குறள்: முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா
வஞ்சரை அஞ்சப் படும் - 824
பொருள்: கண்டதும் முகம் மலர்ந்து சிரித்துப்பேசி மனதில் கேடு நினைக்கும் வஞ்சகர்க்குப் பயப்பட வேண்டும்.
விளக்கம்: திருவள்ளுவப் பெருந்தகை தான் எழுதிய நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்களில் ஐந்து அதிகாரத்தை நட்பைப்பற்றி விளக்கிக் கூறப் பயன்படுத்தியுள்ளார். இன்னொரு வகையில் சொல்வதானால் நட்பின் வெவ்வேறு தன்மையை பலவகையில் எமக்குப் புரியவைக்க அதனை ஐம்பது திருக்குறளில் தந்திருக்கிறார்.
அவர் மற்றைய எல்லா விடயங்களுக்கும் கொடுக்காத முதன்மையை நட்புக்குக் கொடுத்துள்ளார். அது ஏன்? ஏனெனில் மனிதவளர்ச்சிக்கு மிகவும் தேவையானதும் மனிதனை மனிதனாக வழிநடத்துவதும் நட்பே. நட்பின் உயிர்நாடி அன்பாகும். அன்பில்லையேல் நட்பும் வற்றல் மரமாகக் காட்சிதரும். பிறந்த குழந்தையில் இருந்து தொண்டு கிழவர் வரை அன்பு எப்படிப் பிணைக்கிறதோ அப்படி நட்பும் எம்மைப் பிணைக்கிறது. அது தாய், தந்தை, உறவினர், அயல், பள்ளித்தோழர், ஆசிரியர், கடைக்காரர், பால்க்காரர், வேலையாள், வைத்தியர், காதல், கல்யாணம் என இது விரிந்து செல்லும். இப்படி சமூகக் கட்டமைப்பை உண்டாக்கியதும் நட்பே. அதுவே இக்காலப் பேசுபொருளாகிய மனிதநேயம், உலகநேயம் எனப் பரந்து மனிதத் தன்மையுடன் எம்மைச் செயல்பட வைக்கிறது.
இத்திருக்குறள் கூடாநட்பு என்னும் அதிகாரத்தில் நான்காவது குறளாக உள்ளது. நகாஅ என்றால் நகைத்து எனப் பொருள் தரும். ஒருவரைக் கண்டதும் முகம் இனிமையான சிரிப்பைக் காட்ட மனதில் ஏற்படும் வெறுப்பாலும் பொறாமையாலும் கேடு நினைக்கின்ற வஞ்சகர் எவராய் இருப்பினும் அவர்கட்கு பயப்படவேண்டுமாம்.
இராமலிங்க அடிகளாரும் [வள்ளலாரும்]
"உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்"
என தனது திரு அருட்பாவில் கூறிப்போந்தார்.
ஏன் நாம் வஞ்சகர்களுக்குப் பயப்படவேண்டும்?
ஔவையார், ‘செந்தாமரையில் இருக்கும் இலக்குமி நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவர்கட்கு நீர்வளமும் மரச்சோலைகளால் ஆன நிழல் வளமும் வயல் நிலத்தில் நிறைந்த நெல்லும் பேரும் புகழும் பிறர் மதிக்கும் பெருவாழ்வும் நல்ல ஊரில் வாழும் வாழ்க்கையும் செல்வமும் நீண்ட வாழ்நாளும் எப்பொழுதும் தருவாள் என்பதை
“நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வரும்
திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
தரும் சிவந்த தாமரையாள் தான்” - ( நல்வழி- 21)
நல்வழியில் கூறியுள்ளாள்.
எனவே வஞ்சகர் நட்பை கொஞ்சம் தள்ளிவைப்பது மிகவும் நன்று.
No comments:
Post a Comment