Tuesday, 9 August 2016

பருத்தி வளர்த்த புங்குடுதீவு

பாரம் [பருத்திப்பூ]

“ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்”
எனச் சத்திமுற்றப்புலவர் சொன்னது போல் காட்டில் ஆடை இன்றி அலைந்தவன் மனிதன். பின்னர் தோலாடையும், பன்னாடையும் மரவுரியும் தளிராடையும் உடுத்துத் திரிந்தான். அப்படித்திரிந்த மனிதகுலத்தின் நாகரீக வளர்ச்சிக்குப் பண்டைத்தமிழினம் வழங்கிய பெரும் கொடை பருத்தியாகும்.

பண்டைத் தமிழர் இரண்டு விதமான பஞ்சுகளைப் பயன்படுத்தினர். ஒன்று பருத்திப் பஞ்சு மற்றது இலவம் பஞ்சு. பருத்தி பஞ்சு செடியில் காய்ப்பது. இலவம் பஞ்சு மரத்தில் காய்ப்பது. பருத்திப் பஞ்சைக் கொட்டைப் பஞ்சு என்றும் சொல்வர். பருத்திக் கொட்டையைப் பண்டைத் தமிழர் கொட்டை என்றே அழைத்தனர் போலும். ஏனெனில் மருத்துவ வாகடங்கள்[ஏடுகள்] எலும்புத் தேய்மானத்தை கொட்டைத் தைலம் போக்கும் என்கின்றன. அவை கொட்டைத் தைலம் என்று பருத்தி எண்ணெய்யைக் குறிக்கின்றன. பண்டை நாளில் எண்ணெய் [எள் + நெய் = எண்ணெய்] என்று நல்லெண்ணையை அழைத்தது போல கொட்டை என்று பருத்திக் கொட்டையை அழைத்தனர் எனக் கருதலாம். அதனால் அந்நியர் கொட்டைப் பஞ்சை கொட்டன் வூல் [cotton wool] என்றனர். [அரேபியர்கள் Al Qutun என்று கூற இன்று cotton ஆக நிற்கிறது].

பண்டைத்தமிழர் சிந்து வெளி நாகரீக காலத்திற்கு முன்பிருந்தே (ஆரியர் வருகைக்கு முன் இந்தியா முழுவதும் தமிலிகா[தமிழகம்] என அழைக்கப்பட்டது என்கின்றன பாளி நூல்கள்) பருத்தியாடை அணிந்து வருகின்றனர். கி மு 3500ல் சிந்து வெளியில் வாழ்ந்தவர்கள் அணிந்த ஒரு சதுர யார் பருத்தித் துணியின் எடை 4 ounces என்று Sir John Marshall [Vol.2: 586, 1931] கணித்துக் கூறியுள்ளார். ஐயாயிர வருடங்களுக்கு முன்பே பருத்தித்துணியை எவ்வளவு நுண்ணிய நூலால் நெய்திருக்கிறார்கள் என்பதை அத்துணி காட்டுகிறது.
இந்திரகோபம்

சங்க இலக்கியங்களும் மிக நுட்பமான துணிவகைகளைச் சொல்கின்றன. நூல் சென்ற வழியை அறியமுடியாத ஆடையை
“இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்”     - (மலைபடு: 561)
என மலைபடுகாடாம் சொல்ல, திருமுருகாற்றுப்படை இந்திரகோபம் பூச்சியைப் போன்ற நிறமும் மென்மையும்[welwet] உள்ள ஆடையைப் பூந்துகில் என்கின்றது.
“கோபத் தன்ன தோயாப் பூந்துகில்”             - (திருமுரு: 15)

பருத்தி நூலாலும் மயிராலும்[எலிமயிர்] பட்டு நூலாலும் நெய்து பல நூறு அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்ட நறுமணம் நிறைந்த[நறுமடி செறிந்த] துணிகள்[அறுவை] உள்ள கடைவீதியும் மதுரையில் இருந்ததை
“நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூறு அடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்”    - ( சிலம்பு: 14: 205 - 207)
என்று இளங்கோ அடிகள் குறிப்பிட்டுள்ளார். எப்படி துணிகளுக்கு நறுமணம் ஊட்டினர் என்பதை
“மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப” - (மதுரை.கா: 554)
மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் சொல்கிகிறார்.

அதிகமான் பெயர் பொறித்த மோதிரம் கி மு முதலாம் நூற்றாண்டு

கி மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவனாகக் கருதப்படும் அதிகமானை 
“பருத்திவேலிச் சீறூர் மன்னன்”        - (புறம்: 299: 1)
என பொன்முடியார் என்னும் சங்ககாலப் பெண்பாற்புலவர் கூறியுள்ளார். 

சங்ககாலப் பெண்கள் பருத்தியைப் பயிரிட்டு, அறுவடை செய்து மூட்டையாகக் கட்டிவைத்து, கொட்டைப்பஞ்சில் இருந்து பஞ்சைப் பிரித்தெடுத்து, நூல்நூற்று நெசவு செய்ததை சங்க இலக்கியங்கள் மிகத்தெளிவாகவே காட்டுகின்றன. பருத்தி பயிரிட்டு, நெசவு செய்த பெண்களை ‘பருத்திப் பெண்டு’ என அழைத்ததையும் சங்கப்புலவோர் பதிவு செய்துள்ளனர். அவை யாவும் சங்ககாலத்தில் நெசவுத்தொழில் சிறப்படைந்து இருந்ததையும், சங்க காலப் பெண்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு உழைத்ததையும் சொல்கின்றன.

நூல் நூற்கும் பெண்கள் இரவு நேரத்திலும் பஞ்சைப் புடைத்து சிறு தூறுகளைக் களைந்ததை 
“சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து”   - (புறம்: 326 : 4 - 5)
என்றும்
“பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன”     - (புறம்:125: 1)
எனக் கொட்டையை நீக்கி, மென்மையாக்கி பஞ்சு இழையைப் பிரித்து எடுத்ததை ‘பனுவல்’ எனவும் 

கோடை காலத்தில் விளைந்த பஞ்சை மூட்டை மூட்டையாக வீடு நிறைய அடுக்கி வைத்திருந்ததை 
“கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன”   - (புறம்: 393: 12 - 13)
என்றெல்லாம் புறநானூறு மெல்லப் படம் பிடித்துக் காட்ட, நற்றிணையும் துணையற்ற பெண்கள் பிரித்து எடுத்த பஞ்சு இழை மிக மெல்லிதாக இருந்ததை
“ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல்                       - (நற்றிணை: 353: 1 - 2)
என்றும், 
உருளையிடையே பஞ்சைஇட்டு மென்மமையாக்கல்

இரும்பு உருளையிடையே பஞ்சைஇட்டு மென்மையாக்கியதை
“எஃகு உறு பஞ்சு இற்று ஆகி”          - (நற்றிணை: 247: 4)
எனவும் 

“வில் எறி பஞ்சிபோல மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்” - (நற்றிணை: 299: 7 - 8)
காற்றடித்து கடல் அலையில் பொங்கி எழும் நீர்த்திவலைகள் கம்பியால் கட்டப்பட்ட வில்லால் அடித்து பச்சின் கொட்டைகளை நீக்கும் போது சிதறும் பஞ்சு போல இருக்கும் என்றும் கூறுகிறது.

பருத்தி ஆடைக்கு கஞ்சி[சோறு அமைவுற்ற நீர்] போட்டதை
“சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்” - (மதுரை.கா: 721)
மதுரைக் காஞ்சியும் சொல்கிறது.
Ptolemy's Taprobana [Ceylon) AD 130

இவ்வாறு எல்லாம் இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் வாழ்ந்த தமிழர் பருத்தி ஆடை நெய்து அணிந்ததைச் சங்க இலக்கியங்கள் சொல்கிகின்றன. இலங்கையில் வாழ்ந்த பண்டைத் தமிழர் என்ன செய்தனர் என்பதை மகாவம்சம் கோடிட்டு காட்டுகிறது. ‘கி மு 543ல் விஜயன் இலங்கையிலிருந்த தம்பபண்ணியில் [தாமிரபரணியில்] வந்து இறங்கிய போது இயக்கரின் தலைவியான குவேனி மரத்திற்குக் கீழே இருந்து நூல் நூற்றுக்கொண்டிருந்தாள்’ என்கிறது மகாவம்சம் [Mahavamsa, 07:11, 1959]. இலங்கை அரசாங்கம் அக்காட்சியை முத்திரையாக அடித்து 1956ல் வெளியிட்டது. அரசியல் காரணத்தால் அதனை மீளப்பெற்றுக் கொண்டது. எனினும் அம்முத்திரை உலகெங்கும் சென்றுவிட்டது. 
குவேனி நூல் நூற்றல் 

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் வாழ்ந்த நம் முன்னோர் 
[நம்முன்னோர் - இயக்கர் யார் என்பதை அறிய கீழே உள்ள linkஐ அழுத்திப் பார்க்கவும்.
பருத்தி வளர்த்து, பஞ்செடுத்து, நூல் நூற்று, ஆடை நெய்து உடுத்தனர் என்பதை மகாவம்சம் கூறுவதால் அறியலாம். இப்படி எல்லாம் நம்முன்னோர் பருத்தியில் இருந்து ஆடை நெய்து உடுத்த காலத்தில் மேலை நாட்டினர் பருத்தியைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. 

கி மு 484ல் பிறந்த கிரேக்க வரலாற்று ஆசிரியராகக் கருதப்படும் Herodotus இந்தியாவில் விளைந்த பருத்தியைப் பற்றி “The Indians have a wild- growing tree which instead of fruit produces a species of wool similar to that of sheep, but of finer and better quality.” என்று எழுதினார். [Cotton in the Ancient World - by H Wescher]
Vegetable Lamb [cotton wool]

கி பி 14ம் நூற்றாண்டில் Edward III அரசனின் காலத்தில் இந்தியாவுக்குச் சென்று வந்த Sir John Mandeville “There grew there[India] a wonderful tree which bore tiny lambs on the ends of its branches. These branches were so pliable that they bent down to allow the lambs to feed when they are hungry” என்று சொன்னான். 

இதிலிருந்து என்ன தெரிகிறது? 650 ஆண்டுகளுக்கு முன்பு[1357ல்] கூட ஆங்கிலேயர் பருத்தியை, பருத்தி ஆடையை அறிந்திருக்கவில்லை. அத்துடன் பருத்திச்செடியை அவர்கள் தாவர ஆடு [Vegetable Lamb] என்றே கருதினர். ஆனால் அதே ஆங்கிலேயர் ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர்[1882ல்] வடமாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் நம் முன்னோர் விளைவித்த உள்நாட்டுப் பருத்திக்கு அதிக வரியும் [நூல் இழை நீளம் குறைந்தது], அவர்கள் அறிமுகப்படுத்திய அமெரிக்க பருத்திக்கு குறைந்த வரியும் [நூல் இழை நீளம் கூடியது] எம்மிடமே எடுத்தனர். 

அதனால் பன்னெடுங்காலமாக நம் முன்னோர் கண்டறிந்த கருங்கண்ணி, வட்டக்குடலை போன்ற பல பருத்தி இனங்கள் பயிரிடுவார் இன்றி அழிந்து ஒழிந்து போயின. அவை நம் நாட்டு காலநிலைக்கு ஏற்றவாறு நோயின்றி மானாவாரியாக விளைந்த பருத்தி இனங்களாகும். ஆங்கிலேயர் இங்கு [Bolton, Manchester]  கட்டிய நெசவாலைகளுக்கு ஏற்ற நீண்ட இழைப் பருத்திக்காக செய்த அடக்கு முறைகளால் மென்மையான இழைகளையும் அதிக விளைச்சலையும் தரும் பருத்தி இனங்களை இந்த உலகத்திலிருந்தே அழித்தனர் என்பதே கசப்பான உண்மையாகும்.

‘பருத்தி வளர்த்த புங்குடுதீவு’ பற்றி சொல்லாமல் ஏதேதோ சொல்வதாக எண்ண வேண்டாம். நம் முன்னோர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்து வந்த பருத்தி வளர்ப்பு யாரால் எப்படி அழிந்தது என்பதைக் காட்டவே இவற்றை எழுதினேன். ஏழைகளே பருத்தி வளர்ப்பர் என்ற எண்ணத்தைப் போக்குவதோடு பருத்தி ஒரு பணம் காய்க்கும் செடி என்பதை எடுத்துக் காட்டவேண்டிய கடப்பாடும் இருக்கிறது.

அநுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளன் கி மு 161ல் இறந்த பொழுது புங்குடுதீவில் புத்த குருமார்கள் இருந்ததை மகாவம்சம் சொல்கிறது. வசப மன்னன் காலத்திலும் கி பி [67 - 111] புங்குடுதீவில் [Piyahgudipa] 12,000 புத்தகுருமார்கள் வாழ்ந்ததாக C W Nicholas [Journal of the Ceylon Branch of the Royal Asiatic Saociety - Chapter 10] குறிப்பிட்டுள்ளார். புங்குடுதீவு திகழியில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய எச்சங்களில் சில அமராவதி கலைப் பாணியில் இருந்தமை நாகரீகம் மிக்க மனிதர் வாழ்ந்தனர் என்பதை எடுத்துச் சொல்கிறது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த புத்த குருமார் எவரும் சிங்களவர்கள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எம்மால் போற்றப்படும் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரான ‘சாக்கிய நாயனாரும்’ புத்தகுருவே. தமிழரான அவர் புத்தகுருவாக இருந்ததால் சிவலிங்கத்தை கல்லால் அடித்து முத்தி அடைந்தார் என்கின்றது பெரியபுராணம். அதனால் புத்த சமயத்தைச் சார்ந்தவர்களாகவும் அன்றைய தமிழர் இருந்ததை அறிந்து கொள்ளலாம்.

புங்குடுதீவில் இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தோர் தமக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் மூன்றையும் புங்குடுதீவில்[பியங்குதீவ] இருந்தே பெற்றார்கள். அது வளங்கொழிக்கும் பூமியாகவே இருந்தது [Sinhala Jana Katha]. அங்கு மயில், மான், மரை, ஆடு, மாடு, முயல், உடும்பு, மீன், இறால், சங்கு, சிப்பி, முத்து, பவளம், கள்ளி, அகில், புன்னை, புங்கு, பூவரசு, முருக்கு, முருங்கை, தென்னை, பனை, பருத்தி, நெல், குரக்கன், வரகு, உழுந்து, பயறு யாவையுமே இருந்தன. அவர்களுக்கு வேண்டிய ஆடைகள் பருத்தியில் நெய்யப்பட்டு, பூவரசு, முருக்கு, அரக்கு, சாயவேர் போன்ற சாயங்களால் நிறம் ஊட்டப்பட்டன. சாயவேரைக் கொத்தி எடுத்தனர். எழுதும் ஏட்டையும் விசிறியையும் பிக்ஷா பாத்திரத்தையும் பனையும், மண்ணும் கொடுத்தன. இந்தியா, யாவா, தாய்லாந்து, சீனா போன்ற கிழக்கு நாடுகளுக்குப் போய்வரவும் மாதோட்டதினூடாக இலங்கையின் ஏனைய பகுதிக்குப் போய்வரவும் ஏற்ற துறைமுகமாக புங்குடுதீவின் பெரிய துறை இருந்தது. 

கி பி 17ம் நூற்றாண்டில் கூட புங்குடுதீவு வளம்மிக்கதாக இருந்ததை ஒல்லாந்தர் பதிவுசெய்து வைத்துள்ளனர் [Captain João Ribeiro and his history of Ceylon, 1622-1693]. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தத் தளபதி ஒல்லாந்த அரசனுக்கு அனுப்பிய அறிக்கையில் வளமான யாழ்ப்பாணப் பட்டினத்தில் அரிசி, பருத்தி, சாயவேர், உப்பு, யானை யாவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளான். ஒல்லாந்தர் தமிழ்நாட்டு பருத்தித்துணியை இலங்கைக்கு கொணர்ந்து உள்நாட்டுத் பருத்தித்துணியோடு தீவுப்பகுதிகளிலும் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் சாயம் ஏற்றி யாவா, சுமத்திரா, ஐரோப்பா போன்ற பிறநாடுகளுக்கு கொண்டு சென்றும் விற்றனர். ஒல்லாந்தர் மட்டுமல்ல ஆங்கிலேயரும் பருத்தி பணம் காய்க்கும் என்பதை  நன்றாகவே அறிந்திருந்தனர்.

எழுவைதீவுக்கு அருகே இருக்கும் பருத்தித்தீவு

பண்டை நாளில் இருந்து  யாழ்.தீவுப்பகுதிகளில் பருத்தி வளர்த்தார்கள் என்பதற்கு சான்றாக புங்குடுதீவு, காரைதீவு, கரம்பன், அனலைதீவு ஆகிய இடங்களில் உள்ள பருத்தியடைப்பு, பருத்திவேலி என்பவற்றைச் சொல்லலாம். அதோடு ‘என்னிடமும் பருத்தி விளைந்தது’ என்று பறைசாற்றிக்கொண்டு ‘பருத்தித்தீவு’ இன்றும் எழுவைதீவுக்கு அருகே இருக்கிறது. மேலே Google படத்தில் ஆங்கிலத்தில் Parititivu [பரித்தி தீவு] என்று எழுதியிருக்க தமிழில் பருத்தீவு என எழுதுவது சரியா? பருத்தி நம்மூர் பேச்சுவழக்கில் பரித்தி ஆகமாறியுள்ளதை ஆங்கிலச் சொல்காட்டுகிறது. எனவே பருத்தித்தீவு என எழுதுங்கள். நாமே நம் வரலாறுகளை குழிதோண்டிப் புதைக்கலாமா? சிலப்பதிகாரத்தைத் தழுவி எழுதப்பட்ட கண்ணகி வழக்குரை காதை [வெடியரசன் கதை] தீவுப்பகுதியில் பருத்தி விளைவித்ததை சொல்கிறது என்பர். 

நம் முன்னோர் பருத்திக்கொட்டையில் இருந்தெடுத்த எண்ணெய்யை உணவாகப் பயன்படுத்தியதோடு பருத்திப் பிண்ணாக்கையும் பருத்திக் கொட்டையையும் ஆடு, மாடுகளுக்கு உணவாகக் கொடுத்தனர். புங்குடுதீவில் கருங்கண்னி, நோய்தாக்கான், வட்டக்குடலை போன்ற பருத்தி இனங்களை வளர்தனர். புங்குடுதீவின் 12ம் வட்டாரத்தில் உள்ள அம்மாகடைச் சந்திப்பகுதி 'பருத்தியடைப்பு' என்றே அழைக்கப்பட்டது. எனது மாமியின்[தந்தையின் தங்கையின்] காணி உறுதியில் பருத்தியடைப்பு என்ற பெயரே இருக்கிறது. அங்கு பருத்தி வளர்த்ததாலேயே பருத்தியடைப்பு என்ற பெயர் வந்தது. நம் முன்னோர் பருத்திக்கொட்டைப் பாலைப் பருகி நோயற்று வாழ்ந்தனர். நோய்தாக்கான் பருத்திக் கொட்டைப் பால் சுவையாய் இருக்குமாம். நோய்தாக்கான் பருத்தியின் இலை கொஞ்சம் செந்நிறம் கலந்ததாகவும் அதன் பூ குங்கும [Magenta] நிறத்திலும் இருக்கும். 

நெஞ்சுச் சளிக்கு, இழுப்பு, ஈளை, சன்னி போன்ற நோய்களுக்கு பருத்திக் கொட்டையை இடித்து வடித்தெடுத்த பால் மருந்தாகப் பயன்பட்டது. பருத்திப்பால் குடிக்கும் வழக்கம் இப்போதும் மதுரைப்பக்கம் இருக்கிறது. குருதி வெள்ளை, குருதி அழல் நோய், புண் போன்றவற்றுக்கு பருத்திப்பூ மருந்தாகப் பயன்பட்டது. இப்பூவை ஆய்வு செய்தால் இரத்தப் புற்று நோய்க்கு மருந்து கிடைக்கலாம். சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் பெண்கள் கொய்த 99 மலர்களின் பெயர்களை பட்டியல் இடும் கபிலர் பருத்திப் பூவின் பெயரை ‘பாரம்’ என்கிறார்.
“பாரம் பீரம் பைங்குருக் கத்தி” - (குறிஞ்சி.பா: 92)

பெண்கேட்டு வந்து பல அரசர் போர்செய்வதால் ‘பருத்தி [பன்னல்] வேலியையுடைய இந்தப் பெருமைமிக்க[பணை] ஊர் என்னாகுமோ?’ என்று சங்ககாலப் புலவரான அடைநெடுங் கல்வியார் கவலைப்பட்டதை
“என்னாவது கொல் தானே
பன்னல் வேலி இப்பணை நல்லூரே” - (புறம்: 345: 19 - 20) 
எனப் புறநானூறு சொல்கிறது. போரால் பருத்தி அழியப்போகின்றதே என்ற கவலை அவருக்கு. அதனால் அவரது பருத்தி நேயத்தை - மரநேயத்தை இவ்வரிகளில்  பதிவு செய்துள்ளார். மரம் செடி கொடிகளையும் நேசித்த நம் முன்னோரின் பண்பு நம்மை விட்டு எங்கு சென்றது? நம் முன்னோர் பருத்தி வளர்த்த புங்குடுதீவில் மீண்டும் நாம் பருத்தி வளர்ப்பது எப்போதோ!!
இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. விவசாயம் இந்நாளில் எல்லோருக்கும் வெட்டிப்பேச்சாகிப் போய்விட்டது(அரசியல் போல)
    ஓரு பட்டினிப் போருக்கு பின்புதான் விவசாயம் செழிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நம் முன்னோர் கமத்தொழிலில் அறிந்து வைத்திருந்த அரிய கண்டுபிடிப்புகளை மேலை நாட்டு மோகத்தில் நாம் குழிதோண்டி புதைக்கிறோம்.

      Delete