Friday, 9 February 2024

திருவள்ளுவர் வியந்து பார்த்த பெண்மை


உலகிலே பெண்ணை அற்புதமாகப் பார்த்து வியந்த முதல் மனிதர் திருவள்ளுவர் என்பது எனது கருத்துத்தாகும். அவர் வியந்ததுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அதற்கும் அப்பால் பெண்ணைப் பற்றி மிகப் பெரிய ஆய்வும் செய்து அதனைத் திருக்குறளில் பொறித்தும் வைத்திருக்கிறார்.

பண்டைத் தமிழரின் முதல் நூலாகிய மறை [வேதம்] அறம், பொருள், இன்பம், வீடு பற்றிப் பேசும். திருவள்ளுவர் இந்த அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாற்பாலின் திறத்தை தாமெழுதிய திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலினுள் விளக்கி வடித்துத் தந்துள்ளார்.

பெண்ணை - பெண்ணின் தன்மையை - பெண்மையை வியந்து நின்ற திருவள்ளுவர் திருக்குறளின் முதற்பாலாம் அறத்துப்பாலில் உலகில் பெருமைக்கு உரியதாக என்ன?” இருக்கிறது எனத் தேடிப்பார்த்துக் கிடைத்ததை இல்லறவாழ்வில் துணையாக வரும் மனைவியின் சிறப்புப் பற்றி கூறுமிடத்தில் [வாழ்க்கைத் துணைநலம்]

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” எனக் கேள்வி எழுப்பி தனது ஆய்வைத் தொடங்கி அதனை

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்புஎன்னும்

திண்மை உண்டாகப் பெறின் - (குறள்: 54) 

எனப் பொறித்துள்ளார். பெண்ணைவிடப் பெருமைக்குரியது வேறு என்னதான் இருக்கிறது? அதுவும் கற்பு என்று சொல்லப்படுகின்ற கல்வியால் வந்த மன உறுதியும் சேர்ந்து இருக்குமானால் இல்லற வாழ்வுக்கு பெருமை அளிப்பவள் பெண்ணே, என்பது அவர் கண்ட முடிவு.

அடுத்து திருக்குறளின் இரண்டாம் பாலாம் பொருட்பாலில் எத்தகைய ஆணைவிடப் பெண் பெருமை உடையவள் என்பதைப் பெண்ணின் சொல்வழி கேட்டு நடக்கும் ஆண் பற்றிக் கூறுமிடத்தில் [பெண்வழிச் சேறல்]

பெண்ணே பெருமை உடைத்துஎன்ற ஒரு முடிவுக்கு வந்து அதை

பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணூடைப்

பெண்ணே பெருமை உடைத்து - ( குறள்: 907)

பெண்ணுக்குப் பணிவிடை செய்து வாழ்பவனின் ஆண்மையைவிடப் நாணம் உள்ள பெண்ணே பெருமை பெறுவாள் என்று கோடிட்டுக் காட்டுகிறார்.

திருக்குறளின் மூன்றாம் பாலாம் இன்பத்துப்பாலிலே பெண்ணவிடப் பெருமை உடையது எதுவும் இல்லை எனத் தனது ஆய்வின் முடிவைப் பதித்துள்ளார். மனிதப்பண்பு இருப்போரிடத்தில் நாணம் இருக்கும். அந்த நாணம் ஆணோ பெண்ணோ இருவர்க்கும் பொதுவானது. இன்பத்துப்பாலில் ஓர் அதிகாரத்தில் காமம் மிகுவதால் நாணத்தைக் [வெட்கத்தை] கைவிடுதல் பற்றிச் சொல்லும் இடத்தில் [நாணுத் துறவுரைத்தல்]

பெண்ணின் பெருந்தக்கது இல் என்று நாணமுள்ள பெண்களின் பெருமையை பெருமிதத்துடன் சொல்லி மகிழ்ந்ததை

கடல்அன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்கது  இல் - (குறள்: 1137)

கடல் போலக் காமத்தில் மூழ்கினாலும் அத்துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு [வெட்கத்தால்] மடல் ஏறாமலிருக்கும் பெண்ணைவிடப் பெருமையுடையது வேறு இல்லை என உறுதியான தனது முடிவைப் பொறித்துக் காட்டியுள்ளார்.

முப்பாலின் நலன் சொன்ன திருவள்ளுவர் பெண்ணின் பெருமையை ஒவ்வொரு பாலுக்கும் ஒரு திருக்குறளாக மூன்று குறளுள் 

1.    பெண்ணிற் பெருந்தக்க யாவுள"

2.    "பெண்ணே பெருமை உடைத்து

3.    "பெண்ணின் பெருந்தக்கது  இல்

எனத் தன் ஆய்வின் முடிவைப் பொதித்து வைத்துள்ளார். என்னே திருவள்ளுவரின் கொள்கையின் சிறப்பு!

இனிதே,

தமிழரசி. 

No comments:

Post a Comment