இலங்கையின் கடலோரப் பகுதிகள் தீவுப்பகுதிகள் யாவும் கடலரிப்புக்கு உள்ளாகின்றன. அதற்கு ‘காலநிலை மாற்றமும் கடல் நீர் மட்ட உயர்வும் காரணம்’ என்று கூறி, மனிதர்களாகிய நாம் அவற்றைக் கண்டுகொள்ளாது இருத்தல் நன்றா? இயற்கை மிகவும் நுட்பமானது. அதனை நுட்பமாக நுணுகி ஆராய்ந்து பார்ப்போர் கண்ணுக்கு இயற்கையின் ஒவ்வொரு செயலும் பெரு வியப்பைத் தரும்.
உலகெங்கும் உள்ள கடற்கரை ஓரங்களை அழகுமிளிர வைத்து ‘திரண்டால் மிடுக்கு’ என எமக்குப் பாடம் புகட்டுகிறது இயற்கை. உண்மையில் இயற்கை ஒன்றில் ஒன்று தங்கி, ஒன்றை ஒன்று காத்து தனது இருக்கையைப் பேணிக் கொள்கிறது. மனிதர்களாகிய நாமே இயற்கை தனக்கென வகுத்துக் கொண்ட இயற்கை வட்டத்தை சீரழித்து காலநிலை மாற்றத்தை உருவாக்கி வைத்துள்ளோம். இயற்கையை இயற்கையின்படி விட்டாலே அது தன்னைத் தானே சீர்செய்துகொள்ளும்.
கடற்கரை ஓர மணல் மேடுகளை மிடுக்குடன் காட்சிப்படுத்தியவை அடம்பங் கொடிகள், இராவணன் மீசை போன்ற இயற்கைத் தாவரங்களே. இக்கால மனிதர்களாகிய எமக்கோ அவை எவையும் வேண்டத்தகாத குப்பைகளே. சங்ககால தமிழர் கடற்கரை ஓரச்செடி, கொடி, மரங்களை பேணினர். இன்னொரு வகையில் சொல்வதானால் தாமும் வாழ்ந்து அவற்றையும் வாழவைத்தனர். அவற்றின் அழகை உள்வாங்கி அழகிய தமிழ்ச்சொற்களால் எழுதியும் வைத்துள்ளனர்.
கடற்கரை மணல் மேடுகளை ‘எக்கர்’ என்பர். இடுமணல் என்னும் கருத்தில் எக்கர் என அழைத்தனர். இன்றும் நாம் வயிற்றை எக்குவோம். எக்கும் போது வயிறு உள்வாங்கப்படுகிறது. கடல் அலையும் உள்வாங்கி மணலை - நுண்மணலை அள்ளிக் கொணர்ந்து இடுமணலாக குவிக்கிறது. அதனால் மணல் மேடுகள் எக்கர் எனப்பெயர் பெற்றன. அந்த எக்கரில் அடம்பங்கொடி படர்ந்திருப்பது புலவர் கண்ணுக்கு அமர்ந்திருப்பது போல தெரிந்ததால்
“அடும்பமர் எக்கர் அம்சிறை உளரும்” - (அகம்: 320: 9)
எனப்பாடியுள்ளார். அடம்பு படர்ந்து [இவர்ந்து] சென்றதால் எக்கர் அழகாக [அணி] இருந்ததை
“அடும்பு இவரணி எக்கர்” -(கலி: 132: 16)
என்கிறது கலித்தொகை. மானின் அடி போன்ற இலையை உடைய அடம்பங் கொடியில் குதிரையின் கழுத்து மணி போலிருந்த பூவை வளையல் அணிந்த பெண்கள் கொழுதி[விரியாத மொட்டுக்களை வலிந்து விரித்து] விளையாடியதை குறுந்தொகையில்
“மானடி யன்ன கவட்டிலை அடும்பு
தார்மணி யன்ன வொண்பூக் கொழுதி
ஒண்தொடி மகளிர் வண்ட லயரும்” - (குறுந் 243: 1 - 3)
என நம்பிக்குட்டுவனார் எனும் புலவர் படம் பிடித்துக் காட்டுகிறார்.
இளவயது ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து
“குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்”
- (நற்றிணை: 254: 2)
விளையாடி காதல் வயப்பட்டதை நற்றிணை விரிவாகத் தருகிறது.
அடும்பின் பூவைக் கொய்து நெய்தல் பூவுடன் மாலையாக தொடுத்து மகளிர் கூந்தலில் சூடியதை
“அடும்பின் ஆய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்”
- (குறுந்தொகை: 401: 1- 2)
குறுந்தொகை சொல்கிறது. நம் முன்னோர் கொண்டாடிய அடம்பங்கொடியின் இன்றைய நிலை என்ன? அவர்கள் ஏன் மணல் மேடுகளில் அடம்பன் கொடிகளைப் படரவிட்டு பார்த்துக் களித்தனர்?
சிறுவர்கள் காலால் மதித்தாலே உடைந்து போகும் மென்மையான தண்டுகள் உடையது அடம்பங்கொடி. ஆனால் அக்கொடிகள் பின்னிப் பிணைந்து செழித்து கடற்கரை எங்கும் காட்சியளிக்கும். அவை அப்படிப் பின்னிப் பிணைந்து மணலில் படர்ந்து செல்வதேன்? என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அச்செயல் இயற்கை தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட அருங்கொடை எனக் கூறினும் தவறில்லை.
நம் முன்னோர் “ஒற்றுமையே பலம்” என்பதை எடுத்துக்காட்ட “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற பழமொழியைக் கூறினர். தனி ஒரு கொடி மிக இலகுவாக உடைந்து போகும். ஒன்றாக இணைத்து திருகி எடுத்தால் அதை அறுத்து எறிவது கடினம் என்பதையே நம்மவர் எடுத்துக் காட்டாகச் சொல்வர். அவர்கள் சொல்வது ஓரளவு உண்மையே. ஆனால் நம் முன்னோர் இப்பழமொழியை அந்த நோக்கத்தில் மட்டும் சொல்லவில்லை. ஏனெனில் அவர்கள் இயற்கையோடு இசைந்து வாழ்ந்தவர்கள். அதன் ஒவ்வொரு செயலையும் கணித்தே வைத்திருந்தனர்.
இப்பழமொழி அடம்பன் கொடியின் மிடுக்குக்கு கட்டியம் கூறுகிறது. அப்படி என்ன பெரிய செயலை அடம்பன் கொடியால் செய்யமுடியும் என எண்ணுகிறீர்களா? இயற்கையில் உலக இயக்கத்தை இயக்குவதில் நீரும் காற்றும் நிலமும் சூரிய ஒளியின் வெப்பமும் பெரும் பங்கு ஆற்றுகின்றன. இவை இயற்கையை எப்படி ஆக்குகின்றனவோ அப்படி அழிக்கவும் தவறுவதில்லை. அதனால் இயற்கை கடற்கரையைக் காத்துக்கொள்ள உண்டாக்கிய கவசம் அடம்பங்கொடி என்று சொல்லலாம்.
அடம்பங்கொடி கவசமா?
1. மணல் மேடு எங்கும் படர்ந்து பிணைந்து வளரும். எவ்வளவு வேகமாக வீசும் காற்றாலும் அடும்பு படர்ந்திருக்கும் இடத்தில் இருக்கும் மணலை அள்ளி வீச முடியாது.
2. மணலினுள் அடம்பங்கொடியின் மிகவலிமையான கிழங்குகள் இருக்கும். கடலலை மோதினாலும் மணலினுள் இருக்கும் அடும்பின் வலிமையான கிழங்குகள் மணலைப் பற்றிப்பிடித்து அரிப்பில் இருந்து காக்கின்றன.
3. சூரிய ஒளியின் வெப்பம் கடற்கரை மணலில் கால்பதிக்க முடியாது சுடும். என்றாதாவது உச்சிவேளை வெய்யிலில் கடற்கரை மணலில் நடந்து திரிந்தோ, சற்று இருந்து கடலலையைப் பார்த்து இரசித்து இருக்கிறீர்களா? அப்படி இருக்கும் பொழுது சூடு தாங்க முடியாமல் ஓடிப் போய் அடம்பங்கொடி மேல் இருந்திருக்கிறீர்களா? அடம்பங்கொடி செழித்துப் படர்ந்த இடம் எவ்வளவு குளிர்மையாக இருக்குமென்பது அப்படி இருந்தோர் அறிவர். எனவே அடம்பங்கொடி நிலத்தைக் குளிரவைக்கும். நிலத்தடி நீர் ஆவியாதலைத் தடுக்கும்.
4. படர்ந்திருக்கும் அடம்பங்கொடிக்குள் பறவைகள் கூடுகள் கட்டியும் முட்டைகளை இட்டும் ஒளித்தும் வைக்கும். அவையும் மணலரிப்பை தடுக்கின்றன.
5. அடம்பங்கொடி இறந்து உக்கிப் போகும் பொழுதும் தான் வளர்ந்த நிலத்தில் இருந்த உப்பின் உவர்த்தன்மையை நீக்கச் செய்கிறது. அதனால் இறந்த அடம்பங்கொடி உவர்நிலத்துக்கு உகந்த இயற்கைப் பசலையாகிறது.
மனிதனால் வெல்லமுடியாத காற்று, நீர், நிலம், சூரிய வெப்பம் போன்றவற்றால் கடற்கரையில் ஏற்படும் அழிவுகளை கவசமாக இருந்து அடம்பங் கொடி பாதுகாக்கிறது. அடம்பன் கொடி திரண்டு இயற்கையைக் காக்கும் மிடுக்கை இப்பழமொழி சொல்கிறது.
இலங்கையின் கடற்கரைப் பகுதியில் வாழ்வோரும் தீவுப்பகுதி மக்களும் அடம்பங்கொடியை கடற்கரை மணலில், மணல் மேடுகளில் கடற்கரை எங்கும் நட்டு மணலரிப்பை தடுப்பது காலத்தின் தேவையாகும்.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment