தன் மனவேதனையைப் போக்க ஓரு நாள் கூண்டுக்கிளியை கையில் எடுத்து தென்னை, மா, பலா, வாழை நிறைந்திருக்கும் அந்த தென்னைமரச் சோலையில் சிறகடித்து பறக்க விட்டாள். பல காலமாகப் பறக்காது இருந்த கிளி பையப் பைய (மெல்ல மெல்ல) பறந்தது. ‘கிளியே! நான் உனக்கு முக்கனி தர மூன்று வேளையும் உண்டீரே! காதலனைக் காணாததால் கண் உறக்கம் போய்விட்டது. பையப்பையப் பறந்து சென்று என்நிலையை எடுத்துச் சொல்லி, பொழுது சாயும் நேரம் புன்னைமர மேட்டிற்கு காதலனை அன்போடழைத்து (இட்டுவா) வா!’ என்கிறாள். அவள் காதலில் கிளியோடு கொஞ்சியது எமக்கு ஒரு நல்ல நாட்டுப்பாடலைத் தந்திருக்கிறது.
பெண்: தென்னமரச் சோலையில
சிறகடிக்கும் கிளியாரே!
முக்கனியும் கலந்துதர
மூனுவேள உண்டிரே!
கன்னங்கருத்த மீசை
கட்டழகு மச்சானாரை
கண்டுபல நாளாச்சு
கண்ணுறக்கம் போயாச்சு!
பையப்பறந்து சென்று
சேதிபல சொல்லி
புன்னைமர மேட்டிற்கு
பொழுதுபட இட்டுவா!
- நாட்டுப்பாடல் (பளை)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
சங்க காலத்தில் வாழ்ந்த கன்னி ஒருத்தியும் காதலிதாள். அவளோ, காட்டில் வாழும் குறவர்களின் மகள். காதலனோ பலாமரங்கள் நிறைந்த மலைச்சாரலையுடைய மலை நாட்டுத் தலைவன். காட்டில் குறவர் விதைத்த தினை முற்றத்தொடங்கியது. அந்தத் தினைக்கதிரை உண்ண கிளிகள் வந்தன. தினையை உண்ண வரும் கிளிகளை ஓட்டுவதற்காக, அக்கன்னியை தினைக் கொல்லைக் காவலுக்கு வைத்தனர்.
தினையை உண்ணும் கிளிகளை துரத்த வேண்டியது அவளின் வேலை. காதல் வசப்பட்டு இருக்கும் அவளோ, ‘வளைந்த தினைக்கதிரைக் கொய்யும் சிவந்த வாயையுடைய பச்சைக் கிளியே! பயப்படாதே! நன்றாக தினையைச் உண்டு, உன் பசிக்குறையை முடித்த பின், எனக்கு இருக்கும் குறையை நீக்க வேண்டும். ஆதலால் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறேன். பலாமரச்சாரல் பக்கம் உன் உறவுகளைக் காணப் போவாயானால் அம்மலை நாட்டுத் தலைவனிடம், இந்த மலையின் காட்டுக் குறவரின் இளமகள் தினைக் கொல்லைக் காவலுக்கு வந்துவிட்டாள் என்று சொல்’ என்கிறாள். சங்க காலக் கானக்குறவர் மகள் தன் காதலனைக் காண கிளிக்கு தினைப்புனத்தையே உண்ணக் கொடுத்து கெஞ்சியதை செம்பியனார் எனும் சங்கப் புலவர் மெல்லப் படம் பிடித்து பாடலாகத் தந்துள்ளார்.
“கொடுங் குரற் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு
நின் குறை முடித்த பின்றை, என்குறை
செய்தல் வேண்டுமால் கை தொழுது இரப்பல்
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு
நின் கிளை மருங்கின் சேறியாயின்
அம்மலைக் கிழவோர்க்கு உரைமதி - இம்மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே” - (நற்றிணை: 102)
சொல்விளக்கம்:
இட்டுவா - அன்புடன் அழைத்துவா
குரல் - கதிர்
செவ்வாய் - சிவந்த சொண்டு
அஞ்சல் ஓம்பி - பயப்படாது
ஆர்பதம் - உணவு
பல் கோள் - பல காய்
பலவின் சாரல் - பலாமரச்சாரல்
நின் கிளை - உனது சுற்றம்
சேறியாயின் - செல்வாயாயின்
கிழவன் - தலைவன்
மடமகள் - இளமகள்
ஏனல் காவல் - தினைப்புனக் காவல்
இனிதே,தமிழரசி.
No comments:
Post a Comment