ஒம்மடியில் தூங்கிடட்டா!
காதலன் ஒருவன் தன் காதலியிடம் ஊரறிய வந்து திருமணம் செய்து கொள்வதாக அவனது உம்மா மேல சத்தியம் செய்திருந்தான். அவளும் அவன் வரவுக்காகக காத்திருந்தாள். அவனோ வரவில்லை. அவளது தோழியர் மூலம் அவன் களத்து மேட்டில் இருப்பதை அறிந்து அங்கு செல்கிறாள். அவன் இரவு முழுவதும் நெல்வயலைக் காவல் காத்த அயர்வில் களத்து மேட்டில் இருந்த கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தான். அவள் வந்த சத்தம் கேட்டு கண்விழித்தவன், காதலியை, அதுவும் களத்து மேட்டில் அவன் தூங்கும் நேரம் வந்தவளைக் கண்டதும் வெட்கத்தில் திரும்பிப் படுத்தான் (ஒருக்கணித்துப் படுத்தல்). ஏன் வந்தாள் என்பதை அறிய அவளை ஓரக்கண்ணால் பார்த்தான். அவளைக் கண்டும் எழும்பாது திரும்பிப் படுத்து, ஓரக்கண்ணால் பார்ப்பதைக் கண்ட அவள் தான் வந்த காரணத்தையும், அவனின் செய்கைகளையும் சுட்டிக் காட்டி ஒரு பாடலாக சொல்கிறாள்.
காதலி: ஊரறிய வாரனென்னு
உம்மா மேல சொன்னவரு
ஒருக்கணித்து படுப்பதென்ன
ஓரக்கண்ணால் பார்ப்பதென்ன?
ஊரறிய வந்து 'அவளை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று அவளின் பெற்றோரிடம் அவன் கேட்கவில்லை' என்பற்காகவே அவள் அங்கு வந்திருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். உம்மா மட்டுமல்ல ஊர்க்காவல்காரனும் தூங்கிய பின்னர் ஊரார் அறிய வரவா? என்கிறான். எப்படி இருக்கிறது அவனின் கேள்வி? அப்படி வருவதுடன் அவள் மடியில் தூங்கவா? எனவும் கேட்கிறான்.
காதலன்: உம்மா உறங்கயில
ஊர்க்கா உறங்கயில
ஊரறிய நா(ன்) வரட்டா!
ஒம்மடியில் தூங்கிடட்டா!
- நாட்டுப்பாடல் (பொலநறுவை)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
குறிப்பு:
பொலநறுவைக் காதலரின் இந்த நாட்டுப்பாடல்கள் இரண்டு நல்ல தமிழ்ச்சொற்களை எமக்குத் தந்துள்ளன. ஒன்று - ஒருக்கணித்துப்படுத்தல். அதனை நாம் இன்று ஒருகளித்துப்படுத்தல் என்கிறோம். இரண்டாவது - ஊர்க்கா. கா என்றால் காப்பது. ஊர் + கா = ஊர்க்கா. ஊர்க்காவல்; ஊர்க்காவல்க்காரன். இன்றைய தமிழகத்துத் தமிழர் ஊர்க்கா என்பதை கூர்க்கா என்கின்றனர். ஊர்க்கா எனும் தமிழ்ச்சொல் பிறமொழி பேசியவர் வாயால் கூர்க்கா எனத்திரிபடைந்துள்ளது.
No comments:
Post a Comment