Wednesday, 20 July 2022

சங்கத் தமிழ்ச்சொற்களுக்கு ஏற்ற ஆங்கிலச்சொற்கள் - 2




1.  புட்டகம் ·  swimwear


             


பரிபாடல்: 12

“புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்”

என சங்ககால பெண்கள் அணிந்த நீச்சல் உடையை பரிபாடல் சொல்கிறது. அது புட்டகம் என்ற நீச்சல் உடையை அணிய பொருத்தமான உடல் இருக்க வேண்டும் என்பதையும் மெல்லக் கோடிட்டுக் காட்டுகிறது.










2.  நாட்புரத்தல்  ·  day care



குறள்: 780

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து" எம்மைக் காத்து வளர்த்தோரே புரந்தார். புரத்தல் - காத்தல். தமிழில் நாள் என்னும் சொல் ஒரு நாளையும் பகலையும் குறிப்பதால் நாட்புரத்தல் என்ற சொல்லை உருவாக்கினேன்.







3. அற்றது  ·  digest




குறள்: 942

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு

அருந்தியது அற்றது போற்றி உணின்                                           

நாம் உண்ட உணவு குடலினுள் அற்றுப்போனதை உணர்ந்து மீண்டும் உண்டால் எம் உடலுக்கு மருந்தே வேண்டியதில்லை. அற்றது என்பது இக்குறளின்படி உணவு அற்று போதலைக் குறிக்கிறது.








4.  ஈரணி  ·  bikini (two piece swimwear)




பரிபாடல்: 7

“தையல் மகளிர் ஈரணி புலர்தர”


இளம் பெண்கள் உடுத்திருந்த நீச்சல் உடையான 'ஈரணி' காய்ந்தது என இப்பரிபாடல் அடி சொல்கிறது.









5.  வம்பு  ·  bra




அகநானூறு: 11

வம்பு விரித்தன்ன பொங்குமணல் கான்யாற்று”       - ஔவையார்

காட்டு ஆற்றங்கரை மணற் திட்டுக்கள் பெண்கள் அணிந்த வம்பு விரித்து வைத்தது போல் இருந்தனவாம். அதாவது bra வைக் கழட்டி வைத்தது போல் இருந்தன. பண்டைத் தமிழ்ப் பெண்களின் உடையின்  வரலாற்றை ஔவையாரே கூறியிருப்பது போற்றுதலுக்கு உரியதாகும்.





6.  வட்டுடை  ·  tunic




சீவகதசிந்தாமணி:

வட்டுடைப் பொலிந்த தானை வள்ளல்”

பண்டைய போர்வீரர்கள் முழங்கால் வரை உடுத்த உடை வட்டுடையாகும்.  அது போன்ற உடையை உறோமரும் உடுத்தனர். இடையில் வாரால் கட்டிக்கொள்வர். பசுநிரைகளைச் சீவகன் மீட்டுக்கொடுத்ததால் “வட்டுடைப் பொலிந்த தானை வள்ளல்” எனப் போற்றப்பட்டான். 












7. மிதியல்  ·  clogs




பதிற்றுப்பத்து: 3

மிதியல் செருப்பில் பூழியர் கோவே”


மரத்தால் செய்த காலணியே மிதியல் செருப்பு.

















8.  தொடுதோல்  ·  sandals



அகநானூறு: 368

தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்"

தோலை தொடுத்துக் கட்டி காலில் அணிவதால் தொடுதோல் என்று பெயர்.












9.  அடிபுதை அரணம்  · boots



 பெரும்பாணாற்றுப்படை: 69

அடிபுதை அரணம் எய்தி படம் புக்கு”

கால்அடி புதையும்படி காலை அரண் செய்வதால் அடிபுதை அரணம் என்றனர்.












10.  அரணம்  ·  shoes


 களவழி நாற்பது: 9

“................................... குறைத்திட்ட

காலார் சோடு அற்ற கழற்கால்"என்பதற்கு உரையாசிரியர் ‘வெட்டுப்பட்ட காலுக்கு இட்ட அரணத்தோடு அறுபட்ட வீரக்கழல் அணிந்த கால்கள்' என எழுதியுள்ளார்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment