குறள்:
“அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்” - 768
பொருள்:
படைக்கு மாற்றானைச் சென்று தாக்கும் வீரமும் மாற்றான் படைவந்து தாக்கினால் தாங்கும் ஆற்றலும் இல்லை எனினும் தோற்றப் பொலிவால் படை பெருமை பெறும்.
விளக்கம்:
தன்னை எதிர்ப்பவரைச் சென்று தாக்கி வீரத்துடன் போர்புரிதல் அடல்தகை எனப்படும். எம்மை பிறர் வந்து தாக்கினால் அவர்களை எதிர்த்து தாக்கமுடியாது, அவர்களது தாக்குதலை தாங்கும் சக்தியையும் இழந்து நிற்கும் இயலாமையை திருவள்ளுவர் அடல்தகையும் ஆற்றல் இல் எனினும்’ எனக் கூறுகிறார்.
சிலர் நல்ல உயரமாகவும் மொத்தமாகவும் பார்ப்பதற்கு கொடூரமானவராகவும் இருப்பர். அப்படிபட்டோரிடம் அவரை எதிர்த்துத் தாக்குபவரை திருப்பித் தாக்கும் வீரமும் எதிரி கொடுக்கும் அடியை தாங்கிக் கொள்ளும் உடல் உறுதியும் இல்லாதிருக்கலாம். ஆனால் அத்தகையோரின் தோற்றப்பொலிவைக் கண்டோர் தாக்குவதற்கு தயங்குவர். அவரது கோழைத்தனம் எதிரிக்குத் தெரியாதபடியால் அவரது தோற்றமே எதிரியைப் பயந்து நடுங்கி அலறவைக்கும். இது போன்று, படையின் தோற்றப்பொலிவை படைத்தகை என்பர்.
தாக்க வருபவர் எம்மை தாக்காது தடுக்க அந்த தோற்றப்பொலிவு ஆயுதமாகப் பயன்படும். ஈழத்தில் உள்ள எம் உறவுகள் பிறரைத் தாக்கும் அடல்தகை இல்லாது தம்மைத் தாக்குபவரை எதிர்த்து நிற்கும் ஆற்றலும் அற்று இருக்கிறார்கள். புலம்பெயர் வாழ் நாடுகளில் உள்ள நாம் ஒன்றாக இணைந்து எமது தோற்றப் பொலிவை உலகுக்குக் காட்ட வேண்டும். நாம் ஒன்றுகூடுவதால் வரும் தோற்றப்பொலிவே எம் உறவுகளை மாற்றார் தாக்காது தடுக்கும் ஆயுதமாகப் பயன்படும்.
வீரத்துடன் போர்புரிதல், எதிர்த்து நிற்கும் ஆற்றல் இரண்டும் இல்லை என்றாலும் தோற்றப் பொலிவால் ஒற்றுமையால் பயன் பெறலாம்.
No comments:
Post a Comment