மனிதவாழ்வு மிகவும் சுவைமிக்கது. அன்பு, நட்பு, பகை, கோபம், இன்பம், துன்பம், பொறாமை, அறிவு, ஆற்றல் எனும் பல சுவைகளும் கலந்த கலவையே வாழ்க்கை. இந்தச்சுவைகளை எல்லாம் இனங்கண்டு பிரித்தெடுத்து நிறைந்த மனத்துடன் எப்படிச் சுவைப்பது? அதற்கு வழி இருக்கிறதா? ஆம் இருக்கிறது. எந்தச்சுவையை எப்படிச் சுவைத்தால் இன்பமாக வாழலாம் என்பதை முன்னோர்கள் தமது அநுபவ அறிவால் கூறியுள்ளனர்.
பாதைவழியே செல்லும் வண்டியின் சக்கரம் மேலும் கீழுமாக சுழன்று செல்லும். மனித வாழ்க்கைப் பாதையில் நாமும் வண்டிச்சக்கரம் போல் மேலும் கீழுமாகச் சுழன்று செல்கின்றோம். அந்தச் சுழற்சியிலும் மேடும் பள்ளமும், ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வந்த வண்ணமே இருக்கும். அதிலும் செல்வம், வறுமை இரண்டும் என்றும் நிலைத்து நிற்காது. ஆதலால் வாழ்க்கையில் பணத்தில் புகழில் ஏற்றம் வரும் நேரந்தொட்டு வாழ்வை எப்படிச் சுவைத்து வாழவேண்டும் என்பதை
“துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்” - நாலடியார்
என்று நாலடியார் கூறுகின்றது.
குற்றம்மில்லாத [துகள்தீர்] பெருஞ் செல்வம் உண்டான நேரம் [தோன்றியக்கால்] தொட்டு
எருமைக்கடா[பகடு] நடந்து உழுது விளைந்த உணவை[நடந்தகூழ்] பலரோடு[பல்லாரோடு] உண்க
வயிறுநிறைய[அகடுற] யாரிடத்தும்[யார்மாட்டும்] நில்லாது செல்வம்
வண்டிச்சக்கரம்[சகடக்கால்] போல வரும்.
பகடு நடந்த[எருமைக்கடா நடந்த]
கொலை, களவு, பொய், புரட்டு, அடுத்துக்கெடுத்தல், கைக்கூலி பெறுதல் போன்ற குற்றங்களைச் செய்யாது நேர்மையான உழைப்பால் பெருஞ்செல்வம் சேரத்தொடங்கும் பொழுதே உணவை உறவினர், நண்பர், விருந்தினர், வறியவர் முதலான பலரோடுங்கூடி வயிறு நிறைய உண்ணுங்கள். அந்தச் சுவைக்கு எதுவும் ஈடாகாது. ஏனெனில் செல்வமானது வண்டிச்சக்கரம் போல மேலும் கீழுமாக ஏறி இறங்கி ஒருவரிடமும் நில்லாது வந்து போகும்.
செல்வம் மட்டுமல்ல மனித வாழ்க்கையும் ஒரு வண்டிச்சக்கர வாழ்க்கை என்பதை உணர்ந்து, இருப்பதை பகிர்ந்துண்டு வாழ்ந்தால் மனிதவாழ்க்கை சுவைமிகுந்ததாக மிகமிக இனிமையாக இருக்கும்.
இனிதே,
தமிழரசி.
தமிழரசி.
No comments:
Post a Comment