Saturday, 30 January 2016

கல்லும் மண்ணும் தோன்றமுன் தமிழன் தோன்றினானா?

குறிஞ்சிப்பூ பூத்துக்குழுங்கிய குறிஞ்சி நிலம் [கல்தோன்றிய காலம்]

இலண்டனில் இயங்கும் ‘புங்குடுதீவு நலன்புரி சங்கம் - பிரித்தானியா கிளை’ ஆண்டுதோறும்  ‘காற்றுவெளிக் கிராமம்’ விழாவினை நடத்தி வருகிறது. அது ‘Pungudutivu Got Talent’ and Kattruvalikiramam 2015 விழாவை 19th December 2015 அன்று நடத்தியது. அந்த விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய திருமதி வத்சலா, தமிழரின் தொன்மையை எடுத்துச் சொல்லும் 

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”

என்பதற்கான விளக்கத்தை இணையத்தில் [internet] தேடி, தான் ஏற்றுக் கொண்ட கருத்தை அங்கு எடுத்துச் சொன்னார். அவர் சொன்ன கருத்து அவருடையது அல்ல. ஏனெனில் அந்தக் கருத்து 2004ம் ஆண்டில் ஈழமுரசில் வெளிவந்தது. அதனை நான் அப்போதே வாசித்திருந்தேன். திருமதி வத்சலா அக்கருத்தைச் சொன்ன பொழுது ‘அந்தக் கருத்துப் பிழையாக இருந்தால் அதற்கான சரியான கருத்தைத் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்’ என்றும் கேட்டார். தமிழ் என்னும் பெருங்கடலில் ஒரு சிறுதுளித் தமிழை அறிந்தவள் என்ற முறையில் அப்பாடலுக்கான விளக்கத்தைக் கூறலாம் என நினைக்கிறேன்.

தமிழ்ப்பாடல்களின் வரிகளைப் பிழையாக எழுதியும் பேசியும் வருவதால் அவை தரும் கருத்துக்களும் பிழையாகின்றன. அத்துடன் பாடலின் முழுவடிவத்தையும் பாராது, ‘ஈரடிக்கு’ விளக்கம் தருவதும் கருத்துப் பிழை தோன்றக் காரணமாகிறது. 

ஈழமுரசு 2004ல் வெளியிட்ட பாடலின் வரியையும் கருத்தையும் முதலில் பார்ப்போம்.
“கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி”
[கல்] கல்வி அறிவு தோன்றாத [மன்] மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே [வாளோடு] வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது, இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே [பூமி உருவாவதற்கு முன்பே….?] தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப்படுத்தப் படுகின்றது. எனக் கூறியதோடு, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தே தோன்றிய தமிழன் என்ன காற்றாகவா இருந்தான்..! என வியந்து, என்ற கேள்வியையும் ஈழமுரசு எழுப்பியிருந்தது. ஈழமுரசில் இந்தக்கருத்தை ‘விவேகன்’ என்பவர் எழுதியிருக்கலாம் என நினைக்கிறேன். இது அவரின் தவறல்ல. பாடலின் முழுவடிவத்தையும் படித்துப் பாராததே தவறு.

இப்பாடலுக்கான இத்தகைய கருத்தை எத்தனையோ தரம் நான் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் பட்டிமன்றங்களே இப்படியான கருத்தை மக்களிடையே விதைத்தது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் தமது கட்சி வெற்றி வெறவேண்டும் என்ற காரணத்தால் பாடல்களை பிழையாகாக் கூறி உண்மையான கருத்துக்களை இருட்டடிப்புச் செய்கின்றனர். அவர்களின் வாய்ச்சாலத்தில் மயங்கும் நம்மவர்கள் அவர்களின் கருத்தை அப்படியே நம்பிவிடுகின்றனர். இந்தநிலை மாறவேண்டும்.

இப்பாடல் ஈரடியால் ஆன குறள் வெண்பா அல்ல. நாலு அடியால் ஆன வெண்பா இது. என் சிறுவயதிலேயே தமிழின் மேலும் நம் தமிழ் முன்னோரின் அறிவியல் கருத்துக்கள் மேலும் எனக்கு ஈடுபாடு உண்டாக இப்பாடலும் ஒரு காரணமாகும். இந்த உலகின் தோற்றத்தைப் பற்றி நம் தமிழ் முன்னோர் அறிந்திருந்த அறிவியற் கருத்தை மூன்றரை அடியில் புதைத்து வைத்திருக்கும் மிக அற்புதமான வெண்பா இது. தமிழ்க்குடியின் பெருமை பேசும் இந்த அற்புதப் பாடல் ‘புறப்பொருள் வெண்பா மாலை’ என்னும் நூலில் இருக்கிறது. புறப்பொருள் வெண்பா மாலை கி பி 9ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. புறப்பொருளின் சூத்திரங்களை வெண்பாக்கள் விளக்குகின்றன. நம் இளம் தலைமுறையினருக்காக அந்த வெண்பாவின் உண்மையான முழு வடிவத்தையும் கொஞ்சம் பார்ப்போமா?

பொய்அகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம்போர்த்த வயங்கு ஒலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”                                         
                          - (பு. வெ. மாலை: சூத்திர விளக்க பாடல் 35)

புறப்பொருள் வெண்பா மாலையில் இரண்டாவது படலத்தின் பதிமூன்றாவது சூத்திரம் ‘குடிநிலை’ பற்றிக் கூறுகிறது. தான் பிறந்த குடியின் நிலையை - உயர்வை - புகழை பிறருக்கு எடுத்துச் சொல்லுதல் குடிநிலை எனப்படும்.

“மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டுபிறர் அறியும் குடிவர வுரைத்தன்று”           
                                 - (பு. வெ. மா: கரந்தைப் படலம்: 13)
‘மண் செறிந்து, அந்தரத்தே தொங்கும் உலகின் [ஞாலம்] தொன்மையையும் மறக்குடியின் அஞ்சாமை என்னும் வீரத்தையும் காட்டி, பிறர் அறியும் படி தமது குடியின் பெருமையை - புகழை - வரலாற்றை உரைப்பது குடிநிலை ஆகும்’ என்கின்றது இச்சூத்திரம்.
  
வையகம் போர்த்த வயங்குஒலிநீர் கையகலக் கல் தோன்றுதல்

இச்சூத்திரம் சொல்வது போல எப்படித் தன் குடியின் உயர்வை எடுத்துச் சொல்வது? என்பதைக் காட்ட ‘நில உலகின் தொன்மையை - தோற்றத்தைக் கூறி, மண்தோன்ற முன்பே தன்குடி தோன்றிவிட்டது’ என்று வெண்பாவாகத் தன் குடியின் பழைமை கூறப்பட்டுள்ளது.  

“பொய்அகல[பொய்னீங்க] நாளும் புகழ்விளைத்தல்[புகழ்பெருகுதல்] என்வியப்பாம்
வையகம்போர்த்த[பூமியைமூடிய]  வயங்குஒலிநீர்[ஆரவாரித்தகடல்நீர்] - கையகலக்[விலக]
கல்தோன்றி [மலைதோன்றி] மண்தோன்றாக்[மண்தோன்றாத] காலத்தே வாளொடு
முற்றோன்றி[முதலில்தேன்றிய] மூத்த குடி”
                           - (பு. வெ. மாலை: சூத்திர விளக்க பாடல் 35)

‘இந்த உலகம் தோன்றிய காலத்தில், பூமியை மூடி ஆரவாரித்து ஒலி எழுப்பிய கடல் நீர் விலகிச் செல்ல மலை தோன்றி, மண்தோன்றாத அப்பழங்காலத்தே, வாளாண்மை என்னும் வீரத்துடன் எல்லாக் குடிகளுக்கும் முதலில் தோன்றிய மூத்தகுடி நம் குடி. அதனால் பொய் சொல்வோரின் பொய் நீங்கிப்போக, நம் குடி ஒவ்வொரு நாளும் புகழ் பெருகிச் சிறப்படைதலில் என்ன வியப்பு இருக்கின்றது?’ என்பதே இவ்வெண்பாவின் கருத்தாகும்.

இன்றைய அறிவியல் கருத்தின்படி பனியும் நீரும் போர்த்தி இருந்த பூமி

பண்டைத் தமிழில் கல் என்பது மலையைக் குறிக்கும். இன்றும் திண்டுக்கல், குருநாகல் என்னும் இடங்களின் பெயர்களில் உள்ள கல் மலையைத் தானே குறிக்கின்றது. அது கல்வியைக் குறிக்கவில்லை என்பது புரிகிறதா? 

உலகம் மலைகளாகக் காட்சி தந்த காலத்தில் [கல்தோன்றி] - மண் உண்டாக முன் [மண் தோன்றா] - குறிஞ்சி நிலமாக உலகம் இருந்த காலத்தில் கையில் வாளுடன் போர்புரிந்த மூத்த குடி - மறக் குடி - தமிழ் குடி இதில் என்ன வியப்பிருக்கிறது? இல்லையே என்கிறது இப்பாடல். 

அதாவது ஆரவாரித்து ஒலி எழுப்பிய ஊழிக்கடல் நீர் விலகிச் செல்ல மலை தோன்றியது. மண் உருவாகாமல் குறிஞ்சி நிலமாக உலகம் இருந்த காலத்தில் வாளைக் கையில் பிடித்து வீரத்துடன் போர் புரிந்த மறவர் குடி, தமிழ்க்குடி என்று பெருமையுடன் நம் குடியின் வரலாற்றை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பாடல் இது.

பண்டைக்கால போர் ஆயுதங்கள் இரண்டு வகை. 
1. கைவிடு படை - வேல், வில் போன்றவை
2. கைவிடாப் படை - வாள்
கைவிடு படை பயன்படுத்துவோர், இராமர் வாலியைக் கொன்றது போல் ஒளித்திருந்து அம்பெய்தும் கொல்ல முடியும். அதற்கு பெரிய வீரனாக இருக்கத் தேவை இல்லை. ஆனால் கைவிடாப் படையாகிய வாள் வைத்திருப்பவன் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று போர் புரிந்து தனது வாளாண்மையால் வெற்றியை நிலை நாட்ட வேண்டும். அத்தகைய வாளாண்மை மிக்க குடி, நம்குடி என மார் தட்டும் பாடல் இது.
இருநிலம்

பூமியானது மலையும் கடலுமாக இருந்த காலத்தில் தமிழர் அதனை 'இருநிலம்' என அழைத்தனர். இன்றும் இருநிலம் என்ற பெயரால் இவ்வுலகை அழைக்கிறோம் தானே! அருணகிரினாதரும்
“அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி
          அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர்மேலாய்
இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி வருவோனே
          இருநிலமீதில் எளியனும்வாழ எனதுமுனோடி வரவேணும்”
எனத் திருப்புகழில் பூமியை இருநிலம் என்று பாடி இருப்பதை இத்திருப்புகழ் காட்டுகின்றது அல்லவா! இவ்வுலகின் ஆதிக்குடியாய் இருந்த தமிழன் கடலையும் மலையையும் ‘இருநிலம்’ என அழைத்ததில்  வியப்பு இருக்கிறதா?  உலகைக் குறிக்கும் இது போன்ற சொல் உலகமொழிகளில் எத்தனை மொழிகளில் இருக்கிறது?

கள்ளிவேர்கள் மலையை உடைக்கின்றன

பண்டைக்காலத்தே இருநிலமாய் - கடலும் மலையுமாய் இந்தப் பூமி இருந்தது. கடல் அரிப்பாலும் காற்றாலும் மழையாலும் பனியாலும் இடியாலும் அருவி நீராலும் மரவேர்களாலும் மலையாய் இருந்த குறிஞ்சி நிலம் மெல்ல மெல்ல மண்ணாக மாறியது. அதனால் முல்லை நிலமும், மருத நிலமும் நெய்தல் நிலமும் தோன்றின. ஆதலால் தமிழர் 'நானிலம்' எனவும் பூமியை அழைத்தனர். தமிழில் இருக்கும் இச்சொற்களே தமிழ்க்குடி தொன்மையான குடி என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும். இன்றைய அறிவியல் ஆய்வாளரான Dr Yoav Bashan என்பவர் கள்ளி மரவேர்கள் மலையை மண்ணாக மாற்றுவதை படம் எடுத்துக் காட்டியுள்ளார். 

குறிஞ்சி நிலத் தலைவன் மண்தோன்ற முன் தன்குடி தோன்றியது என்று உலகின் தோற்றத்துடன் தமிழ்க்குடியின் வரலாற்றை அறிவியல் கருத்துடன் கூறுவதாக அமைந்துள்ள ஓர் அற்புதமான வெண்பாவிற்கு நாம் பிழைபடக் கருத்துக் கூறி “தமிழன் என்ன காற்றாகவா இருந்தான்..!” என்று கேள்வி எழுப்புதல் நம்மை நாமே இழிவு படுத்துதல் ஆகாதா!!

இனியாயினும் நம்மவர்கள் பாடல்களின் முழுவடிவையும் பார்த்துக் கருத்துச் சொல்லுங்கள் என மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நம்குடி, உயர்ந்த அறிவியல் கருத்துக்களை உலகிற்கு எடுத்துச் சொல்லி உலக நாகரிகத்திற்கு வித்திட்ட தமிழ்க்குடி என்பதை மறவாதிருப்போம்.

கல்லும் மண்ணும் தோன்றமுன் தமிழன் தோன்றினானா? எனக் கேட்போருக்கு “கல் தோன்றி மண் தோன்ற முன் தமிழன் தோன்றிவிட்டான்” என்று உரக்கச் சொல்வோம்.
இனிதே,
தமிழரசி.

20 comments:

  1. Replies
    1. Excellent Maa. Eshwer blesses You. Thamiz keyboard illaadhadhal, AAngilathil ezuthiuLLean. Mannikkavum. Vaazga nin Thamizpattru.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. புவியியல் அறிஞரால் ஏற்றுக்கொள்ள முடியாத---
    குழப்பந்தரும்பொருள் நிறைந்த---
    இது குறள் வெண்பாவோ என்று ஐயுறவைத்த- - -
    இந்தக் ”கல்தோன்றி மண்தோன்றா”
    செய்யுட் பகுதியின் முழுவடிவத்தையும் அறியவைத்து புறப்பொருள் வெண்பாமாலையில் அது இடம் பெற்ற காரணத்தையும் அதன் உண்மையான பொருளையும் அறிய வைத்த தமிழரசி அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் நீங்கள் உண்மையிலேயே ஓர் தமிழ் அரசிதான் என உணரவைத்த தங்கள்
    தமிழறிவை வியந்து சிரந்தாழ்ந்து போற்றுகிறோம்

    ReplyDelete
  3. எனது கண்ணோட்டத்தில்,

    கந்த புராணத்தில், தமித கடவுளாம் முருக கடவுள், தமிழ் குடியைக் உருவாக்கி காத்கா வழி நடத்த, இந்த பூ உலகிலேயே தங்கி விட்டாதாக கூற படுகிறது, அந்த கூற்றின் படி, இந்த செய்யுள் இந்த பூ உலகம் தோன்றும் முன் தோன்றிய குடியாக கருதுகிறேன்...

    மேலும் நாகர்களை பற்றி,ஆராயும் வல்லுநர்கள், அவர்கஅவ வேற்று கிரக வாசிகள் என்று கூறுகிறார்கள் கந்த புராணத்தையும் , புறப்பொருள் வெண்பா மாலையையும் , நாகர்கள் ஆராய்ச்சி அனைத்தையும் ஒப்பிட்டு பார்த்தால்

    தமிழ் உலகம் தோன்றும் முன்பே இருந்த மொழி , அதை வின்னுலக தேவதைகள் நமக்கு அருளியதாக இருக்கலாம் மத இன வாதிகள் மற்றும் இன பிரிவினை செய்து மக்களை குழப்பி அரசியல் செய்து பிழைக்கும் ஈனர்கள் செய்யும் சதிகளில் இதுவும் ஒன்று...

    தங்கள் கருத்துக்கள் அற்புதமானவை

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் ...

    __/\__

    ReplyDelete
  4. முன் தோனதோன்!

    இந்த சொல் , "யாரோ ஒருவருக்கு முனே தோன்றிய" என்று ஏன் பொருள் தருவதாக இருக்க கூடாது?

    மீண்டும் கந்த புராணத்தையே ஆராய்வோம், முருகன் பிறக்க வில்லை தோன்றினான் , அந்த மொழி பிறக்கவோ உருவாக்கவோ படவில்லை, அது தோன்றியது

    எளிய சொற்களையும் நாம் குழப்பம் அடையும் வவகையில் நம்மிடம் திணித்து இருக்கிறது இந்த பிரிவினை எனும் தீய சசக்திகள்

    ReplyDelete
  5. https://fliphtml5.com/xiwxo/zieo
    அகிலத்திரட்டு அம்மானை

    ReplyDelete
  6. சிறப்பு
    இது போன்ற சிறந்த தகவல்களை தமிழ் தகவல்களை தமிழ் மொழியின் தகவல்களை தமிழ்த்தாயின் மொழிகளை எங்களை போன்ற சிற்றறிவு படைத்த வருகிறேன் உங்களை போன்றோரின் பேரழிவை வழங்க வேண்டும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்
    இப்படிக்கு
    அதிபதி

    ReplyDelete
  7. சிறப்பு
    இது போன்ற சிறந்த தகவல்களை தமிழ் தகவல்களை தமிழ் மொழியின் தகவல்களை தமிழ்த்தாயின் மொழிகளை எங்களை போன்ற சிற்றறிவு படைத்த வருகிறேன் உங்களை போன்றோரின் பேரழிவை வழங்க வேண்டும் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்
    இப்படிக்கு
    அதிபதி

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி! நீங்கள் எழுதியதை படித்துப் பார்த்தீர்களா? சிற்றறிவு படைத்து வருகிறேன்? புரியவில்லை. உங்களைப் போன்றோரின் பேரழிவை??? என்ன சொல்ல நினைத்தீர்கள்???

      Delete
  8. அர்த்தமும்,அறிவியல் விளக்கங்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  9. ஓம் என்ற ஓலி, கல் மற்றும் மன் தோன்றும் முன்னாலே கடவுள் என்ற வாளூடைய தமிழன் போட்ட சத்தம்மம்.

    ReplyDelete
  10. கல் என்பது; குறிப்பு, அடையாளம், தொலைவு, அமைவு, பரப்பு, அரண் எனவும் பொருள்படும்.

    மண் என்பது; சொத்து, உரிமை, சமுதாயம், ஆட்சி எனவும் பொருள்படும்.

    வாளொடு என்பது; சமூகமாய், அறிவை உணர்வதாய், பரிணாம வளர்ச்சியாய், எனவும் பொருள்படும்.

    எனவே...

    இப்புவி தோற்றுவாயில் முதலாய் தோன்றிய தமிழ்க்குடி
    குறிஞ்சியில் வாள் எடுத்து நின்றால் எதிரில் வாள் இருப்பவனிடம் தானே நின்றிருக்கமுடியும்.

    ஆக; வாள் எடுத்து நின்றான் என்பது கடும்புனைவென கருதவேண்டிதாகிறது.

    இருக்க; செய்யுளில் காணும் குடி என்பது செய்யுள் உரைத்த காலத்தின் நேர்வியல் நவிற்ச்சியாகும்.

    எனவே புவியொரு உயிர்கோலமாக மருவிய காலத்தில் பரிணாம சாரங்களுக்கு பின்னேதான் மனித சாரங்கள் வளிகொண்டிருக்கும்.

    பின்னாளில் இனங்கள் என விளிக்கப்படும் மனித சாரங்களில், அறிவாச்சாரங்கள் அளாவப்பெற்று கும்பிவழி குடவழி கோள்வழி என செரிவேற்றம் அடைவதில் முதற்றே தோன்றியது செய்யுளரே வியக்கும் உண்மையாம்.... - என்பதே செய்யுள் காட்டும் தகவு.

    (வியங்கெπலிநீர் கையகலக் கல்தோன்றி)

    சீறும் கடல்தனை வீறுடன் கடந்தே ஆறும் கல்லும் பேறென கண்டு, வாளெனக் கூடி வளந்தனை அறிவில், பாடித்தெரிந்து பழஞ்சொல் கூட்டி,
    கூடிய தமிழொடு குணமது குடியாய் நீடுடைப் புவியில் நிறையது தமிழர்.






    ReplyDelete
    Replies
    1. புறப்பொருள் வெண்பாமாலையில் இவ்வெண்பா எடுத்தாளப்பட்ட காரணத்தைக் கருத்தில் கொள்க. நன்று.

      Delete