சிந்தனைத் தெளிவுக்கும் ஆன்மிகத் தேடலுக்கும் வழிவகுக்கும் ஓர் இனிய சொல் ‘ஞானவாள்’. அற்புதமான இந்தச் சொல்லை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர் வித்துவான் மாமா. வித்துவான் சி ஆறுமுகம் அவர்கள் யாழ் ஸ்கந்தவரோதயக் கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் தமிழ் ஆசிரியராய் இருந்து பல தமிழ் அறிஞர்களை உருவாக்கியவர். அவர் என்னைத் தன் கையில் தூக்கித் திரியும் காலத்தில் சிறுவர்க்காக தானியற்றிய பாடல் ஒன்றை எனக்குச் சொல்லித் தந்தார்.
“ஆலடி மல்லன் என்பார் - குழந்தாய்
அரசடி மாடன் என்பார்
ஞானவாள் கைக் கொண்டு - குழந்தாய்
ஈனமாம் பேயை வெட்டு”
- (வித்துவான் சி ஆறுமுகம், புங்குடுதீவு)
அதை நான் பாடித்திரிவேன். ஒருநாள் ‘ஞானவாள் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? என்று மாமாவிடம் கேட்டிருக்கிறேன். என்னையே அந்த ஞானவாளைத் தேடிக் கொண்டுவரும்படி கூறியிருக்கிறார். வீட்டிலும் தேடுங்க கிடைக்கும். ஆனால் எவரிடமும் கேட்கவேண்டாம் என்றார்கள். எங்கே போய்த் தேடுவேன்? வித்துவான் மாமாவோ என்னை விட்டபாடில்லை. எப்போ கண்டாலும் “மருகி! ஞானவாள் கிடைத்ததா?” என்பார். இப்படிக் காலமும் உருண்டது.
நான் ஏழாம் வகுப்புப் படிக்கும் பொழுது என் தந்தையின் இரண்டாவது அண்ணன் தியாகராஜா வீட்டிற்கு வந்திருந்தார். அவர் மிக ஆழமான முருகபக்தர். அருணகிரிநாதர் எழுதிய நூல்கள் அவ்வளவும் அவருக்கு மனப்பாடம். எனக்கு அப்பாடல்களைச் சொல்லித் தந்து அவற்றின் கருத்தைக் கூறும்படி கேட்பது அவரது வழக்கம். அருணகிரிநாதர் பாடலுக்கு கருத்துச் சொல்வது எளிதா? அன்றும் ஒரு கந்தரலங்காரப் பாடலைக் கற்றுத் தந்து கருத்துக் கேட்டார். அப்பாடல் உண்மையிலே நான் தேடித்திரிந்த ‘ஞானவாளை’ என்னிடம் தந்தது. துள்ளிக் குதித்தேன். பாடலைக் கற்றுத்தந்த சீனியையாவைக் கட்டிப்பிடித்து கொஞ்சி மகிழ்ந்தேன். அது ஞானவாள் எங்கே கிடைக்கும் என்பதையும் எனக்குக் காட்டித் தந்தது.
எனது தேடுதலால் மாணிக்கவாசகரிடமிருந்தும் ஒரு ஞானவாள் கண்டெடுத்தேன். அவர் அமைச்சராக இருந்தவர். எனவே அவருக்குப் போர்ப் படைகள் பற்றியும் படைவீரர்கள் எப்படி போருக்குச் செல்வார்கள் என்பதும் நன்கு தெரியும். அங்கே எம்மைப் போன்ற வீரர்கள் எதிரி அரசனின் போர்ப்படையை எதிர்த்து போகாமல் மாயப்படை வராமல் தடுக்கப் போகிறார்கள். ஏனெனில் அவர்களின் நோக்கமே வான ஊரைக் கைப்பற்றுவது என்கிறார். அந்தத் திருப்படை எழுச்சி,
“ஞான வாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்
மான மா ஏறும் ஐயர் மதி வெண் குடை கவிமின்
ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்
வான ஊர் கொள்வோம் நாம் மாயப் படை வாராமே”
- (திருவாசகம்: 46: 1)
எங்கள் தலைவன்[ஐயர்] கையில் ஏந்தியிருப்பது ஞானவாள். போருக்கு செல்வதை அறிவிக்க அவரது நாதப் பறையை அடியுங்கள்[அறைமின்] மானமுள்ள குதிரையில்[மானமா] ஏறிச்செல்பவர். அவரைப் போல நாமும் ஞானவாளை ஏந்தி, அறிவென்னும்[மதி] வெண்குடையைப் பிடித்து திருநீற்றை கவசமாக அணிந்து சென்று, ஐம்புல மாயப்படை எமைத்தாக்காது தடுத்து, வானவூரைக் கைப்பற்றுவோம் என்கிறது.
ஞானவாள் ஏந்தும் தலைவருக்கு ஞானவாளைக் கொடுத்தது யார்? இதற்கான விடையை சீனியையா சொல்லித்தந்த கந்தரலங்காரத்தில் அருணகிரிநாதர் தந்துள்ளார்.
“தந்தைக்கு முன்னம் தனி ஞானவாள் ஒன்று சாதித்து அருள்
கந்தச்சுவாமி எனைத் தேற்றிய பின்னர்க் காலன் வெம்பி
வந்து இப்பொழுது என்னை என்செய்யலாம் சக்திவாள் ஒன்றினால்
சிந்தத் துணிப்பன் தணிப்பு அரும் கோப திரிசூலத்தையே”
- (கந்தரலங்காரம்: 69)
முன்னொரு காலத்தில் தந்தைக்கு[சிவனுக்கு] ஒப்பற்ற மெஞ்ஞானமாகிய ஞானவாள் ஒன்றைக் கொடுத்து அருள்செய்த கந்தசுவாமி, என்னைத் அறிவுத்தெளிவு[தேற்றிய] அடையச் செய்த பின்னர் இயமன்[காலன்] கோபங்கொண்டு[வெம்பி] வந்து இப்பொழுது என்னை என்ன செய்ய முடியும்? சக்தியின் வாள் ஒன்றினால் அவனின் தணிக்கமுடியாத [தணிப்பு அறும்] கோபத் திரிசூலம் சிதறும்படி[சிந்த] வெட்டுவேன்[துணிப்பேன்] என்கிறார்.
திருமூலர் தந்த ஞானவாள்
“நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைத் தான் எதிராரே”
- (திருமந்திரம்: 2968)
இயமன் வந்தால் ஞானவாள் கொண்டு வெட்டுவேன். சிவன் வந்தால் அவருடன் துணிந்து[திண்ணம்] போவேன். பிறவித்தொடரைத்[பவம்] தரும் கொடிய வினைகளை [வல்வினை] முன்பே அறுத்துவிட்டேன். ஆன்ம ஈடேற்றத்தை அறியத் தந்த தவத்தால் கிடைத்த சிந்தைக்கு [சித்தத்தே தித்திக்கும் தேன்] எதிரார் யார்?
இப்படி சிந்தை நிறையை இறைவனைச் சிந்தனை செய்து ஞானவாள் பெற்றாலும் அதனால் பயன் என்ன?
மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், திருமூலர் மூவருக்கும் ஞானவாள் வாராநெறி காட்டுகிறது. மீண்டும் பிறந்து வராத வழியைக் காட்டுவதால் நாமும் ஞானவாள் ஏந்துவோமா!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment