குறள்:
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” - 1031
பொருள்:
சுற்றிச் சுழன்று பிறதொழில்களைச் செய்தபோதும் உழவுத் தொழிலின் பின்னே தான் இவ்உலகம் நிற்கின்றது. அதனால் மிக்க துன்பப்பட்டு உழவுத்தொழிலைச் செய்தாலும் உழவுத் தொழிலே தலை சிறந்தது.
விளக்கம்:
உழவு என்னும் அதிகாரத்தில் உள்ள முதலாவது திருக்குறள் இது. நிலத்தை உழவு செய்து பயிர் செய்வதால் உழவுத்தொழிலை உழவு என்பர். மற்றைய தொழில்களைவிட உழவுத்தொழில் ஏன் தலை சிறந்தது என்பதை இக்குறள் எடுத்துச் சொல்கிறது.
மனிதன் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிகொள்வதற்காக சுழன்று திரிகிறான். நல்ல தொழிலிலைத் தேடி அலைந்து, தொழில் கிடைத்ததும் அதனைச் செய்வதற்காக வேலைக்கும் வீட்டிற்குமாக மீண்டும் மீண்டும் சுழல்கிறான். அப்படி வேலை வேலை என்று சுழன்றாலும் உலகோர் யாவரும் உணவிற்காக உழவரின் பின்னால் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
நிலத்தை உழும் கலப்பையை ஏர் எனச்சொல்வர். ஏரால் நிலத்தை உழுது மண்ணைப் பண்படுத்தி பயிர் செய்வதாலேயே உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன. மாடு, ஆடு போன்ற விலங்குகளையும் கோழி, வாத்து போன்ற பறவைகளையும் வளர்த்து, பால், முட்டை, இறைச்சி போன்ற உணவுப்பொருட்களையும் உழவர்களே தருகின்றனர். அவர்கள் எமது உடைக்கு வேண்டிய பருத்தி, பட்டு போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர். உழவர்களிடம் பொருட்களை விலைக்கு வாங்கி மற்றைய வியாபாரிகள் விற்று பணத்தைப் பெருக்குகிறார்கள். உலகில் பலவகைப்பட்ட தொழில் தோன்ற உழவர்கள் காரணமாக இருக்கின்றனர்.
அரசாட்சி செய்வோரின் மாபெரும் சக்திகளாய் பெரும் வீரர்களாய் போர்முனையில் நின்று போர் புரிவோருக்கும் உணவு கிடைக்க ஏர்முனையால் நிலத்தை உழுதாக வேண்டும். ஏர்முனை மழுங்கின் போர்முனை அழுந்தும். உலகின் எந்த ஓர் அரசாட்சியும் நிலைத்து நிற்காது.
இயற்கையை அரவணைத்து உழவுத்தொழிலைப் போற்றி வாழ்ந்த மனிதன் எப்போ பண்ட மாற்றைக் கைவிட்டு பண மாற்றை உண்டாக்கிக் கொண்டானோ அன்றே உழவுத்தொழிலுக்கு சாவுமணி அடித்துவிட்டான். அதனால் உழவுத்தொழில் துன்பத்தில் உழழும் தொழிலாய் மாறிவிட்டது.
எனினும் இந்த உலகம் ஏரினால் உழுது விளையும் பொருட்களை எதிர்ர்த்து நிற்பதால் உழவர்கள் உடல் வருந்தி உழைத்தாலும் உழவுத்தொழிலே எல்லாத் தொழில்களையும் விடத் தலைசிறந்ததாகும்.
எனினும் இந்த உலகம் ஏரினால் உழுது விளையும் பொருட்களை எதிர்ர்த்து நிற்பதால் உழவர்கள் உடல் வருந்தி உழைத்தாலும் உழவுத்தொழிலே எல்லாத் தொழில்களையும் விடத் தலைசிறந்ததாகும்.
உழவுத்தொழிலுக்கு எல்லோரும் மதிப்பளிப்போம்.
ReplyDelete