Saturday, 7 January 2017

ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ!

பண்டடைக் காலத்தில் தில்லைவனம் இருந்த இடம் தென்புலியூர் என அழைக்கப்பட்டது. வனத்தில் புலி வாழ்வது இயற்கையானது. எனவே தில்லைவனத்தில் புலி வாழாமலா இருக்கும்? அங்கே ஒரு வேங்கை வாழ்ந்தது. வரிப்புலியை வேங்கை என்பர். நல்ல பசியோடு புறப்பட்ட வேங்கை, ஆட்டைக் கண்டால்  அதனைவிட்டு விலகிப்போகுமா? இல்லையே! அந்தத் தென்புலியூரில் இருந்த அம்பலத்தில் நடராஜர் நடனம் புரிந்தார். அதனால் அரசர்கள் அதனைப் பொன்னம்பலமாக மாற்றினர். அதுவே இன்றைய சிதம்பரம். அம்பலத்தில் சிவன் நடனம் ஆடுவதால் அவரை அம்பலவர் என்றும் அழைப்பர்.

இரட்டைப்புலவர்கள் பொன்னப்பலத்து நடராஜரை வணங்க சிதம்பரம் கோயிலுக்குச் சென்றனர். அங்கே நடராஜரின் அருகே புலி இருப்பதை முடவர் பார்த்தார். உடனே
“தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுங்காண் அம்மானை” எனப்பாடினார். 

அதனைக் கேட்ட குருடர்
“வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுமேயாம் ஆகில்
அம்பலத்தே விட்டே அகலாதோ அம்மானை” 
எனக் கேள்வி கேட்க

முடவர்
“ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை” 
என்றார்.
தஞ்சைப் பெருங்கோயில் ஓவியம்
அம்மானை என்பது பெண்கள் பாடிப் பந்தடித்து விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டை முன்று பெண்கள் சேர்ந்து விளையாடுவர். ஒருவர் ஓரு செய்தியைச் சொல்லி அம்மானை என்று கூறிப் பந்தை அடிக்க இரண்டாமவர் அச்செய்தியில் கேள்வி கேட்டு அம்மானை என்று அப்பந்தை அடிக்க மூன்றாமவர் பதிலைச் சொல்லி அம்மானை என்றபடி பந்தை அடிக்க அது புதுப்புது செய்தியுடன் தொடர்ந்து பந்து கீழே விழும்வரை தொடரும்.

முடவர் சொன்ன செய்தி: 
தென்புலியூரில் இருக்கும் அம்பலவரின் தில்லைச் சிதம்பரத்தில் கொடும்புலி ஒன்று எந்நாளும் அமர்ந்திருக்கிறது. 

குருடர் கேட்ட கேள்வி:
கொடும்புலி ஒன்று அமர்ந்திருக்குமே ஆனால் அது அம்பலத்தை விட்டு அகன்று போகமாட்டாதா?

முடவரின் பதில்:
வரிப்புலி தன் உணவான ஆட்டை விட்டு அகன்று போகுமா! அதனாலேயே அது அங்கே அமர்ந்து இருக்கிறது.

இரட்டைப்புலவர்கள் பாடிய அம்மானைப்பாடலின் முழுவடிவம்: 
“தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுங்காண் அம்மானை 
வெம்புலி ஒன்று எந்நாளும் மேவுமேயாம் ஆகில்
அம்பலத்தே விட்டே அகலாதோ அம்மானை
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை”
இப்பாடலின் உண்மையான உட்கருத்தைப் பார்ப்போமா? ‘தென்புலியூர் அம்பலவரின் தில்லைச் சிதம்பரத்தில் புலிப்பாத முனிவர் [வியாக்ரபாதர்] எப்போதும் அமர்ந்திருக்கிறார்’. ‘எந்நாளும் அமர்ந்திருக்கும் புலிப்பாத முனிவர் அம்பலத்தை விட்டு அகலமாட்டாரோ?’ ‘நடராஜரின் ஆட்டத்தைப் பார்ப்பதைவிட்டு புலிப்பாத முனிவர் போவாரா?’ என இந்த அம்மானைப் பாடலில் இரட்டைப் புலவர்கள் புலிப்பாத முனிவரைப் பற்றிக்கூறியுள்ளனர். அம்மானைப் பாடல்கள் சிலேடையாக இரட்டைக் கருத்துத் தருவனவே.
இனிதே,
தமிழரசி.

1 comment:

  1. "நல்ல பசியோடு புறப்பட்ட வேங்கை,
    ஆட்டைக் கண்டால்
    அதனைவிட்டு விலகிப்போகுமா?" என
    ஆக்கிய பாவிளக்கம் அருமை
    பொருள் செறிந்த பாடலிது

    ReplyDelete