இலக்குமியை நம் முன்னோர்கள் அலைமகள், ஆக்கம், இந்திரை, கமலை, பதுமை, பாற்கடற் பிறந்தாள், பின்னை, பொருளின் செல்வி, பூமகள் மலர்மகள் என பல பெயர்களால் அழைத்தைக் காணமுடிகிறது. நவராத்திரி விழாவில் மூன்று நாட்கள் இலக்குமியை பூசை செய்வோம். இலக்குமி பற்றி நம் பண்டைத் தமிழ் முன்னோர் என்ன சொன்னார்கள் என்பதை தேடி அறிய மாட்டோம். பலரின் வீடுகளில் திருக்குறள் புத்தகமும் இருக்கும் அதனை சிறு பொழுது படித்துப் பார்க்கலாமே! அதில் வள்ளுவப் பெருந்தகை இரண்டாயிர வருடங்களுக்கு முன்பு இலக்குமியின் தன்மைகளை சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டியுள்ளார். அவரும் இலக்குமியை செய்யாள், செய்யவள், தாமரையினாள், திரு என நான்கு பெயர்களால் அழைத்து மகிழ்ந்துள்ளார்.
1. செய்யாள்
நம் தமிழ் முன்னோரின் மிக உன்னதப் பண்பாகக் கருதப்படும் விருந்தோம்பல் பண்பை எடுத்துச்சொல்லும் “விருந்தோம்பல்” என்னும் அதிகாரத்தில் வரும் நான்காவது குறளில் “செய்யாள்” என மனதில் வீற்றிருக்கும் இலக்குமியைக் காட்டுகிறார். எப்படிப்பட்டவர் வீட்டில் மனமகிழ்ச்சியுடன் செய்யாள் வீற்றிருப்பாள் என்பதை
“அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்”
- (குறள்: 84)
என அவர் சொல்லிய பாங்கு போற்றுதலுக்கு உரியதாகும். முகம்மலர்ந்து [முகன் அமர்ந்து] விருந்தினரை வரவேற்று விருந்து கொடுப்பவன் [ஓம்புவான்] வீட்டில் [இல்] மனம் மகிழ்ந்து [அகன் அமர்ந்து] இலக்குமி [செய்யாள்] வாழ்வாள். உங்கள் வீட்டில் செல்வம் சிறந்து விளங்க வேண்டுமா ‘முகத்தில் மகிழ்ச்சி பொங்க வீட்டுக்கு வருபவர்களுக்கு இருப்பதைப் பகிர்ந்து கொடுத்து உண்ணுங்கள்’.
2. செய்யவள்
மற்றவர்கள் நன்றாக வாழ்வதைப் பார்த்து பொறாமைப்படாது இருத்தல் அழுக்காறாமை எனப்படும். பொறாமை கொள்ளாது வாழ்வது எப்படி? எதைப்பெற அப்படி வாழவேண்டும்? என்பவற்றைச் எடுத்துச்சொல்லும் “அழுக்காறாமை” என்னும் அதிகாரத்தில் ஏழாவது திருக்குறளில் இலக்குமியை “செய்யவள்” என விளிக்கிறார். பொறாமை உள்ளவர்களிடம் செல்வம் நிலைத்து இருக்குமா என்பதைச் சொல்லும் இடத்தில்
“அவ்வித்து அழுகாறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்”
- (குறள்: 167) என மற்றவர் மேன்மை கண்டு பொறுக்காது [அவ்வித்து] பொறாமைப்படுபவனுக்கு [அழுக்காறு உடையானை] இலக்குமி [செய்யவள்] தன் தமைக்கையாகிய மூதேவியைக் [தவ்வை] காட்டிவிடுவாள்’ என்று காட்டுகிறார். வறுமை இன்றிவாழ பொறாமை இன்றி வாழவேண்டுமாம்.
3. தாமையினாள்
நாம் முயற்சியுடையவராய் இருப்பதை ஆள்வினை உடைமை என்பர். எப்படி முயற்சி உடையவராய் வாழ்வது? முயற்சி உடையராக வாழ்வதால் வரும் நன்மைகள் என்ன? என்பவற்றை சுட்டிக்காட்டும் “ஆள்வினை உடைமை” எனும் அதிகாரத்தின் ஏழாவது குறளில் “தாமரயினாள்” என இலக்குமியைச் சுட்டுகிறார். யாருடைய முயற்சியில் இலக்குமி தங்கி வாழ்வாள்?
“மடிஉளான் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள்”
- (குறள்: 617)
சோம்பியிருப்பவனுடன் [மடியுளான்] மூதேவி [மாமுகடி] இருப்பாள், சோம்பல் இல்லாதவன் [மடியிலான்] முயற்சியில் [தாள்] இலக்குமி [தாமரையினாள்] இருப்பாள் [உளாள்] என்பர் [என்ப]. எனத் தனக்கு முன் வாழ்ந்த எம் தமிழ் முன்னோர் தாமைரையினாள் என்று அழைத்து, இலக்குமி பற்றிக் கூறியதை படமெடுத்து மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளார். சோம்பல் இன்றி வாழ்ந்தால் செல்வத்துடன் வாழலாம் என்பதை பண்டைத் தமிழர் அறிந்திருந்ததை பார்த்து எம்மையும் பெருமைப்பட வைத்துள்ளார்.
4. திரு
திருமணம் செய்தலை 'வரைவு' என்றும் சொல்வர். திருமணம் செய்யாது பொருளுக்காக ஆடவருடன் வாழும் மகளிரை வரைவின் மகளிர் என்றும் அழைப்பர். நாம் இப்போது விலைமகளிர் என்கிறோம். ஆண்களுக்கு அவர்களது ஒழுக்கதை உணர்த்தும் அதிகாரமாகிய “வரைவின் மகளிர்” என்ற அதிகாரத்தின் பத்தாவது திருக்குறளில் “திரு” எனும் அழகிய பெயரால் இலக்குமியை அழைத்து மகிழ்ந்துள்ளார். எதைப்பார்த்து விலை மகளிரைக் கைவிட வேண்டும்? விலை மகளிர் தழுவது எது போன்றது? என்பவற்றைக் காட்டும் இடத்தில் எவை இலக்குமியால் கைவிடப்பட்டவரைச் சேரும் என்பதை
“இருமனப் பெண்டிரும் கள்ளும் கவரும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு”
- (குறள்: 920)
திரு [இலக்குமி] கைவிட்டவர்க்கு இரண்டு மனமுடைய பெண்டிரும் [விலைமகளிரும்], கள்ளும், சூதாட்டமும் [கவரும்] நட்பாகும். மாது, மது, சூது போன்றவற்றின் தொடர்பு இன்றி வாழ்ந்தால் இலக்குமி என்ற தெய்வத் திருவின் அருட்பார்வை எம்மைச்சேரும்.
நம் தமிழ் முன்னோர் செய்யாள், செய்யவள், தாமரையினாள், திரு என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்ததை திருக்குறளில் திருவள்ளுவர் காட்டியதைப் பார்த்து நாமும் திருமகள் தாள்வணங்கி மகிழ்வோம்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment