கி பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படும் இளங்கோவடிகள் தாமெழுதிய சிலப்பதிகாரத்தில்
"நாரதன் வீணை நயந்தெரி பாடலும்" -(சிலம்பு: 6: 18)
என வீணையைக் குறிப்பிடுகிறார்.
சமணர்களின் போதனையால் அரசன், திருநாவுக்கரசு நாயனாரை சுண்ணாம்புச் சூளையுள் இட்டான். இறைவனின் கருணையால் அந்த சூளையின் வெப்பம் அவருக்கு குற்றமற்ற வீணையின் நாதம் போலவும், மாலைநேர நிலவொளிபோலவும் இருந்ததை திருநாவுக்கரசு நாயனாரே தமது தேவாரத்தில்
"மாசில்வீணையும் மாலைமதியமும்" -(ப.முறை: 5: 90: 1)
எனச்சொல்கிறார். திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் (கி பி 624) வாழ்ந்த தமிழர் வீணை இசையை நன்கு அறிந்திருந்தனர் என்பதை இது காட்டுகின்றது.
தஞ்சையை ஆண்ட இரகுநாதநாயக்கர் காலத்திலேயே (கி பி 1645) வீணை செய்யப்பட்டதாக சிலர் எழுதுவது தமிழிசை வரலாற்றுக்குச் செய்யும் துரோகமாகும். இரகுநாதநாயக்கருக்கு ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த இளங்கோவடிகளும் ஆயிர வருடங்களுக்கு முன்வாழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரும் வீணையைக் குறிப்பிட்டுள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆதலால் இரகுநாதநாயக்கர் காலத்தில் பண்டைத் தமிழரின் வீணைக்கு புது வடிவம் கொடுக்கப்பட்டது எனச் சொல்லலாம்.
கழிப்பாலைக் கோயிலுக்குச் சென்ற திருநாவுக்கரசு நாயனார் அக்கோயிலிலுள்ள இறைவனைக் கண்டு தன்னை(ஆன்மா) இளம் பெண்ணாக நினைத்து இறைவன் மேல் காதல் கொண்டு
"பண்ணார்ந்த வீணை பயின்ற
விரலானே என்கின் றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை
பெருமானே என்கின் றாளால்
பண்ணார் முழவதிரப் பாடலொடு
ஆடலனே என்கின் றாளால்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ" - (ப.முறை: 4: 6: 6)
எனப்பிதற்றுவது போல இத்தேவாரத்தில் சொல்கிறார். பண்ணமைந்த இசை எழ வீணையை மீட்டும் விரலை உடையவன் இறைவன் என்கிறார். திருநாவுக்கரசு நாயனார் போல நீங்களும் பண்ணார்ந்த வீணை பயின்ற விரலானைக் காணவேண்டுமா? கும்பகோணத்திலுள்ள நாகேஸ்வரன் கோயிலுக்குச் சென்று இந்த வீணாதரரைப் பார்த்து மகிழுங்கள்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment