குறள்:
“வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறுஎய்தி உள்ளப் படும்” - 665
பொருள்:
தாம் செய்த செயலில் வெற்றியடைந்தவரின் செயல்திறன் ஆட்சியாளருக்கு தெரியவருவதால் அது எல்லோராலும் மதிக்கப்படும்.
விளக்கம்:
வெற்றியடைதல் வீறு எய்தல் என்று கூறப்படும். மாண்பு என்றால் மேன்மை. மாண்டார் மேன்மையடைந்தார். வினை என்பது நாம் செய்யும் செயல். ஒருவரின் மனவுறுதியை திட்பம் என்பர். இந்தச் செயலை என்னால் செய்து முடிக்கமுடியும் என்னும் மனஉறுதியுடன் அதனைச் செய்தல் வினைத்திட்பம் ஆகும்.
ஒருவர் செய்த செயல் பிறருக்கு தெரியவருதலை ஊறுஎய்தல் என்பர். ஒருவரின் செயற்திறன் எவ்வாறு மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுகின்றது என்பதை திருவள்ளுவர் இக்குறளில் கூறியுள்ளார். ஒரு செயலை இப்படி இவ்வாறு செய்வேன் என எவராலும் சொல்ல முடியும். ஆனால் சொல்லியபடி செய்வது கடினமாகும். சொல்லியபடி செய்வதற்கும், செய்ய நினைத்ததை செய்து முடிப்பதற்கும் மனவுறுதி வேண்டும். எமது மனவுறுதியே செய்யும் செயலை செய்து முடிக்க வைக்கின்றது. மனவுறுதியுடன் செய்யும் செயல் நிச்சயம் வெற்றி பெறும்.
அப்படி தாம் செய்த செயலில் வெற்றியடைந்தோர் யார் என்பதை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஆட்சியாளர்களே. (இந்நாளில் ஊடகங்கள் அதனைச் செய்கின்றன). உதாரணமாகச் சொல்வதானால் ஒன்றைச் செய்தவர் எங்கே இருந்தார்? என்ன செய்தார்? எப்படிச் செய்தார் என்பது யாருக்கும் தெரியாதிருக்கும். ஆனால் அவரது செயல்திறமையை இனம் கண்டு அரசாங்கங்களும் ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக்காட்டும். அதன் பின்னர் உலகம் அவர் யார்? அவர் என்ன செய்தார்? என்பதை அறிந்து அவரைப் புகழும்.
தாம் செய்த செயலில் வெற்றி பெற்று சிறப்படைந்தோரின் திறமையும், எப்படி அதனைச் செய்தார் என்ற செய்தியும் நாட்டை ஆட்சி செய்வோர்க்கு முதலில் தெரியவருவதாலேயே, அச்செயல் மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற்று போற்றப்படுகின்றது.
No comments:
Post a Comment