102

"ஐதுவரல் அசைவளி ஆற்றக் கைபெயரா

ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி

பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாட”


கொடிச்சி ஒருத்தி தலைமுடியை கைகளால் கோதி மென்மையாக வீசிய காற்றில்  உலர்த்தியபடி குறிஞ்சிபண்ணைப் பாடினாளாம். இவ்விடத்தில் ஐதுவரல் மென்மையாக வீசிய காற்றைக் குறிக்கிறது.


4.  பனிப்புகை/புகை  .   fog/smog

கலித்தொகை: 31: 19

புகையெனெப் புதல் சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா”

புதரைச்சூழ்ந்த பனிப்புகை பூக்களுக்கு வெண்பனியை பொதியாக வைக்கவில்லை என்கிறது.




5.   அழிதுளி  ·  sleet

 அகநானூறு: 304                               “பரூஉப் பெயல் அழிதுளி தலைஇ”     பருவகாலத்தில் பெய்யும் அழிதுளி பெய்யத் தொடங்கியதாம். 

வீழ்ந்ததும் உடனே அழிந்து போவது எனும் கருத்தில் அழிதுளி என்றனர் போலும்.





6.  வெண்காழ் ஆலி  ·  snow  pellets

அகம்: 309

“களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து அரலை வெண்காழ் ஆலி”

களிற்று யானை தன் முதுகை உராஞ்ச இலவமரப் பஞ்சுகள் விதையுடன் வீழ்வது போல வெண்காழ் ஆலிகள் வீழ்ந்தன. அவை இலவம்பஞ்சின் விதைகளின் அளவில் இருந்தனவாம்.



7.  முற்றிய கடும்பனி  ·  icicles

கலித்தொகை: 31

 “முகை வெண்பல் நுதி பொர முற்றிய கடும்பனி

வெண்பல்லின் கூர் போல உறைந்த கடும்பனி இருந்தது.   முற்றிய கடும்பனி வெண் பற்கள் போல் தெரிவதைப் படத்தில் பாருங்கள்.





8.  பனிக்கடு  ·  snow storm

குறுந்தொகை: 380

“யாங்குச் செய்வாம் கொல் தோழி

ஈர்ங் கயத்து துய்ம்மலருதிர

முன்னா தென்ப பனிக்கடு நாளே”

தோழி ஒருத்தி, "குளத்துப் பூக்கள் எல்லாம் உதிர வீசும் காற்றும் கடும் பனியுமான பனிக்கடு நாளில் எங்கே போகமுடியும்?" என்கிறாள்.


9.  சூர்பனி  ·  blizzard

அகநானூறு: 304

சூர்பனி பன்ன தண்வரல் ஆலியொடு”

உடலை நடுங்கச்செய்யும் குளிர் சூர்பனி







10.  தாமனை  ·  caravan 

வீரமாதேவி - நாட்குறிப்பு

“திருவுடைச் செல்வர் மனையுடன் ஏகும் தாமனை தாய மதகளிறு"

மதுரையை ஆண்ட மாறவர்மன் குலசேகர பாண்டியன் மகள் வீரமாதேவி.  அவள் மாலிக்கபூர் படைஎடுப்பின் போது இலங்கை வந்து புங்குடுதீவில் கோட்டை கட்டி வாழ்ந்தவள். அவளது நாட்குறிப்பில் செல்வந்தர்கள் குடும்பத்துடன் போகும் தாமனையை வலிமையான களிறு  இழுத்துச் சென்றதாகக் கூறுகிறாள். இலங்கையில் மட்டுமல்ல புங்குடுதீவிலும் தாமனையில் சென்றிருக்கிறார்கள்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment