Wednesday, 14 December 2011

தீபங்களாடும் கார்த்திகைத் தீபப்பெருவிழா - பகுதி 1

தமிழர்களாகிய நாம் எத்தனையோ வகையான விழாக்களை பெருவிழாக்களாகக் கொண்டாடுகின்றோம். இந்த விழாக்களுக்கு மூலகாரணமாக எந்த விழாவை நம் முன்னோர் கொண்டாடி மகிழ்ந்திருப்பர்?  

இன்றைய மனிதன் இயற்கையின் ஆற்றலை வென்று அதனை அடக்கியாள்வதாக நினைக்கிறான். எனினும் மனிதனின் ஆற்றலை விட உலக இயற்கையின் ஆற்றல் பெரிதாக இருக்கிறது. 

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
 கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”         - (தொல்: சொல்: 635)
என்ற தொல்காப்பியரின் சூத்திரத்திற்கு அதன் உரையாசிரியர்களில் மூத்தவரான இளம்பூரணார், ‘உலகம்’ என்பதற்கு ஐம்பெரும்பூதங்களின் கலவையென விளக்கவுரை தந்துள்ளார். உலகமயமாக இருக்கும் நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் என்கின்ற ஐம்பூதங்களும் மனிதனைவிட ஆற்றல் மிக்கவையாக இருக்கின்றன. 


















மனிதன் என்று தோன்றினானோ அன்றிலிருந்தே இயற்கையுடன் போராடியே வாழ்கிறான். பனியால், மழைவெள்ளத்தால், சூறாவளியால், ஆழிப்பேரலையால், நிலநடுக்கத்தால், பூகம்பத்தால், காட்டுத்தீயால் மனிதன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பேரழிவுகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறான்.  தன்னைவிட ஐம்பெரும் பூதங்களுக்கு சக்தி அதிகம் என்பதை அவற்றால் எற்பட்ட  அழிவுகள், ஆதிமனிதனுக்கு உணர்த்தியது. எனவே மனிதன் நிலம், கடல், காற்று, நெருப்பு போன்றவற்றைக் கண்டு பயந்தான். 
ஐம்பூதங்களிலே காற்றும் ஆகாயமும் உருவம் இல்லாத அருவங்களாகும். நிலம், நீர் இரண்டும் உருவமுடையன. தீ அருவுருவானது. இது தீ என்று பார்க்கமுடியாத தீயை காட்டுத்தீயாகவும் எரிமலையாகவும் மட்டுமல்லாமல் சதுப்பு நிலங்களிலும் மனிதன் கண்டான். அருவாய் உருவாய் அருவுருவான தீயே அவனை மின்னலாகவும் காட்டுத்தீயாகவும் எரிமலையாகவும் தாக்கி அழித்தது. ஆதலால் தீயைக்கண்டே பெரிதும் பயந்தான்.
அந்தத்தீயே  மனிதனை குளிரிலும் பனியிலும் ஈரத்திலும் இருந்து காத்தது. அவனுக்கு வேண்டிய உணவுகளை சுட்டு சமைத்து உண்ணவும் பயன்பட்டது.  கொடிய காட்டு விலங்குகளில் இருந்து தன்னைப் பாதுகாக்க தீயை அவன் ஆயுதமாக்கினான். தீயை வழிபட்டால் அது தன்னைக் காக்கும் என நம்பினான். தீயை வழிபடத்தொடங்கினான். மனிதனின் பயமே பக்திக்கு வழிவகுத்துக் கொடுத்தது. இன்றும் தாய் தந்தையரை, குருவை, பயபக்தியுடன் வழிபடவேண்டும் என்று சொல்வதால் அதனை அறியலாம்.
















ஆதிமனிதனின் தீ வழிபாடே தீபவழிபாடாக வளர்ச்சி அடைந்தது. ஆதிமனிதனின் தீ வழிபாடும் எரிமலை வழிபாட்டில் இருந்து முகிழ்ந்ததேயாகும். எரிமலை கக்கிய புகை விண்ணைத் தொட்டது. எங்கும் இருள் சூழ, நிலம் நடுங்க வெடித்துச் சிதறிய மலையும், வேகமாகப் பாய்ந்து ஓடித் தகித்த அனற்குழம்பும் கண்டு திகைத்த மனிதன் எரிமலையை வழிபட்டான். அந்த எரிமலை வழிபாட்டின் எச்சமாக நிற்பதே திருவண்ணாமலை உச்சியில் நடைபெறும் கார்த்திகைத் தீபவழிபாடு.
கார்த்திகைத் தீபவழிபாடு பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியிற்கூட சிவனொளிபாத மலையிலும் நடந்திருக்கிறது. மாறவர்மன் குலசேகரபாண்டியன் கி பி 1268ம் ஆண்டு தொடக்கம் கி பி 1311ம் ஆண்டுவரை பாண்டியப் பேரரசனாக இருந்தான். அவனின் மகள் வீரமாதேவி. அவளது வரலாற்றுக் குறிப்பு; கி பி 1284ம் ஆண்டு தொடக்கம் இலங்கை மாறவர்மன் குலசேகரபாண்டியனின் ஆட்சியின் கீழ் இருந்ததைச் சொல்கிறது. அவள் சோழப் பேரரசின் அழிவுக்குக் காரணமாய் இருந்த கோப்பெருஞ் சிங்கனின் பேரன் நரசிம்மனை மணந்தவள். மாலிக்கபூரின் தென்னகப் படையெடுப்பின் பொழுது (கி பி 1311ல்) மாறவர்மன் குலசேகரபாண்டியன் முதுமையால் நோய்யுற்றிருந்தான். ஆதலால் அவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த இலங்கைக்கு அவனை அழைத்துச் சென்று, புங்குடுதீவில் கோட்டை கட்டி வாழ்ந்தாள். புங்குடுதீவில் அவள் கோட்டைகட்டி வாழ்ந்த இடம் இன்றும் கோட்டைக்காடு என்றே அழைக்கப்படுகிறது.
அவள் இலங்கை சென்றபோது அங்கு கண்டவற்றை தன் வரலாற்றுக் குறிப்பில் எழுதியுள்ளாள். அதில் 
"கார்த்திகை விளக்கம் காடெல்லாம் விளங்க
பார்த்திருந்தோர் நயனம் பனிக்க - சீர்நல்கு
சிவமெனும் செந்நிறத்து அம்மான் அமர்
சிவனொளி பாதமலை ஈதே"
எனக் குறித்துள்ளாள். கார்த்திகை விளக்கொளி காடுகளை மிளிரவைத்தது. அதைப் பார்த்தவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் சொறிந்தது. சிறப்புக்களைத் தரும் சிவந்த நிறத்தயுடைய சிவன் அமர்ந்து இருக்கும் சிவனொளி பாதமலை இது என்கிறாள். வீரமாதேவி இப்பாடலின் மூலம் எழுநூறு வருடங்களுக்கு முன் சிவனொளிபாதமலையில் கார்த்திகை விளக்கீடு நடந்தமைக்கான ஒரு வரலாற்றுப் பதிவை எமக்குத் தந்து சென்றுள்ளாள். 
செவ்வொளியைக் கக்கிய எரிமலையையே சிவனொளி என அழைத்தனர். அந்த எரிமலையின் ஞாபகமாகவே இன்றும் கார்த்திகை விளக்கீட்டின் போது சொக்கப்பனை எரிக்கிறோம். சிவன் - சொக்கன். அந்தச் சொக்கன் - சொக்கப்பன் ஆகி, சொக்கப்பனை ஆகி, சொக்கப்பானையாய் நிற்கிறார்.  ஆனால் இப்போது சுவர்க்கப்பானை ஆக மாறியுள்ளார். இன்னும் என்னென்ன ஆவாரோ அவருக்கே வெளிச்சம். கார்த்திகைத் தீபத் திருநாளன்று சொக்கப்பனை எரிக்கப்படும் போது, உண்டாகும் வெடிச்சத்தங்கள், எங்கும் பரந்து ஓங்கி எரியும் தீ, அதைச் சூழ நிற்கும் புகை இவையாவுமே எரிமலையின் ஞாபகச் சின்னங்கள் என்பதை உங்களுக்குக் காட்டவில்லையா? 
திருவண்ணாமலையிலும் சிவனின் சோதிவடிவை - செந்நிறவடிவையே வழிபட்டனர். திருவண்ணாமலையை அருணாசலம், சோணகிரி எனவும் அழைப்பர்.  அருணமும் சோணமும் செந்நிறத்தையே குறிக்கும். வீரமாதேவி சொன்ன செந்நிறத்து அம்மானே சிவனொளிபாத மலையிலும் திருவண்ணாமையிலும் நீள்எரியாக நின்றார். 
உலகஉயிர்கள் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கக்கண்ட மனிதன், தீயின் சுடரொளியுள் திகழ்ந்த செந்நிறத்தை சிவன் என ஆணாகவும் நீலநிறத்தை சக்தி எனப் பெண்ணாகவும் படைத்துக் கொண்டான். மனித அறிவு முதிர முதிர அர்த்த-நாரீஸ்வர தத்துவத்தை சிவசக்தி சங்கமமான நெருப்பில் இருந்தே உருவாக்கி இருக்கிறான்.
இந்த உண்மை திருவண்ணாமலையில் நடைபெறும் திருக்கார்த்திகைத் திருவிழாவை நேரடியாகப் பார்த்தோருக்கு தெரிந்திருக்கும். திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு முன்னர், மலையடிவாரத்தில் உள்ள அண்ணாமலையார் சன்னதியில் அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு மிகவேகமாக ஓடி, கொடிக்கம்பத்தைச் சுற்றிவருவார். அர்த்தநாரீஸ்வரர் கொடிக்கம்பத்தைச் சுற்றிய பின்னரே மலைஉச்சியில் தீ சுடர்விட்டு எரியத்தொடங்கும். இது அர்த்தநாரீஸ்வரரே தீ என்பதைக் காட்டுவதாகும்.
கார்த்திகை மாதத்தின் மதிநிறைந்த நன்னாள் அன்றே சக்தி சிவனுடன் கலந்தாள். சிவசக்தி ஆனாள். அர்த்தநாரீ - ஈஸ்வரனுடன் கலந்து அர்த்தநாரீஸ்வரன் ஆன நாள் கார்த்திகைப் பெருநாள் என்பது பண்டைநாளில் இருந்துவரும் வழக்காகும்.  உலக உயிர்ப்படைப்பிலே - தாய்மையைத் தாங்கி உலகை வழிநடத்தும் பெண்மையே சக்திமிக்கது. அதனைக் காட்டக்கொண்டாடும் நாளே கார்த்திகைத் திருநாள். விஞ்ஞான அடிப்படையில் பார்த்தாலும் நெருப்பில் உள்ள செந்நிறச்சுடரை விடவும் நீலநிறச்சுடரே சக்தி கூடியது. சக்தியே சிவனுடன் கலந்து சோதியாக நின்றதை திருமூலர் தன் திருமந்திரத்தில்
"பைந்தொடியாளும் பரமன் இருந்திட
திண்கொடியாகத் திகழ்தரு சோதியாம்
விண்கொடியாகி விளங்கி வருதலால்
பெண்கொடியாக நடந்தது உலகே"            - (திருமந்திரம்: 1143)
என திருமந்திரமாகச் சொல்லிச் சென்றுள்ளார்.
பரமசிவன் இருக்க, அழகிய ஒளிவட்டமான சக்தி வலிமைமிக்க பேரொளிப் பிழம்பாகி கொடிபோல் படருவாள். அவள் பேரண்ட வெளியில் படர்ந்து விளங்கி வருவதால் இவ்வுலகு அனைத்தும் பெண்ணாகிய கொடியால் நடந்து செல்கின்றது. இத்திருமந்திரம் சொல்லும்
"பெண்கொடியாக நடந்தது உலகே"  
என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பெண் இல்லையெணின் உயிர்களுக்கு பிறப்பேது?  உயிர் சுமந்து உருகுவது பெண்மையே. ஆதலால் சான்றோர் உலக இயக்கமே பெண்ணால் நடந்தது என்றனர்.
எரிமலை போல் இல்லாமல் மெல்லிய சுடர்விட்டு எரியும் குச்சுகளின் அழகைக்கண்டும் மனிதன் இரசித்தான். அந்தக் குச்சுகளை எரித்து வரிசையாக நாட்டி இருளைப் போக்கினான். இருளில் மறைந்திருந்த பொருட்களை அவனுக்கு விளக்கிக் காட்டியதால் அதனை விளக்கு என அழைத்தான். விளக்கின் சுடரொளியே அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை விளக்கி, பெண்ணின் சக்தியை உலகிற்கு உணர்த்துகிறது. அதனாலேயே காலங்காலமாக தமிழ்ப்பெண்கள் தீபங்கள் ஆடும் கார்த்திகைத் தீபத்திருவிழாவை பெருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் 1350 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவர் பூம்பாவையை உயிர் பெற்று எழப்பாடிய தேவாரமொன்றில்
"வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்"      -(ப.முறை: 2: 47: 3)
எனப் பூம்பாவையைக் கேட்கிறார். 

'மயிலாப்பூரின் அழகிய தெருக்களில் வளையல் அணிந்த பெண்களும் சந்தனம் பூசிய இளமுலையுடைய கன்னியரும் கொண்டாடுகின்ற சோதிவடிவான கபாலிச்சரத்தானின் தொன்மையான கார்த்திகை நாளின் விளக்கீட்டைக் காணாது போவாயோ!  பூம்பாவாய்!' என்கிறார். இத்தேவாரத்தில் திருஞானசம்பந்தர் மூன்று விடயங்களை எமக்காகப் பதிவு செய்திருக்கிறார்.
முதலாவதாக "துளக்கில் கபாலீச்சரத்தான்" என்பதில் கபாலீச்சரத்தான் சோதிவடிவானவன் என்கிறார். துளக்கம் என்பது ஒலியோடு சேர்ந்த ஒளிவடிவமாகும். துளக்கம் அசைவு, ஒலி, ஒளி என்பவற்றைக் குறிப்பதால் வெடிச்சத்தத்துடன் எரிவதை துளக்கம் என்பர். எரிமலையும் துளக்கம் உள்ளது என்பது இங்கு நோக்கத்தக்கது. இரண்டாவதாக "தொல்கார்த்திகை நாள்" என்பதில் பண்டைக்காலம் தொட்டு கார்த்திகை விளக்கீடு  கொண்டாடப்பட்டு வரும் வரலாற்றைத் தந்துள்ளார். மூன்றாவதாக "தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு" என்று பெண்களே கார்த்திகை விளக்கீட்டைக் கொண்டாடியதை கோடிட்டுக் காட்டியுள்ளார். 
ஞானக்குழந்தையான திருஞானசம்பந்தர் சோதிவடிவான சிவனின் கார்த்திகைத் திருநாளை பெண்கள் விளக்குகள் ஏற்றி கொண்டாடியதை மிகத்தெளிவாகத் தேவாரத்தில் தந்துள்ளார். அவர் மட்டுமல்ல அவருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஔவையார், நக்கீரர், நப்பூதனார், பாலைபாடிய பெருங்கடுங்கோ, பொய்கையார் போன்ற பல சங்ககாலப் புலவர்களும் சங்ககாலத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகைத் தீபப் பெருவிழாவை பதிவு செய்துள்ளனர். அவர்களும் கார்த்திகை விளக்கீட்டை பெண்கள் கொண்டாடியதாகவே காட்டுகின்றனர்.















அது ஒரு கோடைக்காலம். வானத்தில் ஊர்ந்து செல்லும் ஒளிவட்டமான சூரியன், நெருப்பாகச் சிவந்து வெப்பத்தைக் கக்குகிறது. அவ்வெப்பத்தால் காய்ந்தது அழகிய காடு. அதனால் இலையற்றுப் போன இலவமரத்தில் ஒரு மொட்டும் விடாமல் எல்லா மொட்டும் மலர்ந்திருந்தன. அக்காட்சி அவ்வழியே சென்ற ஔவையாருக்கு, மங்கையர் கூட்டம் ஒன்றாகச்சேர்ந்து ஆரவாரத்தோடு ஏற்றிய அழகிய தீபங்களின் சுடர் கொடியாகப் படர்ந்து நீண்டு செல்வது போல் தோன்றியது. அதனை 
"வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி"   -(அகம்:11: 1-5)
என அகநானூற்றுப் பாடலில் கூறும் சங்ககால ஔவையாரும் கார்த்திகை விளக்கீட்டை மங்கையர் கொண்டாடியதாகாக் காட்டுவது ஒரு வரலாற்றுப் பதிவல்லவா!  
இந்த ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின் காலத்தவர். தொல்பொருளாய்வில் அதியமான் பெயர் பதித்த மோதிரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மோதிரம் கி மு முதலாம் நூற்றாண்டிற்கும் முந்தியது என்கின்றனர். அதியமானும் ஔவையாரும் வாழ்ந்த காலத்தைக் கொண்டு பார்க்கும் போது தமிழ்ப்பெண்கள் இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் கார்த்திகை விளக்கீட்டை பெருவிழாவாகத் தொடர்ந்து கொண்டாடி வருவது உறுதியாகிறது.
சங்ககாலத் தமிழ்ப்பெண்கள் தீபங்கள் ஆடும் கார்த்திகைத் தீபப்பெருவிழாவை எப்படிக் கொண்டாடினர் என்பதை தொடர்ந்து காண்போம். அதுவரை...
இனிதே, 
தமிழரசி.

3 comments:

  1. மாவளி சுற்றுவதும் இதன் காரணம் ோ

    ReplyDelete
    Replies
    1. ஆம். எரிமலையின் மாஒளியானது பெருங்காற்றால் - மாவளியால் தீப்பொறிகள் சுற்றிச் சுழன்று வீழ்வதையே மாவளி சுற்றல் இன்றும் நினைவு கூறுகிறது.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete