Friday, 16 December 2011

குறள் அமுது - (13)


குறள்:
“பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி
தேரினும் அஃதே துணை”                                      - 132

பொருள்:
ஒழுக்கத்தை வருந்திப் பாதுகாக்க வேண்டும். எதை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்த்து தெரிந்து எடுத்தாலும் என்றும் எமக்கு ஒழுக்கமே துணையாகும்.

விளக்கம்:
இத்திருக்குறள் ஒழுக்கமுடைமை எனும் அதிகாரத்தின் இரண்டாவது குறளாகும். ஒழுங்கு, ஒழுகல், ஒழுக்கம் என்பன ஒத்த பொருள் தரும் சொற்களாகும். அதாவது முறைமை, தன்மை, வழி, நெறி போன்ற எல்லாவற்றையும் ஒழுக்கம் என்ற சொல் குறிக்கின்றது. நல்ல ஒழுங்கு முறையை, நல்வழியைப் பின்பற்றுவதே ஒழுக்கமாகும்.
பூமி ஓர் ஒழுங்கில் சுற்றுகின்றது. அதனால் இரவு பகல் ஒழுங்காக ஒவ்வொரு நாளும் வருகின்றது. அதுபோல் ஒழுகல் என்பது தொடர்ந்து நடைபெறும் ஒரு செயற்பாடாகும்.  இன்றுமட்டும் நல்ல ஒழுக்கமுடையவராக இருந்து நாளை மாறுவது ஒழுக்கமாகாது. ஆதலால் திருவள்ளுவரும் இக்குறளில் ‘பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம்’ - ஒழுக்கத்தை வருந்திப் பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள் என எமக்குக் கட்டளையிடுகிறார். நாம் செய்யும் செயல்களில் ஒழுக்கமே என்றும் எமக்குத் துணையாக வரும் என்பதை ‘தேரினும் அஃதே துணை’ எனச் சுட்டிக்காட்டுகிறார்.
ஒருமனிதன் செய்யும் எந்தச்செயலிலும் ஒரு ஒழுங்கு - ஒழுக்கம் இருக்க வேண்டும். உங்கள் செய்கை மற்றவர்க்கு இடையூறை ஏற்படுத்தக்கூடாது. உங்கள் வண்டியை மக்கள் நடமாட்டமுள்ள வீதியில் 80 மைல் வேகத்தில் ஓட்டிச்செல்வீர்களா? மக்கள் அதிகமாகச் செல்லும் இடத்தில் வண்டியை மெதுவாக ஓட்டவேண்டும். அது சமூகம் ஏற்படுத்திய சாலை ஒழுங்குச் சட்டமாகும். அதுவும் ஒருவகை ஒழுக்கமே.
ஆண் பெண் உறவுகளூக்கு அப்பால் ஒழுக்கம் எனும் சொல் மிகவும் ஆழமான கருத்தைத் தரும் சொல் என்பதை நாம் உணரவேண்டும். நாம் செல்லும் கடையில், பாடசாலையில், ஆலயத்தில், வைபவத்தில், வைத்தியசாலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் ஒழுக்கமே. உண்ணும் உணவிலும் உடுக்கும் உடையிலும் ஒரு ஒழுங்கு ஒழுக்கம் இருக்க வேண்டும்.

ஒழுக்கத்தை உறுதியாக யாரால் கடைப்பிடிக்க முடியாது என்பதை திரிகடுகம் என்னும் நூல்
"நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில்
இழுக்கான சொல்லாடு வானும் இம்மூவர்
ஒழுக்கம் கடைபிடியா தார்"                          - (திரிகடுகம்: 94)
எனச்சொல்கிறது. நட்பு இல்லாதவரிடம் அன்பு செலுத்துபவனும் தான் பாதுகாக்கவேண்டிய மனைவியை [தன் உழைப்பில்  வாழ்கிறாள் எனக்கூறி] இகழும் அறிவில்லாப் பேதையும் மனிதப்பண்பு இல்லாத இழிவான சொற்களைச் சொல்பவனும் ஆகிய இம்மூன்று தன்மை உடையோரும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க முடியாதோர் என்கிறது.
எனவே எல்லா இடத்திலும் எல்லா வழிகளிலும் எம்மோடு துணையாக வரும் ஒழுக்கத்தை வருந்திப்பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment