குழந்தைக் கண்ணன் வாய் திறந்தான்
குவலயம் ஏழும் தெரிந்தது என்பார்,
குந்தி இருக்க மரமும் இன்றி
கூடு கட்ட குச்சும் இன்றி
கம்பி மேல் அமர்ந்து என்றன்
குஞ்சு வளர்க்கும் குருவி நான்,
வாய் திறந்தது குஞ்சு உணவுக்காக
வாயினுள் எட்டிப் பார்த்தேன் ஆச்சரியம்
வையகம் யாவும் வறண்டு தெரிந்தது,
உய்யும் வழி அறியா உலகில்
சுற்றும் முற்றும் சூழ இருப்பதோ
முற்றம் இல்லா அடுக்கு மாடிகள்
குறுணி பொறுக்க நிலமும் இல்லை
அரிமணி அரிசியும் உண்பார் இல்லை
அரிசி போய் பீட்சா வந்தது
உலையும் விலையும் ஏறியது என்று
ஐபோனிலும் ஐபாட்டிலும் சட்டில் இருந்து
கதைத்து மாளும் உலகம் இது.
பையப் பறந்து வா குஞ்சே!
பச்சை ஊர் உண்டோ பார்ப்போம்!
- சிட்டு எழுதும் சீட்டு 50
No comments:
Post a Comment