குறள்:
"நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு" - 336
பொருள்:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் போய்விட்டான் எனச் சொல்லும் பெருமை உள்ளது இவ்வுலகம்.
விளக்கம்:
மனிதவாழ்வின் நிலைஇல்லாத தன்மையைக் கூறும் இத்திருக்குறள் ‘நிலையாமை’ என்னும் அதிகாரத்தில் வருகிறது. தோன்றுவது யாவும் அழியும் என்பது உலக நியதியே. இந்த நியதிக்கு அளவுகோல் கிடையாது. மானுடப் பிறப்பின் தோற்றத்தில் தாய் வயிற்றினுள் கருவாய் இருக்கும் போதே எத்தனை வகையான அழிவுகளில் இருந்து தப்பிப்பிழைத்து பிறவி எடுக்கிறோம் என்பதை மணிவாசகர் தமது போற்றித் திருஅகவலில்
“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர்இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படுந்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்”
- (ப.திருமுறை: 8: 4: 13 - 25)
எனக் கூறியுள்ளதால் அறியலாம்.
அப்படித் தப்பிப் பிழைத்த குழந்தை, பாலர், சிறுவர், இளைஞர், முதியோர் என எந்த வயது எல்லையும் இன்றி பிறந்தோர் யாவரும் இறப்பது உண்மையே. நேற்று என்பதை நெருநல் என்பர். ‘என்னிடம் உள்ளது’ என்றால் ‘என்னிடம் இருக்கிறது’ என்று பொருள் கொள்கிறோம் அல்லவா! அதுபோல் உளன் என்பது இருந்தவன் என்ற கருத்தைத் தரும். இந்த உலகில் நேற்று இருந்தவன் இன்று இருக்கமாட்டான் எனத் திருவள்ளுவர் சொன்னதையே முன்பின்னாக மாற்றி ‘இன்று இருந்தவன் நாளை இருக்கமாட்டான்' என்பதை உணராது திரிகின்ற[உழிதரும்] ஊமர்காள்! என எம்மை அழைத்து
“இன்றுளார் நாளை இல்லையெனும் பொருள்
ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்
அன்று வானவர்க்காக விடம் உண்ட
கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்மினே”
- (ப.திருமுறை: 5: 84: 9)
என திருநாவுக்கரசு நாயனார் தமது தேவாரத்தில் கூறிச் சென்றுள்ளார்.
திருவள்ளுவரின் கருத்தை பட்டினத்தாரும் தன் தாய்க்குக் கொள்ளி வைத்தபோது பாடிய கடைசிப்பாடலில்
“வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்”
என ‘நேற்று இருந்த தன் அன்னை இன்று எரிந்து சாம்பலாகிப் போனாள்’ என்கிறார்.
இந்த உலகத்தில் எவரும் நிலைத்து வாழ்ந்தோம் என்று மார்தட்ட முடியாது. ஏனெனில் நேற்று இருந்தவன் இன்று இருக்கமாட்டான் என்ற தற்பெருமையோடு மார்தட்டி வாழ்கிறதாம் இவ்வுலகு என்கின்றார் திருவள்ளுவர்.
தங்கள் சிறந்த பதிவுக்கு எனது பாராட்டுகள்
ReplyDelete