Wednesday, 28 March 2012

பக்தர்களே! இங்கே வாருங்கள்! - 2

எத்தனை விதமான இயல்புகள் படைத்தவனாக மனிதன் இருக்கின்றானோ அத்தனை விதமான இயல்புகளையும் இறைவனிடம் பக்தி பண்ணுவதற்கு அவன் பயன்படுத்திக் கொள்ளலாம். மனிதவாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதை நாம் அநுபவத்தில் காண்கின்றோம். எம்மிடம் பொருளில்லையே, வீடு இல்லையே, குழந்தை இல்லையே என ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் துன்பப்படுகிறோம். துன்பப்படுதல் என்னும் எமது இயல்பால் நாமே பெரும் துன்பத்துக்கு உள்ளாகின்றோம். 


துன்பம் மனிதனுக்கு உதவாதது என்பது மற்றைய சமயநெறிகளின் கோட்பாடு. ஆனால் துன்பத்தாலேயே பெரும்பயன் அடையலாம் என்று திருவாசகம் புகட்டுகின்றது. இறைவன் எனும் மேலாம் நிலையைத் தான் இன்னும் அடையவில்லையே என்று மனிதன் வேண்டியவாறு துன்பமடையட்டும்.

எம்மானே உன் அருள் பெறுநாள்
          என்றென்றே வருந்துவனே”


எனத் துன்பத்தை வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொள்ளலாம். பக்தி வெள்ளத்தில் மூழ்கி வருந்தித் துன்பப்படும் வழியை

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்
          இறப்பு அதனுக்கு என் கடவேன்
வான் ஏயும் பெறில் வேண்டேன்
          மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
         சிவனே எம்பெருமான் எம்மானே
உன் அருள் பெறும் நாள்
         என்று என்றே வருந்துவனே”                (திருவாசகம்: 5: 12)
எனக் காட்டித்தந்துள்ளார்.
அப்படி வருந்த வருந்த பக்திஅருவியில் தோயலாம். உப்புப் பொதி நீரில் கரைவது போல எம்மை நாமே துன்பத்துள் கரைத்துக் கொள்ள வேண்டும். அப்போது துன்பத்தை நாம் உணரமாட்டோம்.

இறைவனைப் பக்திசெய்ய  ‘அதுவேண்டும், இதுவேண்டும் என ஏங்கி, ஏங்கி வருந்தும் எம்மியல்பை சற்றே மாற்றி 
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
         சிவனே எம்பெருமான் எம்மானே
உன் அருள் பெறும் நாள்
         என்று என்றே வருந்துவனே”
என இறைவனை நினைத்து ஏங்குமாறு திருவாசகம் சொல்கிறது.
‘ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பது பழமொழி. உலகில் எங்கு சென்றாலும் யாரைச்சந்தித்தாலும் பகையை வளர்க்கும் குணமுடையவர் பலர் வாழ்கின்றனர். பகைமை பொல்லாதது. அதனை முற்றாகக் களைந்து எறியவேண்டும். ஆனால் பக்திநெறி, பக்தியில் மூழ்குவதற்கு பகைமையையும் நன்றாகப் பயன்படுத்து. அதை வேண்டியவாறு வளர்த்துக்கொள்.  அதை முற்றாக இறைவனிடம் திருப்பிவிடு. எவ்வளவுக்கு எவ்வளவு நீ இறைவனை வெறுக்கிறாயோ, நாத்திகம் பேசுகிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு இறைவனுடைய இறைமை உனக்குக் கிட்டுகின்றது எனச்செப்புகின்றது. 
கண்ணனை வெறுத்த கம்ஸன் கடிதில் கண்ணன் மயம் ஆகவில்லையா? முருகனைப் பகைத்த சூரன் என்ன ஆனான்? அவர்களைப்போல் கடவுளை முற்றுமுழுதாக வெறுக்கக் கற்றுக்கொள்பவர்கள் பாக்கியவான்களே. சிவனைப் பகைத்து சினந்து எழுந்து வேள்விசெய்த தக்கனுக்கு சிவன் அருள் செய்ததை 

தக்கனையும் எச்சனையும் 
           தலை அறுத்துத் தேவர் கணம்
தொக்கன வந்தவர் தம்மை
           தொலைத்தது தான் என் ஏடி
தொக்கன வந்தவர் தம்மைத்
           தொலைத்தருளி அருள் கொடுத்து அங்கு
எச்சனுக்கு மிகைத் தலைமற்று
            அருளினன் காண் சாழலோ”                     - (திருவாசகம்: 12: 5)

மாணிக்கவாசகர் திருச்சாழலில் எமக்கு காட்டித்தந்துள்ளார். எனவே நீங்கள் எவருடனும் பகைக்க வேண்டுமா அந்தப்பகையை முழுமூச்சாக இறைவன் மேல் திருப்புங்கள், அருள் கிடைக்கும். 

கடவுளை அடைதல் ஒன்றிலே மகிழ்ந்திருப்பவன் ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்னும் பெருநிலையை அடைந்துவிடுகிறான். மனிதப்பண்பில் கெட்டது என்றது ஏதுமில்லை. எந்தப் பண்பையும் தெய்வத்திடம் செலுத்த வேண்டும். ஏனைய இடத்தில் செலுத்தப்படும் மனிதப் பண்புகளால் நன்மையும் வருவதுண்டு. கேடும் வருவதுண்டு. அவற்றை கடவுளிடத்தில் திருப்பினால் நிலையான நன்மையே வரும். ஏனெனில் கடவுள் ஒருவரே நலனுடையான். கேடில்லான். மனிதன் தனிடமுள்ள இயல்புகள் யாவற்றையும் தெய்வத்திடம் திருப்பி விடுவானேயாகில் தெய்வீகம் அவனுக்கு சொந்தமாகிவிடுகின்றது என திருவாசகம் செப்புகின்றது.
ஆசை, மோகம், காமம் என்பன கொடியதிலும் கொடியது. மனிதனுடைய உயிரை அது உறிஞ்சிவிடுகின்றது. காமத்திற்கு உட்பட்டு உலகம் ஓயாது தட்டழிந்து கொண்டிருக்கிறது. அத்தகைய காமத்தையும் திருவாசகம் பயன்படுத்துகிறது. கடவுளிடத்து மோகம் கொள்கின்ற அளவுடைய கொடிய காமம் அருட்பித்தாக மாறிவிடுகின்றது. அம்பிகையின் பெயர்களில் சிவகாமியும் ஒன்று. சிவகாமி என்றால் சிவனிடத்து காமம் கொள்பவள். உயிர்கள் எல்லாம் அப்பெயருக்குரிய நிலையை அடைய வேண்டும். 

நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்”                    - (திருவாசகம்: 17: 3)
என்ற அளவுக்கு காமம் கொள்கின்ற பக்தர்கள் சிவமயமாய் மாறிவிடுவார்கள்.
திருவாசகத் தேனாற்றில் ‘திருத்தசாங்கம்’ என்று ஒரு பகுதி உண்டு. அதுவும் அதுபோன்ற பகுதிகளும் ஞானக்கவிஞராகிய மாணிக்கவாசகரின் தெய்வக்காதலை சுவைபட எடுத்துச் சொல்கின்றன. தசாங்கம் என்பது அரசர்க்குரிய பத்துச் சிறப்புக்களாகும். அரசர்களுக்கு எல்லாம் அரசனாகிய திருவாரூர் தியாகராஜனின் பத்துச் சிறப்பு அங்கங்களையும் ஒவ்வொன்றாகச் சொல்லி அதை திரும்பச் சொல்லும்படி பச்சைக்கிளியை வேண்டிப் பாடுகிறாள் மணிவாசகத் தலைவி

“ஏரார் இளம் கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் 
சீரார் திருநாமம் தேர்ந்து உரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெள்மலரான் பால்கடலான் செப்புவபோல
எம்பெருமான் தேவர்பிரான் என்று”                               - (திருவாசகம்: 19: 1)
கையிலே கிளியை வைத்து கொஞ்சிக் கெஞ்சி அழகொளிரும் இளமையான கிளியே! வெண்தாமரை மலர்மேல் இருக்கும் பிரமனும் பால்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும் எங்கள் திருப்பெருந்துறை மன்னனின் சிறப்புமிக்க திருநாமத்தைச் சொல்வது போல ஆரூரன், செம்பெருமான், எம்பெருமான், தேவர்பிரான் என்று ஆராய்ந்து ஆராய்ந்து சொல்வாயாக எனக் கேட்கிறாள் கடவுட்காதலி. ஞான ஏக்கம் என்பது காதல் ஏக்கமாக வெளிப்பட்டு திருவாசகத் தேனாகச் சொட்டுகிறது. அந்தத் திருவாசகத் தேனாற்றில் எப்படி ஞானக்காதலி ஆகலாம் என்பதை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.

Tuesday, 27 March 2012

பால் குடித்துறங்கும் குழந்தை



ஒவ்வொரு நாட்டுப்பாடலும் ஒவ்வொரு விதத்தில் தன் சிறந்த பண்பை எடுத்துச்சொல்லும். அந்த வகையில் இந்த நாட்டுப்பாடல் ஈழத்து மாந்தையிலிருந்த பாலாவியில் வாழ்ந்த ஓர் இளம் தாய் தன் முதற்குழந்தைக்கு பாலூட்டி தழுவி மகிழ்ந்ததை எமக்குச் சொல்கின்றது. தாய் குழந்தைகுப் பாலூட்டும் காட்சியை எடுத்துச் சொல்லும் பழைய நாட்டுப்பாடல்கள் இக்காலத்தில்  கிடைப்பது மிக அரிதாகும். சங்க இலக்கியத்திலும் முலைப்பால் ஊட்டும் காட்சி மிக அரிதாகவே உள்ளது. அதனால் கீழே இருக்கும் இரு நாட்டுப்பாடல்களும் முதன்மை பெறுகின்றன.
தென்னைமரச் சோலை. அங்கே ஒர் வீடு. அவ்வீட்டில் வாழ்ந்த இளம் பெண் ஒருத்தி குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள்.  வீட்டுக்கு வெளியே தென்னைமரச் சோலையில் தென்றற்காற்று தவழ்ந்து விளையாடியது.  அந்தப் பச்சிளம் குழந்தையையுடன் தென்றற் காற்றை நுகர்ந்திருக்க தென்னைமரச் சோலைக்கு வந்தாள். அங்கே வேலை செய்து கொண்டு அவள் கணவனும் இருந்தான். குழந்தை அழுதது. அவள் குழந்தைக்கு பால் கொடுக்க சேலையைத் திறந்தாள். பால் மணம் வீசியது. அந்த மணத்தை நுகர்ந்தபடி அவள் என்ன செய்கிறாள் என்பதைப் பார்த்து மகிழ்ந்திருந்த கணவன், அவள் செயலை பாடலாக வடித்தான்.

கணவன்:  தென்னைமரச் சோலையிலென்
                           தேன் மொழியாள் போயிருந்து
                 வன்ன முலை திறந்த
                           வாசமல்லோ வீசின காண்
கணவன்:  குரும்பை இளமுலைப் பால் 
                           குடித்துறங்கும் தவ்வலை
                 தாமரைக் கையால தழுவி
                           அணைக்குதுஉ  காண்.
                                 - நாட்டுப்பாடல் (பாலாவி)
                                            - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)   
      
பேயனார் என்ற சங்ககாலப் புலவர் ஐங்குறுநூற்றின் முல்லைத் திணையைப் பாடியவர். சங்ககாலப் பெண்ணொருத்தி தனது ஆண்குழந்தைக்கு முலைப்பால் ஊட்டினாள். அதனைப்பார்த்த அவள் கணவன் அவளது முதுகுப் புறத்தை அணைத்த காட்சியை, பேயனார் தாம் பாடிய பாடலில் பதிவு செய்திருக்கிறார். 

“வாணுதல் அரிவை மகன்முலை ஊட்ட
தானவள் சிறுபுறம் கவையின னன்று 
நறும்பூந் தண்புற வணிந்த
குறும்பல் பொறைய நாடுகிழ வோனே”           - (ஐங்குறு நூறு - 404)

மனைவி பாலூட்டுவதை பார்த்து மகிழும் கணவன்மார்கள் காலங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இந்த ஆசைக்கவிதைகள் எடுத்துக் காட்டாகும்.
இனிதே, 
தமிழரசி.

குறிப்பு:
சொல்விளக்கம்.
வன்னமுலை - பொன்போன்ற முலை
குரும்பை இளமுலை - தென்னங்குரும்பை போன்ற முலை
தவ்வல் - குழந்தை
வாணுதல் - ஒளி பொருந்திய நெற்றி 
அரிவை - பெண்
சிறுபுறம் - முதுகுப்புறம்/ பின்பக்க கழுத்தை
கவையினன் - அணைத்தனன்
நறும்பூ - நறியபூ 
புறவு - முல்லைநிலம் 
குறும்பல் பொறைய - குறுகிய பல சிறுமலைகளையுடைய
நாடுகிழவோன் - நாட்டின் தலைவன்.

Monday, 26 March 2012

குறள் அமுது - (26)


குறள்:
“செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகு அதனின் கூரியதில்”                                 - 759
பொருள்:
பொருளை உண்டாக்குங்கள். ஏனெனில் பகைவரின் செருக்கை அறுக்கக் கூடிய கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு ஒன்றும் இல்லை.

விளக்கம்:
'பொருள்செயல் வகை' என்னும் அதிகாரத்தில் உள்ள ஒன்பதாவது திருக்குறள் இது.  செய்தல் என்பது உண்டாக்குதல், தேடுதல், பெருக்குதல் ஆகிய கருத்துக்களைத் தரும். நோயுற்ற போதும், இயற்கையின் அழிவுகளால் போர்களால் நாட்டில் பஞ்சம் வந்த போதும் முதுமை அடைந்த போதும் எமக்கு உதவும் என்றோ, ஏழை எளியோர்க்கு, உற்றார் பெற்றோர்க்கு கொடுக்க என்றோ நாம் பொருளைத் தேடவேண்டுமென பலரும் பலவிதமாகக் கூறுவர். 
ஆனால் வள்ளுவரோ இக்குறளில் பகைவரின் கொட்டத்தை அடக்க பொருளைத் தேடுங்கள் என்று கூறியதோடு அவர்களின் திமிரை அறுக்கும் கூர்மையான ஆயுதம் பொருளே என்பதையும் எமக்குக் காட்டித் தந்திருக்கிறார். எதிரியின் மமதையை அறுத்து எறிய பொருளைவிடக் கூர்மையான ஆயுதம் இல்லையாம். எஃகு என்பது இக்குறளில் ஆயுதம் என்ற பொருளில் வந்துள்ளது.
எமது குடும்பம், எமது நாடு, எமது தேசம், எமது இனம் என எமது வட்டம் விரியும் போது பகைமையும் விரியக்கூடும். உங்களுக்கு பகைவர் இருக்கிறார்களா? அவர்களின் செருக்கை அறுத்து எறிய நீங்கள் விரும்புகிறீர்களா? பொருளை தேடக்கூடிய வழிவகைகளை அறிந்து பொருளைப் பெருக்குங்கள். நீங்கள் தன்நிறைவு அடைந்த பின்பும் பொருள் வளத்தை வளர்ப்பதால் பகைவரது செருக்கைச் சிதைக்க முடியும். உங்களது தொழில் வளர்ச்சியும், பணப்பெருக்கமும் பகைவரை அடங்கி ஒடுங்க வைக்கும்.
தமிழனாய் தமிழனுக்கு என்று தமிழினத்துக்கு வள்ளுவன் சொன்ன இக்கருத்து மனித இனத்துக்குப் பொதுவானது. பகைவரின் கொட்டத்தை அடக்கி ஒடுக்கி செறுக்கை அறுத்து எறிய பொருளைவிடக் கூரான ஆயுதம் வேறில்லை, ஆதலால் பொருளைப் பெருக்குங்கள்.

Wednesday, 21 March 2012

தவிக்கின்றேன் தலை வணங்கி



ஆபுத்திரன் கதை கேட்டேன் அன்று.
நாய்புத்திரன் நிலை கண்டேன் இன்று.
‘நாயிற் கடைப்பட்ட நாயேன்’ என மணிவாசகன்
நவின்ற உரை நான் உணரக்காட்டிய நாயாம் தாயே!
நானிலத்து வாழும் மானுடரும் அறியா
‘நன்றியுள்ள மிருகம் நாய்’ எனும்
நற்றமிழ் வாக்கு நிலைத்திட,
ஊண் உருகி ஊன் உருகி
உருக்குலையும் பாலனுக்கு,
தாயென நீ சுரந்த பாலமுதம்
நாயென இகழ்வார் தமை
நாணமுறச் செய்யாதோ!
நாயாகித் தாயாகி நிற்கும்
நின் செயல் கண்டு
தாயெனச் சொல்லும் தரமற்று
தவிக்கின்றேன் தலை வணங்கி.
                                                - சிட்டு எழுதும் சீட்டு - 25

Tuesday, 20 March 2012

அடிசில் 18

முட்டை இல்லாத புரூட் கேக் 
                                                                                               - நீரா -
தேவையான பொருட்கள்:
மிக்ஸ் புரூட் (வற்றல்)  -  220 கிராம் 
மா  -  220 கிராம்
சீனி  -   110 கிராம்
பட்டர்  -  110 கிராம் 
கொதி தண்ணீர்  -  12 மே. கரண்டி
வனிலா  -  1 தேக்கரண்டி
சாதிக்காய் தூள் (நட்மக்)  - ½ தேக்கரண்டி
அப்பச்சோடா  - ½ தேக்கரண்டி
உப்பு  -  1 சிட்டிகை

செய்முறை:
1.  6” கேக் டின்னின் உள்பக்கம் பட்டர் பூசி இரண்டு பட்டாக ஒயில் பேப்பர் போட்டு வைக்கவும்.
2.  மா, சாதிக்காய்தூள், உப்பு மூன்றையும் கலந்து அரித்துக் கொள்ளவும்.
3.  ஒரு பாத்திரத்தில் மிக்ஸ் புரூட், சீனி, பட்டர் மூன்றையும் இட்டு கொதிநீர் ஊற்றி இளம் சூட்டில் பட்டரும் சீனியும் உருகிக் கரையும் வரை சூடாக்கவும்.
4.  பின் மெதுவாகக் கிளறி கொதித்ததும் இறக்கி ஆறவிடுக.
5.  ஆறியதும் அப்பச்சோடா சேர்த்து விரைவாகக் கலக்கிக் கொள்க.
6.  அரித்து வைத்துள்ள  மாவை இக்கலவையுடன் மெதுவாகக் கலந்து கேக்டின் உள் இட்டு மட்டப்படுத்தவும்.
7.  சூடேறிய அவணில் 180°C யில் 75 நிமிடம் வேகவிட்டு, வெந்ததும் எடுக்கவும். 

Saturday, 17 March 2012

வள்ளிமணாளன்


எனக்கு இனியனாய் என்னுள் இருந்து
எனக்கு அருள என்னை நினைந்தே
தனக்கு என்னைத் தாயாகக் கொண்டவன்
வனக்குற வள்ளிக்கு வாய்த்த மணாளனே.
தேனாய் இன்னமுதாய் தித்திக்கும் தீங்கரும்பாய்
தானாய் வந்து என் உளம் புகுந்து ஊஉறி
ஊனாயுருகி என்னையே உருக்கி உவக்கின்றான்
மானாய் நோக்கி வள்ளிமணாளன் வந்திங்கே.
இனிதே,
தமிழரசி.

Friday, 16 March 2012

தாய்மொழி தமிழ் - பகுதி 4

தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்களின் பிறப்பின் இயல்பை
“உந்தி முதலா முந்துவளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங்காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவேறியல
திறம்படத் தெரியும் காட்சியான”              -(தொல்: எழு: 3: 1)
எனக்கூறியுள்ளார்.

சுவாசிக்கும் போது எமது உடம்பினுள் நிலைக்கும் காற்றை பத்து வகையாகப் பிரித்துள்ளனர். அதில் உதானன் எனும் காற்று உந்தியில் இருக்கும். உந்தி என்பது நடுவயிறு, தொப்பூழ் ஆகும். தொல்காப்பியர் இச்சூத்திரத்தில் 'தொப்பூழில் இருந்து தோன்றி மேலே எழுந்து வரும் காற்றானது  தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய மூன்று இடத்திலும் நிலைத்து நின்று பல், இதழ், நா, மூக்கு, மேல்வாய் ஆகிய ஐந்து உறுப்புக்களும் சேர்ந்த எட்டோடும் பொருந்துவதை முறையாக ஆராய்ந்து சொல்லும் போது தமிழ் எழுத்துக்களின் பிறப்பின் ஒலிவடிவம் வேறுவேறு வகையாகத் திறம்படத் தெரிவதைக் காணலாம் எனக்கூறியுள்ளார். 
முறையாக ஆராய்ந்து எல்லா எழுத்தையும் சொல்லும் போது என்பதை ‘நெறிப்பட நாடி எல்லா எழுத்தும் சொல்லுங்காலை’ எனத் தொல்காப்பியர் சொல்வதிலிருந்து எம் தமிழ் முன்னோர் தமிழ் எழுத்தின் ஒலிவடிவங்களை எவரிடமிருந்தும் இரவல் வாங்காது தாமே ஆராய்ந்து கண்டனர் என்பதும் தெளிவாகின்றதல்லவா? தொல்காப்பியம் தமிழ் எழுத்துக்களின் பிறப்பை ஒலியெழுத்துக்களின் வாயிலாக மிகவிரிவாகக் கூறுகின்றது.
சங்கத்தமிழர் தாமெழுதிய எழுத்தை இரண்டு விதமாகப் பிரித்துப் பெயரிட்டு அழைத்தனர்.
1.  கோலெழுத்து.
2.  கண்ணெழுத்து.

கோலால் எழுதிய எழுத்தை கோலெழுத்து என்றனர். வண்ண மையில் தோய்த்த எழுதுகோல், தூரிகை போன்றவற்கைக் கொண்டு துணியின் மேலோ தோலின் மீதோ எழுதுவதை கோல் எழுத்து என்றழைத்தனர். இரண்டாயிர வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழர்கள் எழுதுகோல் பாவித்து எழுதி வந்திருக்கிறார்கள் என்பதை 
எழுதும் கால் கோல் காணாக் கண்ணேபோல்”
எனும் திருக்குறள் அடி எமக்குச் சொல்கிறது. மையைத் தொட்டு எழுதும் பேனாவை இன்றைய தமிழர்களாகிய நாமும் எழுதுகோல் என்றுதானே அழைக்கிறோம்.
கண் என்றால் குழி எனவும் பொருள் தரும். கோலால் மையைத்தொட்டு எழுதும் பொருளின் மேற்பரப்பில் எழுதாது அதன் மேற்பரப்பை உட்குழிந்து எழுதிய எழுத்தே கண்ணெழுத்தாகும். சங்ககாலத்தில் ஊருக்குள் புதிதாக வருபவர்கள் கண்ணெழுத்தால் எழுதிய தமது பெயர் பொறித்த பொதிகளைக் கொண்டு திரிவார்களாம். அதனை இளங்கோவடிகள்
“வம்பமாக்கள் தம் பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி”
                                              - (சிலம்பு: 5: 111 - 112)
எனச் சொல்வதோடு கண்ணெழுத்தை எழுதியவர்களை கண்ணெழுத்தாளர் எனவும்  சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.
அவர்களின் அடியை ஒற்றியே இன்றும் நாம் பிரயாணம் செய்யும் பொழுது பெட்டிகள் மாறாமல் இருக்க எமது பெயரும் முகவரியும் எழுதுகிறோம். இந்த வழக்கமும் சங்ககாலப் பழமையானதே.
ஒலியெழுத்து - வரியெழுத்தாக மாறிய பின்னர், வரியெழுத்தில் காலத்துக்குக் காலம் பல மாற்றங்களுக்கு உள்ளாகி இன்றைய நிலையை அடைந்துள்ளது. உதாரணமாக மலை என்பதைக் குறிக்கும் மலைத் தொடர் வடிவான (/\/\/\) உருவெழுத்தானது முக்கோண வடிவான வரியெழுத்தாக மாறி பல பல நிலைகளைக் கடந்து வட்டெழுத்தாக வளர்ந்து இன்று நாம் எழுதும் ‘ம’ என்னும் எழுத்தாக வந்துள்ளது.
குகைகளிலும் பாறைகளிலும் எழுதிவந்த உருவெழுத்தை காலப்போக்கில் தேவைகருதி களிமண் தட்டுகளிலும் மரப்பட்டைகளிலும் கோலெழுத்தாகவும் கண்ணெழுத்தாகவும் எழுதினர். இப்படி மரப்பட்டையிலும் மாவுக்கல்லிலும் எழுதியவற்றை ஒர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச்செல்வது மிகக் கடினமான காரியமாக இருந்தது. தமிழரின் கல்வியறிவு மேலும் வளர வளர எழுதுவதற்கான தேவையும் அதிகரித்தது. கல்வியறிவு அரசன் தொடக்கம் காட்டில் வாழும் குறவர்வரை எல்லோரிடமும் விரவியிருந்தது. அவ்வுண்மையை சங்க இலக்கியம் மட்டுமல்ல இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட தொல்பொருள் ஆய்வுகளும்கூட மிகத் தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றன. 

கண்ணெழுத்தை ஆய்வாளர் சிலர் முத்திரை பதித்தல் அதாவது இலச்சினை இடுதல் எனக்கருதுகின்றனர். உட்குழிந்து எழுதும் கண்ணெழுத்தை பொருளின் மேலும் எழுதலாம், இலச்சினையாயும் இடலாம் தானே?

இளங்கோஅடிகள் கால்கோட்காதையில் 
“இருபதினாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன
 கைபுனை சகடமும்”                                      
                                                - (சிலம்பு:   135 - 136)
என்கிறார். சகடம் என்றால் வண்டி. பொதி வண்டிகளை  மூடிக்கட்டி முத்திரை இட்டார்களா? என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் அந்த வண்டிகளை ‘கைபுனை சகடம்’ என நன்கு அலங்கரிக்கப்பட்ட வண்டிகள் என்றே காட்டுகிறார். ஆதலால் இந்நாளில் யாழ்தேவி என்று வண்டியில் பெயர் எழுதுவது போல அந்நாளிலும் வண்டியில் கண்ணெழுத்தால் எழுதினர் எனக்கொள்ளலே பொருந்தும்.
சங்ககாலத் தமிழர் எழுதிய எழுத்துக்கள் தொல்பொருள் ஆய்வுகளில் கல்வெட்டுக்களாகக் கிடைத்திருக்கின்றன. கல்லில் சிலை வடிப்பதால் கல்லை சிலை என்றும் அழைப்பர். அதை ‘இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்னும் பழமொழி எடுத்துக் காட்டுகிறது. இளமையில் கற்பது கல்லில் எழுதுவது போன்றது எனச்சொல்லும் இடத்தில் சிலை கல்லையே குறித்து நிற்கிறதல்லவா? ஆதலால் கல்வெட்டு சிலாசாசனம் என்றும் சொல்லப்படும்.
சங்ககால நடுகற்களிலும், மலைகளிலும், மலைக்குகையிலும், தொல்லியல் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், ஜாடிகள் போன்றவற்றிலும் கோயில் சுவர்களிலும் பண்டைக்காலக் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவைமட்டுமல்ல பண்டைய காசுகள், முத்திரைகள், மோதிரங்கள், விளக்குகள் போன்றவற்றிலும் பண்டைய தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன. 
கருங்கல், நடுகல் போன்றவற்றில் எழுதிய தமிழ் எழுத்தை குயிலெழுத்து என்று சங்கத்தமிழர் அழைத்ததை 
“மருங்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகற்
பெயர்பயம் படரத் தோன்று குயிலெழுத்து”       - (அகம்: 297)
என அகநானூற்றில் மதுரை மருதன் இளநாகனார் சொல்லியுள்ளார். இழைத்தல் அல்லது பதித்தல் குயிற்றுதல் எனப்படும். குயிலெழுத்து கோடுகளாய் இருந்ததையும் அதை உளிகொண்டு பதித்ததையும் அகநானூறு
“கூருளி குயின்ற கோடுமாய் எழுத்து
எனக்காட்டுகிறது. வரியெழுத்து என்பதையே கோடுமாய் எழுத்து எனும் சொல்வழக்கு சொல்கிறது. தமிழ் எழுத்தின் பழமையை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.