Wednesday, 14 December 2011

புங்குடுதீவு கிராயடி மண்



ஆண்:  கிராயடி மண்ணு
                      கிணத்தில நின்னு
            குடத்தில தண்ணி
                      அள்ளுற பெண்ணே!

என ஒரு பெண்ணின் பின்னே பாடித்திரிந்த புங்குடுதீவுக் காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்கின்றான். இரவு திருமணம் முடிந்த போதிலும் காலையில் அவனது கிராயடி வயலுக்கு சென்றுவிட்டான். அவள் கூறைச்சேலையைக் கூடக் கழற்றாது அவனுக்காக உணவைச் சமைத்து எடுத்து கூடையில் கொண்டு வருகிறாள். அவளைக்கண்டதும்

ஆண்:  கூறசேல கழற்றமுன்னே
                     கிராயடிவந்த கண்மணியே!
            கூடைச்சோறு கைதருவேன்
                     குனியலதாவே எனக்குஒன்னு!

என அவள் சுமந்து வந்த கூடையை இறக்கக் கைகொடுத்தவன் குனியும் போது தரச்சொல்லிக் கேட்டதை அவள் கொடுத்தாளோ இல்லையோ, அவனுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் மெட்டுக்கட்டி தன் காதலையும்  தீவுப்பகுதி மக்களின் விருந்தோம்பல் திறத்தையும் அன்பின் ஆழத்தையும் நாட்டுப் பாடலாக வடிக்கிறாள்.

பெண்:  கீரைகடைஞ்சு வச்சேன்
                     கிளிமீனை தீச்சுவச்சேன்
              வாழைப்பழமும் வச்சேன்
                      வாங்ககிளி சோறுதின்ன!

                                நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                         - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)


என் தந்தை இந்த நாட்டுப்பாடல்களை புங்குடுதீவு பெரியகிராயில் வாழ்ந்த சீதேவி மகள் பொன்னாச்சி என்னும் 75 வயதுடைய மூதாட்டி 1936ல் பாடியபோது கேட்டுப் பதிவு செய்தார். பண்டை நாள் தொட்டு வந்த 'தாய்வழிச் சமூக நிலைப்பாடு' நூறு வருடங்களுக்கு முன்னும் புங்குடுதீவில் இருந்ததை 'சீதேவி மகள் பொன்னாச்சி' என அந்த மூதாட்டி அழைக்கப்பட்டமை காட்டுகிறது.  தீவுப்பகுதிகளில் கணவன்மாரை 'கிளி' என அழைக்கும் வழக்கமும் மதிய உணவின் பின்னர் வாழைப்பழம் உண்ணும் வழக்கமும்  இன்றும் இருக்கிறது.  அப்பகுதிப் பெண்களின் கைப்பக்குவத்தில் மீன்தீயல் இன்றும் தொடர்கிறது. கருஞ்சேற்று நிலத்தை கிராய் என்பர்.

காந்தள் - கார்த்திகைப்பூ





















இந்தப் புங்குடுதீவுப் பெண் போலவே சங்ககாலப் பெண் ஒருத்தியும் திருமணம் செய்து கணவன் வீடு சென்றாள். அவள் செல்வந்தர் வீட்டுச் செல்லப்பெண்ணாக, தனது வீட்டில் ஒரு வேலையும் செய்யாது வளர்ந்தவள். ஆதலால் அவளைச் சீராட்டி பாராட்டி வளர்த்த செவிலித்தாய், 'கணவனுடன் அவள் எப்படிக் குடும்பம் நடத்துவாள்?' என்ற கவலையுடன் மகளைப் பார்க்கச் சென்றாள். அங்கே மகள் குடும்பம் நடத்தும் பாங்கைப் பார்த்தாள். அதை

"முளிதயிர் பிசைந்த காந்தள் மென்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே"       
                                                                          - (குறுந்: 167)
என மகளைப் பெற்றதாய்க்கு வந்து சொல்கிறாள். "புளித்த கெட்டித் தயிரை அவளது கார்த்திகைப்பூப் போன்ற மென்மையான விரல்களால் பிசைந்தாள். தயிர் பிசைந்த விரல்களை பட்டுச் சேலையில் துடைத்து, கழுவாமலே மீண்டும் அப்படியே உடுத்திக்கொண்டாள். குவளை மலர்போன்ற மைதீட்டிய  கண்களில் தாளித்த புகை மணக்க, தானே துழாவிச் சமைத்த இனிமையான புளிக்குழம்பை 'நன்றாய் இருக்கின்றது' எனக் கூறி கணவன் உண்டதால் ஒளிபொருந்திய நெற்றியை உடைய நம் மகளின் முகம் மிகவும் மகிழ்ச்சியுற்றது," என்கிறாள்.
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
1. முளி  - நன்றாகப் புளித்த.
2. காந்தள் - கார்த்திகைப்பூ.
3. கழுவுறு - கையைத்துடைத்த. 
4. கலிங்கம் - பட்டுச்சேலை.
5.  கழாஅது - கழுவாது. 
6. உடீஇ - உடுத்து.
7. உண்கண் - மைதீட்டிய விழி.
8. குய்ப்புகை - தாளித்த புகை.
9. கமழ - மணக்க.
10. தான் துழந்து - தானே துழாவி.
11. அட்ட - சமைத்த.
12 . தீம்புளிப்பாகர் - இனிய புளிக்குழம்பு.
13. நுண்ணிதின் - நுண்மையாக.
14. மகிழ்ந்தன்று - மகிழ்ந்தது.
15. ஒண்ணுதல் - ஒள் + நுதல் = ஒளிபொருந்திய நெற்றி.
16. முகனே - முகமே.

2 comments: