குறள்:
“குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்” - 1028
பொருள்:
தான் பிறந்த குடியின் உயர்வுக்காக பாடுபட்டு உழைப்பவர்க்கு காலநேரம் ஒன்றும் கிடையாது. சோம்பலால் என் குடும்பத்தில் உள்ளோர் வாழ நானா பாடுபட வேண்டும் என எண்ணி மானத்துடன் இருந்தால் அக்குடி கெட்டழிந்து போகும்.
விளக்கம்:
இத்திருக்குறள் 'குடி செயல் வகை' அதிகாரத்தில் எட்டாவது குறளாக இருக்கிறது. ஒருவன் தான்பிறந்த குடியை - குடும்பத்தை மேன்மை அடையச் செய்தலே குடி செயல் வகையாகும்.
பயிரை வளர்ப்பவரை பயிர்செய்வார் என்பது போல தான் பிறந்த குடியை வளர்ப்பவரே குடிசெய்வார். மடி என்பது சோம்பல். சோம்பலை வளர்ப்பது மடிசெய்தலாகும். தான் பிறந்த குடியை, குடும்பத்தை செழிக்கச் செய்ய விரும்புகின்றவர்க்கு இரவு, பகல், மழை, வெயில், பனி என்ற கால மாற்றங்கள்[பருவ மாற்றங்கள்] தெரிவதில்லை. அவரின் பார்வையில், செயலில் எண்ணத்தில் எல்லாம் தாம் பிறந்த குடியின் மானமே பெரிதாகத் தெரியும். அங்கே தன்நலம் மறந்து பொதுநலம் பேணப்படும்.
நாம் பிறந்தகுடி தமிழ்க்குடி. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. கல்லும் மண்ணும் எப்படி தோன்றியது என்பதை அறிந்திருந்த தமிழ்க்குடி. விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் தமது இரு கண்களாகக் காத்த குடி, தமிழ்க்குடி. இன்று உலகெங்கும் பத்துக்கோடி தமிழர் இருந்தும், குடிசெய்வார் யாருமில்லாக் குமுறும் குடி, தமிழ்க்குடி. மடிசெய்வார் பலர்கூடி, தாமே குடிசெய்வார் எனக்கூறி குழறுபடி செய்யும் குடி, நம் தமிழ்க்குடி.
இத்தனை கோடி தமிழர் இருக்க நான் மட்டுமா செய்யவேண்டும்? நான் செய்யப்போனால் எத்தனை பேர் என்னைப்பற்றியும், என்குடும்பத்தைப்பற்றியும் பேசுவர், எழுதுவர் என்ற தன்மான எண்ணத்தாலும் பலர் பொதுத்தொண்டு செய்ய வருவதில்லை. காய்க்கின்ற மரம் கல்லடிபடும் என்பதை அவர்கள் நினைப்பதில்லை. நாம் தமிழர் என்பதையும் மறந்து, தமிழனா அவன் திருந்தமாட்டான் என ஏதேதோ எல்லாம் கூறி நமது அறியாமையையும் சோம்பலையும் வளர்க்க காரணம் கற்பித்துக்கொண்டு வீணே இருந்தால் நம் குடி வாழுமா?
எவரொருவர் தன்நலம் அற்று, பிறர்நலம் பேணத் தொடங்குகிறாரோ அவர் மான அவமானம் கடந்தவராக, ஆனால் தன் குடிமானம் போற்றுபவராக வாழவேண்டும். அப்படி வாழ்ந்தால் அவர் பிறந்த குடி உயர்வடையும். தன்மானம் பெரிதென எண்ணி சோம்பலால் தன் குடும்பத்தின் தன்குடியின் வளர்ச்சியைக் கருதாதிருப்பின் அவரது குடி கெடும். தமிழ்க்குடியில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் சோம்பலை வளர்க்காது தமிழ்க்குடியை வளர்க்க வேண்டும் என்பதை தம் நினைவில் நிறுத்தச் சொல்லும் திருக்குறள் இது.
No comments:
Post a Comment