மனித உள்ளத்தை இயற்கையின் இன்பங்கள் கவர்ந்தன. உண்மையான இன்பங்கள் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. அந்த இன்பக்கொடை அவனை மிருக நிலையிலிருந்து தனித்தன்மையுடைய மனிதநிலைக்கு உயர்த்தியது. மானுடத்தின் அந்தத் தனித்தன்மையை உணர்ந்தவன் தமிழன். அவன் அநுபவத்தால் கண்டு ஆராய்ந்து அறிந்த உண்மைகள் பல கோடி. அதில் ஒன்று ‘இன்பமாக வாழ்க’ எனப் பிறரை மனமகிழ்ச்சியுடன் இனிமையாக வழ்த்துதலாகும். வாழ்த்துவதையும் இனிமையாக மகிழ்ச்சியோடு வாழ்த்த வேண்டும் என வாழ்த்துவதற்கு இலக்கணம் வகுத்தவனும் தமிழனே!
வாழ்த்துவதையும் நான்கு வகையாகப் பிரித்து இலக்கணம் வகுத்தான் தமிழன் என்பதை தொல்காப்பியம் காட்டுகிறது. தொல்காப்பியர் வாழ்த்தணி பற்றிச் சொல்லுமிடத்தில் இயன்மொழி வாழ்த்து, புறநிலை வாழ்த்து, செவியறிவுறூஉ, வாயுறை வாழ்த்து என நால்வகை வாழ்த்துக்களைக் காட்டித் தந்துள்ளார். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் இயன்மொழி வாழ்த்து மூன்று என்கின்றார். ‘இயன்மொழி’ என்றும் ‘வாழ்த்து’ எனவும் ‘இயன்மொழி வாழ்த்து’ என்றும் பிரித்துச் சொல்கிறார். இவற்றுள் வாழ்த்து - வாழ்த்தியல் என்ற பெயரில் மிக அழகாக எடுத்து ஆராயப்பட்ட ஒன்று.
வாழ்த்தியலில் எப்படி வாழ்த்துவது என்பதைக் காட்ட சங்க இலக்கியச் செய்யுள்களில் இருந்து சில செய்யுள்களை எடுத்துக்காட்டியுள்ளனர். பிறரை வாழ்த்தும் போது எப்படி வாழ்த்துவது என்பதை அறிய புறநானூற்றில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை இரு வேறு சங்ககாலப் புலவர்கள் எப்படி வாழ்த்தினார்கள் என்பதைப் பார்ப்போம்
நெட்டிமையார் என்னும் சங்ககாலப்புலவர்
“நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”
- (புறம்: 9: 11)
‘நல்ல நீரையுடைய பஃறுளி ஆற்று மணலினும் பல ஆண்டுகள் வாழ்வாயாக!’ என வாழ்த்த
காரிகிழார் எனும் சங்ககாலப்புலவர்
“தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும! நீ நிலமிசையானே”
என வாழ்த்தியுள்ளார். இவ்விரு புலவர்களில் ஒருவரேனும் மனதிற்கு நெருடலைத் தரும் எந்தச் சொல்லையாவது வைத்து வாழ்த்தி இருக்கிறார்களா? இல்லையே. இவர்கள் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்தி இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேலே ஓடிவிட்டது. சங்ககாலத் தமிழர் காட்டுவாசிகள் என்று நம்மில் பலர் நினைக்கிறோம். நாகரீக உச்சியில் வாழ்கிறோம் என நினைக்கும் நாம் பிறரை எப்படி வாழ்த்துவது எனத் தெரியாது வாழ்கிறோம். நாம் எப்படி வாழ்த்துகிறோம் என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா?
பிறந்த நாள் வாழ்த்து வாழ்த்தும் போது ‘நோய்,நொடி இல்லாமல் வாழ்!’ என்றும் ‘துன்பம் இல்லாமல் வாழ்!’ எனவும் வாழ்த்துகிறோம். புதுமனை புகுவிழாவிற்கு ‘வறுமையின்றி வாழ்க!’ என வாழ்த்துகிறோம்’ அரங்கேற்ற மேடைகளில் ஏறி அரங்கேற்றம் செய்த பிள்ளைகளை வாழ்த்தும் பெரிய அறிஞர்களும் “அரங்கேற்றம் என்பது முடிவல்ல,” “அரங்கு ஏறிவிட்டோம் என்று கலையை மூட்டை கட்டி வைக்க வேண்டாம்” என்றெல்லாம் புத்திமதி கூறுவதாக எண்ணி வாழ்த்துகின்றனர்.
இவற்றைவிட திருமண மேடைகளில் வாழ்த்துவார்களே அவற்றை என்னென்று சொல்வது? திருமணவிழாவில் பாடும் தேவாரங்களை யாரும் செவிமடுப்பதில்லையா? உண்மையில் எனக்கு என்ன நடக்கிறது என்பது புரிவதில்லை. சாஸ்திர சம்பிரதாயம் தெரியும் என நம்மவர் நம்பும் ஐயர்மாரே
“மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை”
எனப்பாடுவது மிகவும் வெட்கப்படவேண்டிய ஒன்று.
ஒருவரை நாம் ‘நோய், நொடி இல்லாமல் வாழ்!’ என்று வாழ்த்தும் போது நம்மை அறியாமலேயே நோய், இல்லை என்ற இரு மங்கலம் இல்லாத சொற்களைக் கூறுகிறோம். அதுபோல் ‘துன்பம் இல்லாமல் வாழ்’ என வாழ்த்தும் போதும் துன்பம், இல்லை என இரு மங்கலம் அற்ற சொற்களைச் சொல்கிறோம். நம் வாழ்த்தைக் கேட்டு, நாம் வாழ்த்தியவரே ‘எனக்கு நோயா? துன்பப்படுகிறேனா? எனக் கவலைப்படக் கூடும். “அரங்கேற்றம் என்பது முடிவல்ல” என்று சொல்லும் போது ‘முடிவு’ என்ற செல்லையும் “அரங்கு ஏறிவிட்டோம் என்று கலையை மூட்டை கட்டி வைக்க வேண்டாம்” எனும் போது மூட்டை கட்டி, வேண்டாம் போன்ற மனதிற்கு இன்பம் தராத சொற்களையும் அவை கூடாத சொற்கள் என்பதை உணராது சொல்கிறோம். இப்படி வாழ்த்துவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றோகும்.
திருமணவிழாவில் “மண்ணில் நல்லவண்ணம் வாழ்க!” என வாழ்த்தலாம். ஆனால் ‘நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை’ என்ற அடுத்த அடியில் வரும் குறை, இல்லை இவ்விரு சொற்களும் மங்கலச் சொற்கள் அல்ல. ‘நம் வாழ்த்து ஒருவரை மகிழ்விக்க வேண்டும். அதுவே எரிச்சலை மூட்டுவதாகவும் மனவருத்தத்தைத் தருவதாகவும் இருக்கக் கூடாது. அதனால் நம் முன்னோர் வாழ்த்தும் போது மங்கலச் சொற்களால் நல்ல மனதோடு வாழ்த்துங்கள் என்றனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? எவராவது அவற்றைக் கண்டு கொள்கிறார்களா? அல்லது எப்படியும் வாழ்த்தலாம் என்ற எண்ணமா? நம்மவர் நிலையைப் பார்க்கும் போது நாம் தமிழரா? எங்கே? எப்போது தொலைத்தோம் எம் தொன்மைகளை? எனக் உரக்கத் குரல் எழுப்பிக் கேட்கத் தோன்றுகிறது. எமது வருங்கால இளம்பிள்ளைகள் பண்டைத்தமிழர் பண்பாட்டை அறிந்து கொள்வதற்காக இதனை எழுதுகிறேன். நானும் இதனைப் பதிவு செய்யாதுவிடின் யார் செய்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
நம் முன்னோரிடம் இருந்த தலைசிறந்த பண்பில் சிலவற்றை இவ்விடத்தில் சொல்லாம் என நினைக்கிறேன். நாம் உண்ட உணவின் மிச்சத்தைக் கொட்டச் சென்றால் ‘சாப்பாட்டைக் கொட்டாதே’ என்று சொல்லாது ‘அங்க வையுங்க, நான் எடுத்து வைக்கிறேன்’ என்பார்கள். வீணாய் நாம் கொட்டுவதையும் ‘வைப்பது’ என்று நிறைவாய் சொன்ன நம் முன்னோர் எங்கே? நாம் எங்கே? சிந்திப்போமா?
அதுமட்டுமா ’விளக்கை அணைத்து விடு’ என்று கூறாது அந்த ‘விளக்கை அமர்த்திவிடு’ என்பார்கள். தாலாட்டுப் பாடும் போது கூட இப்போது பாடுவது போல்
“காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே” எனப் பாடமாட்டார்கள்.
“கண்ணே நீ கண்வளராய்
கண்மணி நீ கண்வளராய்” என்றே பாடுவர். கண்ணுறங்கு என்று பாடும் போது எங்கே தன்குழந்தை நீள் உறக்கத்தில் ஆழ்ந்து விடுமோ என்ற தாயின் உள்ளத் தவிப்பு ‘கண் வளராய்’ எனப்பண்பாய் வளர்ந்துள்ளது. குழந்தைகளைக் குளிப்பாட்டும் போது நிறைவாக ‘சுகம் சுகம் வளர் வளர்’ என மூன்று முறை கூறி நீர் வார்ப்பதும் இந்தப் பண்பின் ஒரு பகுதியே. இதனையே நம்மில் பலர் 'சோஞ்சோங் வளர் வளர்' எனச் கூறி குளிப்பாட்டுகின்றனர். ஏன்? எதற்கு? எதைச் சொல்கிறோம் என்ற தெளிவற்று சுகம் சுகம் என்பதை சோஞ்சோங் என்று கூறுகிறோம். இனிமேலாவது அப்படிக் கூறுவதைத் தவிர்ப்பது நன்று.
பக்கத்துவீட்டார் கைமாற்றாகக் கேட்ட பொருள், வீட்டில் இல்லை எனில் ‘இல்லை’ என்று சொல்லமாட்டார்கள். அதனை வாங்கவேண்டும் எனக் கூறி, தங்களிடம் அது இல்லை என்பதை உணர்த்துவர். சின்னமுத்து, பொக்களிப்பான் போன்ற நோய்களை ‘அம்மை’ எனக்கூறுதலும் இவை போன்றதே. குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் மதிப்புக் கொடுத்து வாழ்ந்தனர். ‘என்னப்பு படிக்கிறீங்க?’ ‘என்னடா கண்ணு வேணும்?’ ‘சாப்பிட்டாயா செல்லம்?’ ‘என் மாணிக்கம் அல்லவா சாப்பிடு கண்ணா’ என்று கொஞ்சிக் கெஞ்சி குழந்தைகளை வளர்த்தனர். நம் முன்னோர் அன்றாட வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து நேர்த்தியாகச் செய்தனர்.
இப்படிப்பட்டோர் பிறரை வாழ்த்தும் போது எப்படி வாழ்த்தி இருப்பர்? அதனாலேயே திருமண விழாக்களில் “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!” என வாழ்த்தினர். கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, சுகம், வாழ்நாள் என்ற பதினாறும் இல்லறவாழ்வுக்குத் தேவை என்பது அவர்கள் கண்ட உண்மை.
நம் முன்னோர் இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளுக்கு முன்பே எப்படி ஒருவரை வாழ்த்த வேண்டும் என்று இலக்கணம் வகுத்துத் தந்தும் நாம் தடுமாறுவது ஏன்? மனிதரை மட்டுமல்ல கல்லூரியை, ஊரை, நாட்டை, இந்த உலகை வாழ்த்துவதாக இருந்தாலும் மங்கலச் சொற்களால் வாழ்த்த வேண்டும். பாடசாலையின் கீதம், ஊரின் கீதம், நாட்டின் கீதம் [national anthem] பாடுவதாக இருந்தால் அமங்கலச் சொற்களை [வறுமை, வேதனை, கவலை, துன்பம், துயரம், அழுகை, இழிவு, நோய், மறத்தல், புலம்பல், முடியாது, சிறு] வைத்து பாடல் எழுதி வாழ்த்துவது மரபல்ல. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வாங்கு வாழ்வது எப்படி என்று பண்பட்டிருந்த தமிழினம் இன்று உருக்குழைந்து போதல் அழகா?
வாழ்த்துவதற்கு என்று ஒரு மரபு இருக்கிறது. அதுவும் பாடல்களாக - திரும்பத் திரும்பப் படிக்கும் பாடல்களாக [கல்லூரி கீதம்] எழுதும் போது வாழ்த்து, மந்திரமாக வலிமை பெறும். அத்தகைய கீதங்களை மரபு மாறாது எழுத வேண்டும். அதனால் தொல்காப்பியர் மரபியலில்
“மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபுவழிப் பட்ட சொல்லினான” - (தொல்: மரபியல்: 92)
“மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்” - (தொல்: மரபியல்: 93)
என்கின்றார். மரபு மாறும் போது ஒவ்வொன்றும் பிறிந்து பிறிந்து சிதைந்து போகும் என மிக நுணுக்கமாக எச்சரிக்கை இட்டிருக்கிறார். நாம் சொல்லும் சொல்லின் மரபுகள் மாறினால் அவற்றின் பொருள் மாறும். எமது தமிழ்ப்பண்பாடு இனம் சார்ந்தது மட்டுமல்ல நம் மொழி சார்ந்தது, நம் மண் சார்ந்தது. பல ஆயிரவருடங்களாகக் கட்டிக் காத்த மிகவுயர்ந்த உலகப்பண்பாடு அது.
‘சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, நீர், திங்கள், சொல், கார்[மேகம்], பரிதி, யானை, கடல், உலகம், தேர், மலை, மா, கங்கை, நிலம் போன்ற பிற சொற்களும் மங்கலச் சொற்கள் என வெண்பாப் பாட்டியல் என்ற நூல் எனப்பட்டியல் இடுகிறது. மங்கலச் சொற்கள் மிகுந்த இரண்டு வாழ்த்துக்களைப் பார்ப்போமா? இவற்றுள் இருக்கும் அமங்கலச் சொற்களை நீங்களே கண்டுபிடியுங்கள்
மனோன்மணீயம் பெ சுந்தரம்பிள்ளை அவர்களின் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’
“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதிற்சிற்ந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”
நான் படித்த ‘இராமநாதன் கல்லூரி கீதம்’
இராகம்: இராகமாலிகை தாளம்: ஆதி
இராகம்: காம்போதி
“மணிபரந்த மாகடலே மாலுருவ மாயிடினல்
அணிகிளரு மவனிதயத் தாமரைகா ணம்மானை
அணிகிளரு மவனிதயத் தாமரையிற் றிருவெழுந்து
பணிகொள்ளும் பொன்னிலங்கை பண்பிதுகா ணம்மானை
பொன்னிலங்கை திருநுதலாய் பொலிவதுசீர் யாழ்பாணம்
என்றுபல ரேத்துவது மியல்பேகா ணம்மானை
என்றுபல ரேத்துநுதற் கெழிற்திலக மாய்விளங்கும்
பொன்றாத பொன்ராம நாதனிட மம்மானை
பொன்ராம நாதன்றன் கல்லூரி யம்மானை
இராகம்: பூபாளம்
அரிபடர்ந்த மதர்க்கண்ணா ரரிய யனுங்காணாத
விமலர்ச்சே வடிகாணும் வியப்புடையத்திக் கல்லூரி
இராகம்: பௌலி
பண்மிழற்றும் பாவையர்கள் பரமனது பதம்பாடி
விண்களிக்கச் செயும்கீர்த்தி விரகுடைத்திக் கல்லூரி
இராகம்: கல்யாணி
திங்கள்சேர் வான்முகத்தார் திருந்நீற்றுத் தேசுடனே
மங்கலஞ்சேர் வாழ்புவியில் மாண்புடைத்திக் கல்லூரி
இராகம்: ஆனந்த பைரவி
பொன்பூத்த மேனியர்கள் பூக்கொய்து பரமனுக்குப்
பண்மாலை யணிவிக்கும் பாங்குடைத்திக் கல்லூரி
இராகம்: பேஹக்
தித்தித்த தேன்மொழியர் தீங்கரும்பிற் சுவைமிகுந்த
முத்தமிழின் பயன்திளைக்கும் மகிழ்வுடைத்திக் கல்லூரி
இராகம்: கேதாரகௌள
கிஞ்சுகவாய் கன்னியர்சங் கீதநயம் பலவிசைத்து
விஞ்சையர்போல் வீணைபயில் வியப்புடைத்திக் கல்லூரி
இராகம்: சிந்துபைரவி
நித்திலத்தை யொத்தநகை நாண்மடவார் நிரைநிரையாய்ச்
சித்திரத்தைப் போலியங்கும் சீருடைத்திக் கல்லூரி
இராகம்: காபி
வன்னமணிப் பூவாடை வனிதையர்கள் பன்மொழியிற்
சொன்னகலை பலபயிலுஞ் சதுருடைத்திக் கல்லூரி
இராகம்: தோடி
பால்போன்ற நிலவொளியிற் பந்தாடிப் பூவையர்கள்
நூல்நூற்று நலம்புரியும் நோன்புடைத்திக் கல்லூரி
ஈழத்தழகைக் காத்திவ் விருநிலத்தை தன்புகழாற்
சூழ்ராம நாதன்ரன் கல்லூரி வாழியவே
தாவி லூழித் தண் ணளிக
மாவலி கங்கை மணலினும் மிகவே”
இராமநாதன் கல்லூரி கீதத்தில் பண்ணும், முத்தமிழும், சங்கீதமும், வீணையும், கலையும் பயில்வதால் ஈழத்து அழகைக் காத்து தன்புகழால் உலகத்தை சூழச்செய்யும் கல்லூரி என வாழ்த்தப்பட்டுள்ளது. மந்திரமாய் சொன்ன அந்த வாழ்த்தால் இராமநாதன் நுண்கலைக்கல்லூரி; யாழ் பல்கலைக் கழகத்தின் கலைப்பீடமாகத் திகழ்கின்றது எனலாம். எந்த வாழ்த்தாயினும் நிறைந்த மனதுடன் மங்கலச் சொற்களால் வாழ்த்தி மகிழ்வோம். உலகெங்கும் இன்பம் சூழட்டும்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment