Sunday, 13 November 2011

குறள் அமுது - (9)


குறள்:  
“தானம்தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
 வானம் வழங்காது எனின்”                            - 19

பொருள்
மழைமேகம் மழையைத் தராவிட்டால் வியப்பு மிக்க இந்த உலகத்தில் தானம் தவம் ஆகிய இரண்டும் நிலைத்து இருக்காது.

விளக்கம்: 
இந்தத் திருக்குறள் வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் இருக்கிறது. ‘வானம் வழங்காது எனின், தானம் தவமிரண்டும் இந்த வியனுலகத்தில் தங்காது’ எனக்கொண்டால் இந்தத் திருக்குறளை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.  இங்கே வானம் என்பது மழைமேகத்தைக் குறிக்கின்றது. நாம் எமது விருப்பபடியே தானத்தையும் தவத்தையும் செய்கிறோம். அதற்கும் மழைக்கும் என்ன தொடர்பு? மழையா நீ தானத்தைச் செய், நீ தவத்தை செய் எனச் சொல்கிறது? இல்லையே! அப்படியிருக்க ஏன் திருவள்ளுவர் மழை இல்லாவிட்டால் இந்த உலகத்தில் தானமும் தவமும் தங்கியிருக்காது என்கிறார்?
தானம் தன்நலம் கருதாது பிறர்நலம் பேணுவோர் செய்வது. பிறர் கேட்காமலே தானாக மனம் உவந்து கொடுப்பது தானம் (தான் + அம் = தானம்). தவம் தன்நலமே சிறந்தது என நினைப்போர் செய்வது. தவமும் துறவும் வேறு வேறானவை. தவத்தின் உயர்ந்த படிநிலையே துறவு. தவத்தை பற்றேயில்லாத இறைவன் பற்றை பிடித்துக்கொள்ளும் நிலைக்கும், துறவை பற்றைவிட்ட நிலைக்கும் சொல்லலாம். பொதுவாகப் பார்த்தால் இல்லறவாழ்க்கை  வாழ்பவர்கள் தானம் செய்வர். துறவறவாழ்க்கை வாழ்பவர்கள் தவம் செய்வர். 
முதலில் இந்த இவ்விருவகை வாழ்க்கை வாழ்வோரும் இயல்பாக வாழ வளம்மிக்க நாடு இருக்க வேண்டும். நாட்டிற்கு வளமையைத் தருவது பசுமை. நாடு பசுமையாக இருக்க மழை வேண்டும். மழையிருந்தாலே நாட்டில் வளம் கொழிக்கும். வளம்மிக்க நாட்டில் வாழ்பவரே தாமாக மனமுவந்து தானம் செய்வர். வறட்சியான நாடு வளமற்று இருக்கும். வளமற்ற நாட்டில் எவராவது வளத்தோடு வாழமுடியுமா? யாரால் வள்ளலாக முடியும்? தவம் செய்பவன் தான் விரும்பிய பற்றுக்களை விடுவதற்கு அங்கே என்ன பற்றுக்கள் இருக்கப்போகின்றது? 

எனவே வானம்  மழையைத் தரவில்லை எனில் தானம் தவம் இரண்டும் இந்த விந்தையான உலகில் எப்படி இருக்கமுடியும்? மழையில்லையா! தானமும் தவமும் தங்கி இருக்காது என்கிறது இக்குறள்.

எம்சுவாசக்காற்று - பகுதி 2


எமக்குப் பண்டைத் தமிழரின் மிக நுட்பமான ஆய்வுத்திறனை விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள், நீர்நிலைகள், நிலங்கள் யாவையும் கொண்டுள்ள காரணப் பெயர்களே எடுத்துக்கூறுகின்றன. 
மனித நாகரீகமே தோன்றாத நிலையில் அதனை தோற்றுவிப்பது வேறு, மனித நாகரீகம் நன்றாக வளர்ச்சியடைந்த நிலையில் அதனை வளர்த்தெடுப்பது வேறு. மனித நாகரீகம் தோன்றாத காலத்தில் மனித நாகரீகத் தோற்றத்திற்கு வித்திட்டதாலேயே இன்று உலகில் பேசப்படும் ஏனைய மொழிகளுக்குக் கிட்டாத  அழியாப் பெருமையை தமிழ்மொழி தனக்கென வைத்திருக்கின்றது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்மொழியைப் பேசும் தமிழராய்ப் பிறந்த நாம் பிறமொழி மோகத்தில் மயங்குவது ஏன்? மனித நாகரீகத் தோற்றத்தில் துணை நின்ற தமிழ்மொழியைப் பேசும் நாம் மனித நாகரீகம் வளர்ச்சியடைந்த நிலையில் அதன் அழிவுக்கு வழிவகுக்கலாமா? 
பண்பாட்டின் தொடக்கம் தென்னிந்தியா என்னும் நூல் (Beginning of civilisation in South India by H.D Sankalia) உலகில் முதன்முதலாகக் கிடைத்த காலத்தால் முந்திய எழுத்து சிந்துவெளி எழுத்தே என்றும் எகிப்திய நாகரீகத்தை விட தமிழர் நாகரீகம் முந்தியது என்றும் கூறுகிறது. சிந்துவெளி நாகரீகம் 3500 வருடப் பழமையானது. சுமேரிய நாகரீகம் 5000 வருடப் பழமையானது. ஆனால் சிந்துவெளி மக்களும், சுமேரீய மக்களும் எழுதிய எழுத்துகளுக்கும் முந்திய எழுத்து வடிவத்தை காலி மாவட்டத்திலுள்ள குகை ஒன்றில் கண்டுபிடித்துள்ளார்கள்.
(source:  Goddesschess.blogspot.com) 










அந்த எழுத்துவடிவம் 10,000 வருடப் பழமையானது என ஶ்ரீலங்கா சன்டே டைம்ஸ் வலைத் தளம் (Sri Lanka Sunday Times online) பங்குனி மாதம் 8ம் திகதி 2008ம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது. எவ்வாறு அந்த எழுத்தின் காலத்தை வரையறை செய்தார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் பத்தாயிர வருடங்களுக்கு முன் அவ்வெழுத்தை எழுதிய மனிதனும் ஈழநாகரீக வரலாற்றில் மொழி உருவாக்கலின் முன்னோடியே. அவ்வெழுத்து வடிவத்தை பழந்தமிழ் எழுத்து வடிவத்தின் தோற்றுவாயாகவும் கொள்ளலலாம்.

அந்த எழுத்துச் சான்று காலியிலுள்ள ‘யாக்கலமுல்ல’ என்ற பகுதியில் கிடைத்துள்ளது. யாக்கலமுல்ல என்றவுடன் அது தமிழ்ப்பெயரா? இல்லையே! எப்படி பழந்தமிழ் எழுத்து வடிவத்தின் தோற்றுவாயெனக் கொள்ளமுடியும் எனும் ஐயங்கள் உண்டாவது இயல்பே. யாக்கலமுல்ல பண்டைத்தமிழர் வாழ்ந்த இடமா என்பதைப் பார்ப்போம். 

சங்கத்தமிழ் ஆலமரத்தை ‘யா’ என்றும் ‘யாஅம்’ என்றும் அழைப்பதைக் காணலாம். 

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்”                 
                              - (குறுந்தொகை 37:2-3)

என்பது குறுந்தொகைப் பாடல். பெண் யானையின் பசியைப் போக்க, பெரிய துதிக்கையையுடைய ஆண் யானை மென்மையான சின்ன விதையுள்ள ஆலமரத்தை உரிக்குமாம். 


யாப்பது என்றால் பரப்பது என்று பொருள். ஆலமரம் பரந்து வளர்ந்த காரணத்தால் அதற்கு யாமரம் என்று பெயரிட்டனர். தற்கால தமிழர்களாகிய நாம் பண்டைத்தமிழர் யாடு என்றதை ஆடு ஆகவும், யானை என்றதை ஆனை ஆகவும் கூறுகிறோம். இதற்கு புறநானூற்றில் பிசிராந்தையார் 
யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர்'                       
                                 - (புறம் 191:1-2)
எனப் யாண்டு எனச் சொன்னதை நாம் ஆண்டு எனச்சொல்வதையும் இது போல் வேறு பாடல்களையும் சங்கத்தமிழில் இருந்து எடுத்துக்காட்டமுடியும். 
தனித்து உயர்ந்து மலையாக நிற்காது நிலத்தோடு சேர்ந்த பெருங்கற் பகுதிகளை பழந்தமிழர் ‘கல்’ என அழைத்தனர். உதாரணமாக திண்டுக்கல், குருநாகக்கல், செங்கடம்புக்கல் போன்றவற்றைக் கூறலாம். பருத்தயானை போன்ற கல்லாக இருந்த காரணத்தால் குரு + நாகம் + கல் = குருநாகக்கல் (குரு - பருத்த, நாகம் - யானை) என அழைக்கப்பட்ட இடம், குருநாகல் ஆகி சிங்களத்தில் குருநாகல என உருமாறி நிற்கிறது. செங்கடம்பு மரங்கள் நிறைந்து இருந்த காரணத்தால் செங்கடம்புக்கல் என அழைக்கப்பட்ட இடம், செங்கடங்கல் ஆகி சிங்களத்தில் செங்கடகல என உருமாறி நிற்கிறது. திண்டுக்கல் தமிழ்நாட்டில் இருப்பதால் தப்பிவிட்டது. இவைபோலவே யாக்கலமுல்ல என்பதிலுள்ள ‘கல’ எனும் சிங்களச் சொல்லும் ‘கல்’ என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாகும்.
‘யாக்கலமுல்ல’ என்ற இடத்தின் பெயரிலுள்ள ‘முல்ல’ என்பதும் ‘முல்லை’ எனும் தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்த சிங்கள ஒலிவடிவம் ஆகும். அதாவது தமிழில் நாம் ‘முல்லை’ என்பதை சிங்களத்தில் ‘முல்ல’ என்கிறார்கள். பண்டைய தமிழர் நிலத்தின் இயல்பைக் கொண்டு நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்காகப் பிரித்து நானிலம் என்றழைத்தனர். அதில் காடும் காடுசார்ந்த நிலத்தை முல்லை என அழைத்தனர். அதனை
மாயேன் மேய காடுறை உலகமும்”
என முல்லை நிலத்தைக் எடுத்துக்கூறும்  தொல்காப்பியர், அவருக்கு முன்னர் வாழ்ந்த பண்டைத்தமிழர் தாம் வாழ்ந்த நிலத்தை அவற்றின் பண்பைக் கொண்டு பாகுபடுத்தி அழைத்ததையும் 
“முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” 
என்று வரிசைப்படுத்திக் காட்டுகிறார். 

ஆதலால் பண்டையதமிழரால் முல்லை என்று அழைக்கப்பட்ட காட்டு நிலப்பகுதிகளே சிங்களத்தில் முல்ல என சொல்லப்படுகின்றன. இவ்வாறு நிலத்தின் தன்மையைக் கொண்டு அதனை வெவ்வேறு பெயரிட்டழைத்ததை சிங்களத்தில் காட்டுவதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? அன்றேல் பாளி மொழியில் காட்டமுடியுமா? 
எனவே யா, கல், முல்லை என்ற மூன்று தமிழ்ச் சொற்களும்
யா + கல் + முல்லை = யாக்கல்முல்லை எனத் தமிழில் புணரும். பண்டையதமிழர் தாம் வாழ்ந்த இடமான ஆலமரக்கல் அதாவது யாக்கல் இருந்த முல்லைநிலக் காட்டுப்பகுதியை யாக்கல்முல்லை என அழைத்தனர். தமிழர் யாமரமென ஆலமரத்தை அழைத்த சங்ககாலத்தில் சிங்களமக்களோ, சிங்கள மொழியோ, தோன்றவில்லை. எனவே இப்போது யாக்கலமுல்ல என சிங்களத்தில் கூறப்படும் இடம், சங்ககாலப் பழமையானது என்பது தெரிகிறதா? சங்ககாலப் பழமைமிக்க ஊரில் கிடைத்த அவ்வெழுத்துருவை நாம் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். அதனை நம் நாட்டிலுள்ள வரலாற்று ஆய்வாளர்கள் காய்தல் உவத்தல் இன்றிச் செய்ய வேண்டும். அது மானுடரின் மொழிவரலாற்றுக்கு அவர்கள் செய்யவேண்டிய கடமையாகும். 
                                                                                             ஆலமரநிழலில் காலித்துறைமுக அம்பலம்   (Photo source Wikipedia)     
இன்றும் கூட காலி யாக்கலமுல்ல பகுதியில் ஆலமரங்கள் இருக்கின்றன. அந்நாளில் தமிழர் கூடியிருந்து கதைத்த ‘அம்பலம்’ காலித் துறைமுகத்தில் இப்பொழுதும் இருக்கிறது. அந்த அம்பலமும் ஆலமரநிழலின் கீழேயே இருக்கிறது. அந்த இடத்தை சிங்களத்தில் ‘அம்பலம’ என அழைக்கிறார்கள். ‘அம்பலம்’ என்பதும் தமிழ்ச் சொல். பொன்னால் செய்த அம்பலமே சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலம்.  

சொற்பொழிவுகளும் இசை, கூத்து முதலிய கலைகளும் குற்றவாளிகளை அம்பலப்படுதும் வழக்குகளின் தீர்ப்புக்களும் அம்பலங்களில் பலரும் அறிய நடாத்தப்பட்டன. அம்பல் என்ற சொல்லடியாகப் பிறந்ததே அம்பலம். தொல்காப்பியர் 
“அம்பலும் அலரும் களவு வெளிப்படுதலின்” 
என்று பிறர் அறியாது காதலிப்போரது காதல், மற்றவர்களுக்குத் தெரியவருவதை அம்பல் எனவும் அலர் எனவும் கூறுவதாக தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளார். அதாவது பிறர் அறியாது மறைந்திருந்த விடயத்தை வெளிப்படுத்துவது அம்பலாகும். இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே தாமறிந்த காதலர் செய்திகளைப் பெண்கள் எப்படியெல்லாம் நடித்து அம்பல் தூற்றினார்கள் என்பதை நற்றிணை ஒரு காட்சியாகவே படம்பிடித்து வைத்துள்ளது. 
“சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற”                        
                                    -(நற்றிணை149:1-3)
காதல் செய்யும் கன்னியைப் பற்றிய செய்தியை அத்தெருவில் வாழும் பெண்கள் சிலரும் பலருமாகச் சேர்ந்து சேர்ந்து நின்று ஒருவரை ஒருவர் கடைக்கண்ணால் பார்த்தும், ஆஆ! உண்மையாகவா! அவளா நம்பமுடியவில்லையே! என மூக்கின் நுனியை சுட்டுவிரலால்  வியப்போடு தொட்டு அம்பல் தூற்றினார்களாம். இதனை இன்றைய பாணியில் சொல்வதானால் தெருப்(மறுகு) பெண்கள் சிலரும் பலருமாகக் கூடி கிசு கிசு பரப்பினார்கள் எனச்சொல்லலாம். இரகசியமான செய்தி பலருக்கும் தெரியவந்தால் யார் அதை அம்பலப்படுத்தியது எனக்கேட்கும் வழக்கம் நம்மிடையே இன்றும் இருகிறது.

இலங்கை முழுதும் தமிழர் வாழ்ந்த இடங்களின் ஆதாரச்சுவடுகளை எடுத்துக் காட்டகூடிய நூற்றுக்கணக்கான தமிழின் இடப்பெயர்ச் சொற்கள் சிங்களமாய் மாறியிருக்கின்றன.  ஞானப்பிரகாசசுவாமிகள் ‘நாலாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் முற்றிலும் ஒலிவடிவம் மாறாது சிங்கள மொழியில் இருப்பதாக’ 1940ம் ஆண்டிலேயே குறிப்பிட்டுள்ளார். 
தமிழ்மொழியின் இலக்கணநூலான தொல்காப்பியம் கி மு 3ம் நூற்றாண்டிற்கு முன்பே எழுதப்பட்டது. ஆனால் முதன்முதல் எழுதப்பட்ட சிங்களமொழி இலக்கணநூலான சித்தசங்கராவ’ கி பி 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதுவும் கி பி 11ம் எழுதப்பட்ட வீரசோழியம்’ எனும் தமிழ் இலக்கணநூலைப் பார்த்தே சித்தசங்கராவ எழுதப்பட்டதாக கலாநிதி சி ஈ கொடகும்பர கூறியுள்ளார். சிங்களமொழிக்கு இலக்கணம் எழுதுவதற்கு 1600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழிக்கு இலக்கணம் இருக்கின்றது. அப்பொழுதே தமிழ் இலக்கண இலக்கியங்கள் முல்லை, கல், அம்பல், அம்பலம், யா, யாஅம் முதலான சொற்களை பொதிந்து வைத்திருக்கின்றன. தமிழர் என்று சொல்லிக்கொண்டு, தமிழ்ச்சொலா? தமிழர் வாழ்ந்த இடமா? என்றெல்லாம் சிந்தித்துப்பார்க்காது இருப்பது எமது அறியாமை தானே!
எமது வீடுகளில் பிறமொழி அகராதிகள் இருக்கும். அம்மொழிகளில் எமக்கு தெரியாத ஒரு சொல்லை புத்தகங்களில் செய்தித்தாள்களில்  பார்த்தால் தொலைக்காட்சிகளில் கேட்டால் உடனே அகராதியைப் புரட்டிப்பார்த்துத் தெரிந்து கொள்வோம். நம் பிள்ளைகளையும் பார்க்கச் செய்வோம். இப்படி தமிழ்மொழியில் எமக்குத் தெரியாத சொல்லைக் கேட்டாலோ, பார்த்தாலோ நம்மில் எத்தனை பேர் தமிழ் அகராதியையோ, நிகண்டையோ எடுத்துப் பார்க்கிறோம்? பிள்ளைகளை தமிழகராதியை எடுத்துப் பார்க்கும் படி கூறுகிறோம்? எத்தனை தமிழர் தம் வீடுகளில் தமிழ்-தமிழ் அகராதி வைத்திருக்கிறோம்? 
தமிழர்களுக்கு என்ற ஒரு நாடற்ற நிலையில் வாழும் நாம் தமிழின் பழமையையும் பெருமையையும் எம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி கற்பிக்கவேண்டிய பொறுப்பு உடையவர்களாக இருக்கிறோம். அதற்குப் பல காரணங்கள் கூறலாம். முக்கியமாக நம் சொந்தங்கள் உலகெலாம் தழுவி வாழ்வதால் நம் இளம் தலைமுறையினர் ஒவ்வொருவரும் ஒவ்வொருமொழி பேசுபவர்களாக இருக்கின்றனர். அவர்களின் அன்பின் இணைப்புப் பாலமாக எமது தாய்மொழியான தமிழே இருக்கமுடியும். தமிழெனும் எம் சுவாசக்காற்றை இளம் தலைமுறையினர் சுவாசிக்கத் தொடங்கிவிட்டால் அது என்றும்  நிலைத்து நிற்கும். உலகெங்குமே எம் சுவாசக்காற்றை நாம் சுத்தமாக சுவாசிக்க முடியும். எவராலும் அதற்கு தடைபோட முடியாது.  இதனை  தமிழர்களாகிய நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போமா? சிந்தித்தால் மட்டும் போதுமா? செயல்படுவோம். செயல்படுத்துவோம்.
இனிது,
தமிழரசி.

அடிசில்.1

முந்திரிப்பருப்பு போளி
                                  - நீரா -          

தேவையானவை:
உள்ளீட்டிற்கு வேண்டியவை:
முந்திரிப்பருப்பு  -  3/4 சுண்டு
சீனி/வெல்லம்   -  1/2 சுண்டு
தேங்காய்த்துருவல்  - 1/2 சுண்டு
எலக்காய்த் தூள்   -  1/2 தேக்கரண்டி
உப்பு    -  1 சிட்டிகை
மேல் மாவிற்கு வேண்டியவை:
கோதுமைமா  -  1 சுண்டு
மஞ்சள் தூள்  -  1/4 தேக்கரண்டி
உப்பு  -  தேவையானாளவு
நெய்  -   சிறிதளவு

செய்முறை:
1.  முந்திரிப்பருப்பை வெதுவெதுப்பான நீரில் 45 நிமிட நேரம் ஊறவிடவும்.
2.  ஒரு பாத்திரத்தில் மாவை இட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக்கலந்து நீர் தெளித்து நுனிவிரலால்    மென்மையாய் இளகியதாக நன்றாகப் பிசைந்து 1 மணிநேரம் மூடிவைகவும்.
3.  ஊறவைத்த முந்திரிப்பருப்பை நீரில்லாது வடித்து சீனி, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நன்கு அரைத்தெடுத்து ஏலப்பொடியும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நீர்த்தன்மை போகக்கிளறி உருண்டையாகப் பிடிக்கும் பதத்தில் இறக்கி ஆறவிடவும்.
4. பிசைந்து வைத்த மாவையும் உள்ளீட்டையும் சமமான  எண்ணிக்கையுள்ள  உருண்டைகளாக உருட்டிக்கொள்க.
5. மாவுருண்டையை கிண்ணம் போலச் செய்து அதனுள் உள்ளீட்டுருண்டையை வைத்து மாவை இழுத்து மூடி சிறிது மா தூவி உருளை போல் உருட்டிக்கொள்க.
6.  மா தூவிய பலகையில் ஒவ்வொரு உருளையா க இட்டு மிகமெல்லிய நீள்வட்ட போளிகளாகச் செய்து கொள்க.
7.   அந்த போளிகளை சிறிது நெய்விட்டு பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும்.
குறிப்பு:
முந்திரிப்பருப்பு உடல் நலத்திற்கு நல்லதல்ல என நினைப்பவர்கள் The world's healthiest foods வலைத்தளத்துள் சென்று (cashews) பார்க்கவும்.  http://www.whfoods.com

Saturday, 12 November 2011

இன்று எனக்கருள வேண்டும்

பக்திச்சிமிழ் [4]
சிறுபிள்ளைகள் தமக்கு ஏதாவது ஒரு பொருள் வேண்டும் என்றால் பெற்றோரிடம் சென்று அன்றைக்கு அக்காவுக்கு கொடுத்தது போலோ  அல்லது அண்ணாவுக்குக் கொடுத்தது போலவோ தனக்கும் இப்பொழுதே வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்து அழுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி இறைவனிடம் அடம்பிடித்துக் கேட்டு பலவவகையான போகப் பொருட்டளைப் பெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார் என்கின்றது அவரது வரலாறு.  

திருநாகைக் காரோணம் சென்ற சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனிடம் 'நான் அணிந்து கொள்ள முத்துமாலை துலங்க மாணிக்கமும் வயிரமும் வரிசை வரிசையாகக் கட்டிய மணிவடமும் தந்து உடம்பிற்கு இன்பத்தைதரும் மணங்கமழும் கஸ்தூரி மணக்கும் சந்தனத்திற்கும் ஆளை அனுப்பிவை' என நாற்பத்தி ஆறாவது பதிகத்தின் முதலாவது தேவாரத்தில் கேட்டார். இன்று கஸ்தூரி [வாசனைப் பொருள்] என்று சொன்னால் மட்டுமே தமிழர்களாகிய எம்மால் புரிந்து கொள்ளமுடியும் ஆனால் அன்று கத்தூரி என அழைத்தை இத்தேவாரம் காட்டுகிறது.
"முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
          அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து  பணித்தருள வேண்டும்"    
                                                            - (ப.திருமுறை: 7: 46: 1)

அத்துடன் நிற்காது காம்பு, நேத்திரம் போன்ற பட்டாடைகளுக்கும் (இன்றைய காஞ்சிபுரம், மைசூர் பட்டுவகை போன்றவை) சொல்லியனுப்பும் என்றும் அவற்றையெல்லாம் இறைவனின் களஞ்சிய அறையில் இருந்து எடுத்துத் தனக்குக் கொடுக்கக் கட்டளையிடுமாறும் இரண்டாம் ஐந்தாம் தேவாரங்களில் சொல்கிறார். 
"காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்"  
                                                             - (ப.திருமுறை: 7: 46: 2)       
           "........கந்தமுதல் ஆடைஆபரணம்   
பண்டாரத்தே எனக்குப் பணித்தருள வேண்டும்"      
                                                              - (ப.திருமுறை: 7: 46: 5)



























அப்படியெல்லாம் அதுவேணும் இதுவேணும் என்று கேட்டுப்பார்த்தார் ஏதும் கிடைக்கவில்லை, உடனே   'மலை மங்கையுடன் நீர் ஊடல் கொண்டிருந்த போது எதிர்பாராது  அங்கு வந்த இலங்கை அரசனான இராவணன் மலையை எடுக்க அவனை நெரித்து, அவன் பேரானந்தத்தைத் தரும் சிறந்த இன்னிசையைப்  பாட தேரோடு வாளும் கொடுத்தீர்.  உம்மேல் அன்புள்ள  அப்பரும், சம்பந்தரும் (அடியவர்கள்) பசியால் வருந்தாது உணவருந்த ஒவ்வொரு நாளும் அன்று திருவீழிமிழலையில்   காசு அருளினீர். இன்று எனக்கருள வேண்டும்' எனச் சிறுபிள்ளைபோல் கேட்டதை நீங்களே பாருங்கள்.

"தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்
       தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து
தேசுடைய இலங்கையர்கோன் வரைஎடுக்க அடர்த்து
       திப்பிய கீதம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்
நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த 
       நிறைமறையோர் உறை வீழிமிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீர்இன்று எனக்கருள வேண்டும்
      கடல்நாகைக் காரோணம் மேவியிருந்தீரே" 

இராவணனுக்கு இறைவன் அருள் செய்த தன்மையை எண்ணி சுந்தரமூர்த்தி நாயனார் எவ்வளவு வியந்திருந்தால் இப்படிக் கேட்டிருப்பார். அவர் இத்தேவாரத்தில் இராவணனை அழகும் வீரமும் புகழும் மிக்க (தேசு)  இலங்கையர்கோன் என சொல்வதைப் பாருங்கள். இராவணன் கைலாயமலையைத் தூக்கும் இச்சிற்பம் தாராசுரம் கோயிலில் உள்ளது. 
இனிதே,
தமிழரசி.

Wednesday, 9 November 2011

செஞ்சுடர் வேல் வேலவா!

    

                                         பல்லவி
செஞ்சுடர் வேல் வேலவா! சென்மபிணி தீர்க்கவா!
அஞ்சினான் அழுதக்கால் அன்புடன் அணைக்கவா!
                                                             - செஞ்சுடர் வேல்
                             அனுபல்லவி
வெஞ்சமரில் வீரனாய் வேங்கையென நின்றவா!
வஞ்சியவள் பின்சென்று வேங்கைமரம் ஆனவா!
                                                             - செஞ்சுடர் வேல்
                               சரணம்
துஞ்சிடும் வாழ்வதனின் துயரமதைச் சொல்லவா!
தஞ்சமெனக்கு   அருளிடில் தண்டமிழில் பாடவா!
நஞ்சுண்ணி மைந்தனே! நமனை நான் வெல்லவா!
எஞ்சியுள்ள பிறவிதொறும் என்னுடனே கூடவா!
                                                             - செஞ்சுடர் வேல்
இனிதே,
தமிழரசி.

ஆசைக்கவிதைகள் - 7

                    வாசனையில் சண்பகமோ!


          ஆண் :   வாசனையில் சண்பகமோ
                                  வடிவழகில் இலச்சுமியோ
                        காசினியில் உன்னைப்போல்
                                  கண்டதில்லை கண்மணியே.
                                                 - நாட்டுப்பாடல் (வரிக்கூத்தூர்)
           ஆண்:    வண்ணமலர் சோலையிலே
                                   வாசமுண்டு வீட்டினிலே
                         சண்பகத்தின் வாசமல்லோ என்
                                   தையலுட மேனியல்லாம்.
                                                  - நாட்டுப்பாடல் (மன்னார்)
            ஆண்:   உண்ணமனம் நாடுதில்லை
                                    உறங்கமனம் கூடுதில்லை
                         வண்ணமலர் சண்பகமாய்
                                    வாட்டுறாளே என் உசிர.
                                                 - நாட்டுப்பாடல் (செட்டிகுளம், வவுனியா)
                                                  (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

குறள் அமுது - (8)


குறள்:
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் - 67

பொருள்:
தந்தை தன் பிள்ளைகளுக்கு செய்யவேண்டிய நன்மை, அவர்களை படிக்கவைத்து அறிஞராக்கி கற்றவர் சபையில் முதன்மை பெறச்செய்வதே.

விளக்கம்:
இத்திருக்குறள் புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில் வரும் ஏழாவது குறளாகும். நம் தமிழ் மூதாதையர் மற்றவர்க்கு நன்றி கூறாது நன்றி செய்தார்கள் என்பதை இக்குறள் மிகத்தெளிவாகக் காட்டுகிறது. அதனால் நன்றி என்ற சொல்லின் உண்மைக் கருத்தைச் சொல்வதோடு தமிழரது பண்பின் சிறப்பையும் எடுத்துச் சொல்கிறது. 
‘செய்நன்றி அறிதல்’ எனும் அதிகாரத்தில் “காலத்தினால் செய்த நன்றி” எனத் திருவள்ளுவர் கூற, ஔவையாரும் “நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்” என்று கூறினாரே தவிர சொன்னக்கால் என்று கூறவில்லை. நன்றி செய்யப்படுவதே அல்லாமல் சொல்லப்படுவதல்ல.  இக்குறளில் நன்றி என்ற சொல் நன்மை எனும் கருத்திலேயே வருகின்றது. 
ஒரு பிள்ளையைப் பெற்று வளர்க்க யார் யார் என்னென்ன கடமை செய்ய வேண்டும் என்பதை சங்ககாலப் பெண்புலவரான பொன்முடியார்
ஈன்று புரந்தருதல் என் தலைக்கடனே
         சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே’
எனக் கூறுகிறார்.

பிள்ளையைப் பெற்றெடுத்து நோய் நொடி இல்லாது நல்ல உணவு கொடுத்து வளர்த்தெடுப்பது ஒரு தாயின் கடமை. அப்பிள்ளையை கல்வி கற்கவைத்து சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை. வீரத்தை கொடுப்பவள் தாய். தீரத்தைக் கொடுப்பவன் தந்தை. பெற்றோர் ஓடி ஓடி  உழைத்து பொன்னும் பொருளும் சேர்த்து வைப்பதை விட பிள்ளைகளுக்கு அறிவெனும் விளக்கைக் கொடுத்தால் அது வழிகாட்டும். தமிழர் இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே குழந்தை வளர்ப்பில் மிகத்தெளிவுள்ளவர்களாக அறிவுக்கு முதன்மை கொடுத்து வாழ்ந்துள்ளனர் என்பதை இக்குறள் காட்டுகிறது.
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு துறையில் சிறந்தவராக இருப்பர். தன் பிள்ளைக்கு எது சிறப்பாக வரும் என்பதை அறிந்து வழிகாட்டுவதே தந்தையின் பொறுப்பு. எனவே பல அறிஞர் கூடியிருக்கும் சபையில்  உங்கள் பிள்ளை அறிஞனாக, தலைவனாக முதன்மைபெறக்கூடிய தகுதியை ஏற்படுத்திக் கொடுங்கள். அதுவே தந்தை தன் பிள்ளைக்குச் செய்யும்  நன்மையாகும்.