ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன் ஐயனாரிதனார் என்னும் புலவர் வாழ்ந்தார். அவர் இயற்றிய நூல் புறப்பொருள் வெண்பாமாலை. இந்த நூலுக்கு உரை எழுதிய அந்நாளைய இலக்கண உரை ஆசிரியர்கள் ‘ஓம்படை’ இன்னது என்று எடுத்துக்காட்ட பழமையான பாடல் ஒன்றைத் தந்திருக்கிறார்கள். அது மன்னன் இன்புற்று இருப்பதற்கான வழியைச் சொல்கிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தாமே. எனவே நாமும் அந்த வழியைப் பின்பற்றி இன்புற்று இருப்போமே.
“ஒன்றினால் இரண்டு ஆய்ந்து மூன்று அடக்கி நான்கினால்
வென்று களம் கொண்ட வெல் வேந்தே - சென்றுலாம்
ஆழ்கடல்சூழ் வையகத்துள் ஐந்து வென்று ஆறு அகற்றி
ஏழ்கடிந்து இன்புற்று இரு”
- (பு.வெ.மா - எ.கா: 225)
ஒன்றினால் இரண்டை ஆராய்ந்து, மூன்றை அடக்கி, நான்கினால் ஆழ்கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில் ஐந்தையும் வென்று, ஆறையும் பெருக்கி, ஏழையும் நீக்கினால் இன்புற்றிருக்கலாம் என்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு என்ற இந்த எண்களால் இன்புற்றிரு என்றால் எப்படி இன்புறலாம்? இந்தப் பாடல் சொல்லும் ஏழும் எவை எனத்தெரிந்தால் தானே நாம் இன்புற்றிருக்க முடியும்?
ஒன்று என்பது இங்கே அறிவைக் குறிக்கிறது. ஒன்றாகிய எமது அறிவினால் நன்மை, தீமை என்னும் இரண்டையும் ஆராய்ந்து; நட்பாய், பகையாய், நொதுமலாய் இருக்கும் மூன்று வகையானோரையும் சேர்த்து[அடக்கி]; சாம, பேத, தான, தண்டம் என்ற நான்கையும் பாவித்து உலகோரை வென்று; ஐம்புலங்களால் வரும் விருப்பங்கள் ஐந்தையும் வென்று; படை, குடிமக்கள், உணவு, ஆலோசகர், நட்பு, பாதுகாப்பு ஆகிய ஆறையும் பெருக்கி[அகற்றி]; பேராசை, கடுஞ்சொல், தண்டனை கொடுத்தல், சூதாட்டம், பெரும் பொருள் சேர்த்தல், மது அருந்துதல், அதிக காமம் என்ற ஏழையும் நீக்கினால் இன்பமாக வாழலாம் என இன்புற்றிருக்க வழி சொல்கிறது இந்த புறப்பொருள் வெண்பாமாலை உரைப்பாடல்.
No comments:
Post a Comment