Tuesday, 30 August 2016

குறள் அமுது - (121)


குறள்:
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து                       - 221

பொருள்:
வறியவர்க்கு ஒன்றைக் ஈவதே ஈகையாகும். வறுமை இல்லாத ஏனையோர்க்குக் கொடுப்பதெல்லாம் கொடுத்து வாங்கும் தன்மையுடையது.

விளக்கம்:
ஈகை என்னும் அதிகாரத்தில் உள்ள முதலாவது திருக்குறள் இது. ஈகை என்றால் என்ன? என்பதற்கான விளக்கத்தை இக்குறள் சொல்கிறது. வறுமைத் துன்பத்தில்  வாடுவோருக்கு  கொடுப்பதே ஈகை என்பது நம் பழந்தமிழ் முன்னோர் கண்ட முடிவாகும். 

மனித வாழ்வுக்குத் தேவையான இருக்க இடம், படுக்கப் பாய், உண்ண உணவு, நோய்க்கு மருந்து, குடிக்க நீர் என்று சொல்லப்படும் அடிப்படை வசதிகளற்று வாழ்வோரே வறியோர் ஆவர். இன்னொரு வகையில் சொல்வதானால் பலவகைத் துன்பங்கள் சேர்ந்து இருக்கும் இடமே வறுமை உள்ள இடமாகும். ஆதலால் அன்றாட தேவைகளுக்காக அல்லற்படும் வறியவர்களின் துன்பத்தை நீக்குவதே ஈகையின் குறிக்கோளாகும். மற்றோர்க்கு ஈவதை ஈகை என்று சொல்வதில்லை.

அறம், தானம், ஈகை, கொடை யாவும் பிறருக்கு நாம் மனமுவந்து கொடுப்பதைச் சுட்டினாலும் ஒவ்வொன்றும் அதனதன் தன்மையில் மாறுபடுகின்றது. தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தனித்தனிக் கருத்தைத் தரும். தன்னிலையில் இருந்து குறைந்தோருக்குக் கொடுப்பதே ஈதலாகும். தொல்காப்பியரும்
“ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே”
                                                        - (தொல்: சொல்: 445)
எனச் சொல்கிறார். வயதில், பொருளில், பதவியில், அறிவில் எம்மிலும் குறைந்தோரை இழிந்தோன் என்கிறார். அதனால் இல்லாதவர்க்கு ஈதலும் இரப்போர்க்கு இடுதலும் ஈகையாகும் என்பதை அறியலாம். இல்லாதவர்க்கும் இரப்போருக்கும் நாம் அளிப்பதை மீண்டும் எமக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் அளிப்பதில்லை. 

வறியோர் அல்லாதோருக்குக் கொடுப்பவை மீண்டும் கிடைக்கும் என்று நினைத்து கைமாறுகருதிக் கொடுப்பவையே. தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஒருவர்க்கு ஒன்றைக் கொடுத்தல் ஈகையாகுமா? ஆதலால் ‘மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து’ என்றார். நீரது உடைத்து என்றால் அத்தன்மையானது  என்ற கருத்தைத் தரும். 

வறுமைத் துன்பத்தில் துடிப்போருக்கு ஈவதே ஈகை. வறுமையில்லோதோருக்குக் கொடுத்தல் பயன் கருதி கொடுத்து மீண்டும் பெற்றுக்கொள்ளும் கடன் போன்றதே.

No comments:

Post a Comment