குறள்: சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறம்கூர்ந் தனையது உடைத்து -1010
பொருள்: மாட்சிமையுடைய செல்வர்களுக்கு வரும் சிறிய வறுமை, மழைபெய்யாது உலக வளம் குறைந்தது போன்றதே.
விளக்கம்: இத்திருக்குறள் ‘நன்றிஇல் செல்வம்’ என்னும் அதிகாரத்தில் இருக்கிறது. இங்கே நன்றி என்பது நன்மையைக் குறிக்கிறது. நன்மையைக் கொடுக்காத செல்வத்தைப் பற்றி திருவள்ளுவர் இவ்வதிகாரத்தில் சொல்கிறார். பிறர் பொருளில் தொண்டு நிறுவனங்களை நடத்துவோரிடமிருக்கும் செல்வம் பற்றியோ அத்தகைய செல்வந்தர் பற்றியோ கூறவில்லை. தனிப்பட்ட மனிதர் பற்றியே இது பேசுகிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
சீர் என்பது பெருமை, மாட்சிமை, சிறப்பு, செல்வம், அழகு குறிக்கும் சொல்லாக இன்று கருதப்படுகிறது. இவை யாவும் சேர்ந்த தன்மையையே சீர் எனும் சொல் குறிக்கிறது எனலாம். பெருமை, மாட்சிமை என்பன தான் கற்ற கல்வியை மற்றோரும் அறிந்து கொள்ள எடுத்துச் சொல்லி கற்பிப்பதாலும், தான் வருந்தி உழைத்த பொருளை பிறருக்குக் கொடுப்பதாலும் கிடைப்பவையாகும். பிறரது பொருளை தன் பொருள் போல் கொடுப்பதால் கிடைப்பது சிறப்பே. அதனால் பெருமை கொள்ள ஏதுமில்லை. அப்படிப் பெருமை கொண்டாலும் அது தற்பெருமையே ஆகும்.
பிறர் பொருளைக் கொடுப்போரிடம் இருந்து தன் பொருளைக் கொடுப்போரை உயர்வாக வேறுபடுத்திக் காட்டவே ‘சீருடைச் செல்வர்’ எனப் போற்றுகிறார். ‘துனி’ என்றால் வறுமை. சிறுதுனி - சிறிய வறுமை. தான் உழைத்த பொருளை, தன் முன்னோர் உழைத்த பொருளை பிறருக்குக் கொடுப்போனுக்கு ஏதோ ஒருவகையில் சிறிய வறுமை வந்தால் அந்த வறுமை எப்படிப்பட்டது என்பதையே இக்குறள் எடுத்துச் சொல்கிறது.
மழைக் காலத்தை மாரிக்காலம் என்போம் அல்லவா! இங்கே மாரி என்பது மழையைக் குறிக்கின்றது. மழை பெய்யாது போவதை வறம் கூர்தல் என்கின்றார். தனக்கு உடைமையானவற்றை பிறர் நலன்கருதிக் கொடுக்கும் பெருமைமிக்க செல்வருக்கு உண்டாகும் சிறுவறுமை மழைவளம் குன்றியதைப் போன்றதே. ஏனெனில் மழையின்றி வாடும் உயிர்கள் மீண்டும் மழை பொழிய செழிப்பு அடையும். அதுபோல சிறுவறுமை வந்த சீருடைச் செல்வர்க்கு மீண்டும் பொருள் சேரும் அவர்கள் அப்போதும் முன்போல அள்ளி வழங்குவர்.
No comments:
Post a Comment