திருச்சியில் இஸ்லாமிய அரசாட்சி நடந்தகாலத்தில் சைவ, வைணவ சமயத்தவர்க்கு இடையே சண்டை ஏற்பட்டது. ஶ்ரீரங்கம் கோயில் வைணவ சமயத்தவர்க்கு சொந்தம் என்று வைணவர்களும், சைவ சமயத்தவர்க்கு சொந்தம் என்று சைவர்களும் அடிபட்டுக் கொண்டார்கள். அவர்களிடையே மூண்ட கலகத்தை அடக்க இருபகுதியினரையும் அரசன் கூப்பிட்டான். இரு சமயத்தவரின் கடவுள் பற்றியும் கேட்டான். வைணவர்கள் விஷ்ணு, திருமால், நாச்சியார், பெருமாள், திருப்பதி வேங்கடேஸ்வர், இராமர், அநுமன் எனத் தங்கள் கடவுளர் பெயர்களைக் கூறினர். அது போல் சைவ சமயத்தவரும் திருமால், விஷ்ணு, சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் எனத் தமது கடவுளர் பெயர்களை நீட்டி முழங்கினர்.
இரு சமயத்தவரும் சொன்ன கடவுளர் எண்ணிக்கையைக் கேட்ட அரசன் ‘உங்கள் கடவுளரில் யார் முதன்மைக் கடவுளோ அவரின் உருவப்படத்தை நாளைக் காலையில் கொணர்ந்து காட்டுங்கள், தீர்ப்புச் சொல்கிறேன்’ என்றான். இருசமயத்தவரும் எந்தக் கடவுளைக் கொண்டு போவது எனச்சிந்தித்தனர். வைணவர்கள் ‘ஶ்ரீரங்கம் கோயிலுக்காகத் தானே நாம் சண்டை போட்டோம் ஆதலால் ஶ்ரீரங்கநாதரின் உருவப்படத்தைக் கொண்டு செல்வோம் என முடிவெடுத்து நிம்மதியாகப் படுத்துத் தூங்கினர்.
சைவவர்களுக்கு எந்தக் கடவுளின் உருவப்படத்தைக் கொண்டு போவது என்று முடிவெடுக்க முடியவில்லை. திருமாலே பள்ளிகொண்டவன் ஆதலால் திருமால் உருவத்தைக் கொண்டுசெல்வோம் என்று ஒருசிலர் கூற, இல்லை! இல்லை! சைவசமயக் கடவுள் சிவனே! எனவே சிவனைக் கொண்டுபோவோம் என வேறுசிலர் கூறினர். எந்தச் சிவனின் உருவத்தைக் கொண்டுபோய்க் காட்டுவது? நடராசனையா?, சதாசிவனையா?, மகேஸ்வரனையா? என அவர்களுக்குள் குழப்பம். ஒன்றும் வேண்டாம் விநாயகனின் படம் போதும், விக்னவிநாயகன் எல்லாக் குறைகளையும் தீர்த்து வைப்பான் என ஒரு முதியவர் எல்லோரையும் அடக்கினார். நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் முருகனே தமிழ்க் கடவுள், நல்ல அழகன் அவன் படத்தைக் காட்டுவோம் என்றார். எந்த முருகனைக் காட்டுவது? திருச்செந்தூரானா? பழநி ஆண்டியா? தணிகையானா? யாரைக் காட்டுவது? இவர்கள் யாரும் வேண்டாம் அம்பாளைக் காட்டுவோம் எனச் சத்தம் போட்டனர் சிலர். எந்த அம்மனை? மதுரை மீனாட்சியா? காஞ்சி காமாட்சியா? காசி விசாலாட்சியா? நெல்லைக் காந்திமதியா? இப்படிக் கத்திக் கூக்குரல் இட்டு ஒருத்தர் குடுமியை ஒருத்தர் பிடித்து உருண்டு பிரண்டனர்.
காலமும் மெல்லக் கரைந்தது. காலையும் மெல்ல விரிந்தது. விடிவதைக் கண்ட சிலர் வீடுகளுக்குச் செல்லப் புறப்பட்டனர். இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே ஒரு முதியவரின் மடியில் அவரது பேரன் தூங்கிக் கொண்டிருந்தான். அவர் பேரனை ‘வா! வீட்டுச்செல்வோம்’ என எழுப்பினார். தூக்கக் கலக்கத்திலும் ‘அப்புச்சி! ராசாட்ட காட்ட எந்தச் சாமியைக் கொண்டு போகப் போறீங்க?” என்று கேட்டான். ‘இன்னும் முடிவாகவில்லை, நாம் வீட்டுக்குப் போவோம்’ என்றார். முதியவர் அப்படிச் சொன்னதும் அச்சிறுவனுக்கு எரிச்சல் வந்தது. உரத்துக் கத்திச் சொன்னான் ‘அப்புச்சி! அம்மா எதுக்கெடுத்தாலும் ஏட்டில கயிறு சாத்திப் பார்க்குமே, அப்படி திருமுறைகளில் கயிறு சாத்திப் பார்த்தால் எந்த சுவாமியைக் கொண்டு செல்வது என்று சுவாமி சொல்லாதா?’ என்றான். அதைக் கேட்ட எல்லோரும் அச்சிறுவனைத் திகைப்போடு பார்த்தனர்.
பன்னிருதிருமுறைகளின் ஏடுகளை அடுக்கி வைத்து, அந்த ஏடுகளுக்கு இடையே ஒரு மெல்லிய நூலைப் போட்டுஇழுத்தனர். அந்த நூல் எந்த ஏட்டிற்கு மேலாகச் சென்றதோ அந்த ஏட்டில் எழுதி இருந்த தேவாரத்தைப் படித்தனர். ஒருவரோடு ஒருவராய் முட்டி மோதிக்கொண்டவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துத் துள்ளிக் குதித்தனர். அச்சிறுவனைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தனர். ஒரு சிலர் அதற்கும் உடன்படவில்லை. ‘சிறுவனின் சொல்லைக் கேட்டு நாம் கோயிலை இழக்கப் போகிறோம். அரசன் உருவப்படமல்லவா கேட்டான்? தேவாரமா கேட்டான்? என முணுமுணுத்தபடி சென்றனர். எனினும் எல்லோரும் அரசன் சொன்ன நேரத்துக்கு அரண்மனையில் இருந்தனர்.
கொழுமண்டபத்தில் இருந்த அரசன் இரு சமயத்தவரையும் பார்த்து “கடவுளரின் உருவப்படம் எங்கே?’ என்று கேட்டான். வைணவர்கள் ஶ்ரீரங்கநாதனின் உருவப் படத்தைக் கொடுத்தனர். பார்த்தான். சைவர்கள் ஒரு ஏட்டு மடலை நீட்டினர். ‘உருவப் படமெல்லவா கேட்டேன்? எங்கே உங்கள் கடவுளின் படம்?’ என்றான். ‘இந்த மடலைப் படியுங்கள். எங்கள் கடவுள் எப்படிப்பட்டவர் என்று அது சொல்லும்’ என்றனர். அரசனும் சிரித்துக்கொண்டு வாங்கிப் படித்தான்.
“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான் வார்சடையான் எண்ணின் அல்லால்
ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன்
ஓரூரன் அல்லன் ஓருவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ் வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ் வண்ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”
- (ப.திருமுறை: 6: 97 :10)
அரசன் மீண்டும் மீண்டும் அந்தத் தேவாரத்தை வாசித்தான். அவன் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டான். இஸ்லாமிய கடவுளுக்கும் உருவம் இல்லை. சைவ சமயத்தவர் கடவுளுக்கும் உருவமில்லை. இறைவனின் உருவத்தை இறைவனின் அருளைக் கொண்டே காணமுடியும். ஆனால் கீறிக்காட்ட முடியாது [எழுதிக் காட்டொணாதே]. ஓ! உலகக் கடவுளர் எல்லோருக்கும் இது பொதுவானது என்பதை உணர்ந்ததும் ‘ஶ்ரீரங்கம் கோயில் சைவசமயத்தவர்களுக்கே உரியது எனத் தீர்ப்பளித்தான். இந்நாளில் வாழும் நாம் சமயச்சண்டைகள் போட்டு, போரென்று உலகையே சீரழித்துக் கொண்டு இருகிறோம்.
“ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ”
- (ப.திருமுறை: 8: 11 :1)
என மாணிக்கவாசகரும் பாடித் தெள்ளேணம் கொட்டுகின்றார். ஒரு பெயரும் ஒரு உருவமும் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் பெயர் சொல்லி, இறைவனின் வலிமையைப் பாடி மகிழ்ந்து கைகொட்டி விளையாடுவோம் என்கின்றார். வலிமையை, புகழை, செய்த உதவியைப் பேசி மகிழ்தலை - அல்லது பாடி மகிழ்தலை தெள்ளேணம் என்று சொல்வர். [தெள் + ஏணம் = தெள்ளேணம், தெள் - தெளிந்த/நன்கு அறிந்த; ஏணம் - வலிமை]. தமக்குத் தெரிந்தோரின் வலிமைகளைப் பாடி மகிழ்ந்து பெண்கள் கைகொட்டிச் சிரித்து விளையாடிய விளையாட்டு தெள்ளெணம் ஆகும்].
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment