Sunday, 10 February 2013

பக்திச்சிமிழ் - 45


கடைய முன்நிற்குமே
- சாலினி -

‘தெய்வம் உண்டா?’ என நாம் எழுப்பும் கேள்விக்கு, நம் தமிழ்ச்சான்றோர்கள் பலர் பலவகைப்பட்ட பதில்களைத் தந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் சிறுவயதில் தெய்வம் இல்லை என்ற கருத்தோடும், மது, மாது எனச் சிற்றின்ப ஆசைகளோடும் திரிந்திருக்கிறார்கள். அவர்கள் தத்தமது அநுபவத்தால் கண்ட உண்மையையே எமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கும் எம்மைப்போல் ‘தெய்வம் உண்டா? இல்லையா?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அந்த கேள்விக்கு அவரவர் கண்ட விடையை எமக்குத் தந்து சென்றிருக்கிறார்கள். 

பட்டினத்தார் தன் அநுபவத்தால் கண்ட உண்மையை 
“ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்று இரு” 
என்று கூறிச் சென்றுள்ளார்.

பட்டினத்தார் கூறினாரென்று தெய்வம் உண்டென்று நாம் எப்படி நம்புவது? தெய்வம் எப்படிப்பட்டது?  தெய்வம் உண்டா? இல்லையா?  அவற்றை அறிய வழி என்ன? கடல் நீரைக் கண்ணால் பார்த்ததும் கடல் நீரில் உப்பு இருக்கிறது என்று எம்மால் சொல்லமுடியுமா? கடல் நீரில் உப்புக்கரிப்பதை  அதைச் சுவைத்தவன் அறிவான். கடல் நீரைப் பாத்திகட்டி சூரியவெப்பத்தால்  உப்புவிளைவதைப்  பார்த்தவன் கடல் நீரிலிருந்து உப்பு கிடைத்ததை அறிவான். கடல் நீர் எப்படிப்பட்டது என்பதை இப்படி அறிந்தவர்கள் சொல்லியே நாம் அறிகின்றோம். 

இதுபோல் தெய்வத்தை அறிந்தோர் சொல்வதை வைத்தே நாமும் தெய்வத்தை அறியவேண்டும். தெய்வத்தை அறிய மிக இலகுவான வழியை திருநாவுக்கரசு நாயனார் எமக்குக் காட்டித்தந்துள்ளார். 
விறகு அதாவது காய்ந்த மரக்கட்டை. இரண்டு விறகுத் துண்டை எடுத்து ஒன்றோடு ஒன்று தேய்த்துக் கடையக் கடைய அதிலிருந்து தீ வெளிப்படும். பசும்பாலைக் கடையக் கடைய நெய் வெளிப்படும். மாணிக்க கற்களை வெட்டி கடையக் கடைய (பட்டைதீட்டி) மாணிக்கக்கல் ஒளிரும். இப்படிக் கடைந்து பார்க்காது விறகையும், பாலையும், மாணிக்கக் கல்லையும் கையில் வைத்துக் கொண்டிருந்தால் விறகில் இருந்து தீயையும், பாலில் இருந்து நெய்யையும் கட்டாந்தரையில் மண் மூடிக்கிடக்கும் மாணிக்கக்கல்லில் இருந்து விலைமதிக்க முடியாத மாணிக்கங்களையும் மனிதன் பெற்றிருப்பானா?

எனவே தெய்வத்தைப் பெறவேண்டுமா? உங்கள் உள்ளத்தை, உங்கள் சிந்தனையை நீங்கள் கடையுங்கள். எப்படிக் கடைவது? உங்களுக்கும் தெய்வத்துக்கும் இடையேயுள்ள உறவு என்னும் கோலை (மத்தை) நட்டு, அன்பு, பக்தி, காதல் போன்ற ஏதோ ஓர் உணர்வை கயிறாகக் கொண்டு உறவென்னும் கோலைச் (மத்தைச்) சுற்றி முறுகவாங்கிக் கடையக் கடைய தெய்வம் உங்கள் முன் நிற்கும் என்கிறது திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்.

விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்நிற்குமே!              - (ப.திருமுறை: 5: 90: 10)

No comments:

Post a Comment