உருக்குவாளின்[எஃகு] முன்னோடிகள் தமிழர்.
இயற்கையில் இருந்து இவ்வுலகம் தோன்றியதை - தொன்மையைக் கூறி பண்டைத் தமிழரின் பழமையையும் மறமாண்பையும் சொல்லும் மிகப் பழைமையான வெண்பா ஒன்று இருக்கிறது. முன்னரும் இவ்வெண்பா பற்றி குறிப்பிட்டுள்ளேன். தமிழரின் தொன்மையோடு மறத்தமிழரின் வாளின் தொன்மையையும் எடுத்துச் சொல்வதால் அவ்வெண்பா தமிழர் வரலாற்றில் முதன்மை பெறுகிறது.
ஒருவன் தன்னை அறியாதவர்க்கு ‘மண் செறிந்து இருக்கும் உலகின் [ஞாலத்தின்] தொன்மையையும் மறக்குடியின் வீரதையும் [மறனும்] கொண்டு, பிறர் அறியும் படி தான்பிறந்த குடியின் பெருமையைச் சொல்வதை’ புறப்பொருள் வெண்பா மாலையில் உள்ள
“மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டுபிறர் அறியும் குடிவர வுரைத்தன்று”
- (பு.வெ.மா: கரந்தைப் படலம்: 13)
என்று இச்சூத்திரம் சொல்கிறது. இச்சூத்திரம் சொல்வதற்கு ஏற்ப, தான் யார் என்பதை எப்படி எடுத்துச் சொல்வது? என்பதை விளக்குவதே அவ்வெண்பாவின் நோக்கமாகும். அவ்வெண்பா புறப்பொருள் வெண்பாமாலையின் காலத்திற்கும் முந்தியது. எடுத்துக் காட்டாகவே அது அங்கு கையாளப்பட்டுள்ளது.
“பொய்அகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம்போர்த்த வயங்கு ஒலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”
- (பு.வெ.மாலை: சூத்திர விளக்கப்பாடல்: 35)
தமிழ்க்குடியின் பெருமை கூறும் அவ்வெண்பா ஏன் போர் வாள் பற்றிச் சொல்கிறது என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.
பண்டைய போர்ப்படைக் கருவிகளில் கைவிடாப் படை, கைவிடு படை என இரு வகைக்கருவிகள் உண்டு. நேருக்கு நேர் எதிர்த்து நின்று எதிரியைத் தாக்க உதவும் வாள், கத்தி போன்றவையே கைவிடாப்படை. கையிலிருந்து விடுபட்டுச் சென்று எதிரியைத் தாக்கும் கவண், வேல், வில் போன்ற கருவி கைவிடுபடை. கைவிடாப்படையை கையாள்வதற்கு வலிமையும் உயிருக்கு அஞ்சாத மனத்திடமும் இருக்க வேண்டும்.
இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முற்பட்ட இடைச்சங்ககால இலக்கணநூலான தொல்காப்பியம்
- ஓர் அரசன் பகையரசனுடன் போர் புரியச் செல்லும் முன் தனது கொற்றவாளுக்கு செய்யும் போற்றுதலை ‘வாள் மங்கலம்’ என்கிறது.
- பகையரசனின் கோட்டைமதிலை அழித்து வெற்றி பெற்ற பின்னர் கொற்றவாளை கொற்றவைமேல் வைத்துப் போற்றுதலை ‘மண்ணு மங்கலம்’ என்றும் அழைக்கிறது.
அதனை தொல்காப்பியத்தின் புறத்திணையியலில் பாடாண்திணை
“மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்
மன்எயில் அழித்த மண்ணு மங்கலமும்”
- (தொல். பொருள். புறத்திணை: 30)
எனச்சுட்டுவதால் அறியலாம். சங்ககால அரசர்கள் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்பே தமது கொற்றவாளுக்கு கொடுத்த முதன்மையை இவை காட்டுகின்றன.
ஆண்கள் மட்டுமல்ல அக்காலப் பெண்களும் வாள் வைத்திருந்ததை புறநானூற்றில் காக்கை பாடினியார் நச்செள்ளையார்
“நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மெந்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலை அறுத்திடுவன் யான் எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே”
- (புறநானூறு: 278)
என்று ஒரு போர்க்களக் காட்சியைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
மதுரைக்காஞ்சி என்னும் சங்க இலக்கியம் ஊர்காப்போர் எப்படிப்பட்ட வாளை வைத்திருந்தனர் என்பதை
“கல்லும் மரனுந் துணிக்குங் கூர்மைத்
தொடலை வாளர் தொடு தோலடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர்
நிலனகழ் உளியர் கலனசைக்இக் கொட்கும்
கண்மா ஆடவர் ஒடுக்க மொற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த
நூல்வழிப் பிழையா நுணங்கு நுண்தேர்ச்சி
ஊர்காப் பாளர் ஊக்கருங் கணையினர்
- (மதுரைக்காஞ்சி: 635 - 647)
எனக் காட்சிப்படுத்துகிறது.
சங்கத் தமிழர் தத்தமது ஊரில் வாழும் மக்களையும் செல்வத்தையும் கொள்ளைக்காரிடம் இருந்து காப்பதற்கு ஊர்காப்பாளர்களை வைத்திருந்தனர். அவ்வூர்காப்பாளர்கள் அறிவு செறிந்த நூலில் [ஊரை எப்படிக் காப்பது என்று] கூறிய வழிமுறையை நுணுகி நுட்பமாக ஆராய்ந்து [நூல்வழிப் பிழையா நுணங்கு நுண்தேர்ச்சி ஊர்காப்பாளர்] கற்றிருந்தனர். அவர்கள் ‘கல்லையும் மரத்தையும் வெட்டும் கூர்மையான வாளை உறையில் போட்டு இடையில் தொங்க [தொடலை வாளர்] வைத்திருந்தனர். காலில் தொடுதோல்[Sandals] போட்டிருந்தனர். கருமணல் போன்ற புள்ளிகள் உடைய நீலநிறக் கச்சு உடுத்து அதன்மேல் குறங்கிடையில் கூர்நுனி உள்ள குறும்பிடி என்னும் சிறு வாளைச் செறுகி இருந்தனர். நூல் ஏணியும் கன்னக்கோலும் [நிலன் அகழ் உளியர்] வைத்திருக்கும் திருடரை ஒற்றுப் பார்க்கும் கண்களுடன் யானையைப் பிடிக்க காத்திருக்கும் புலிபோல அஞ்சாத நெஞ்சினராய் வில்லுடன் காவல் புரிந்தனர். அவர்களை அறிந்தோர் அவர்களது ஆண்மையைப் புகழ்ந்தனர். அதனால் வீடுகளில் மக்கள் பயம் இன்றி உறங்கினராம்.
கரிய சேறு உள்ள தெருவில் பாய்ந்து செல்லும் செருக்கான குதிரை தன் மீதுவிழும் நீர்த்துளிகளை உடலைச் சிலிர்த்துச் சிதர, வழுவி விழுந்த அழகிய ஆடையை இடப்பக்கம் அணைத்தபடி, வாளைத் தோளில் தொங்கவிட்ட வலிமையான இளைஞனின் [மெய்க்காப்பாளனின்] தோள் மேல் வலக்கையை வைத்திருந்தான் பாண்டியன் தலையாலங்கானத்து செறுவென்ற நெடுஞ்செழியன் என்கின்றது நெடுநல்வாடை.
“…………… பாய்பரிக் கலிமா
இருஞ் சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப்
புடைவீழ் அம் துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கட் காளை
சுவல்மிசை அமைந்த கையன்”
- (நெடுநல்வாடை: 179 - 183)
பெரும்பாலும் புரவி வீரர்களே வாளைத் தோள் பட்டிகையில் கோத்துக் கட்டித் திரிந்தனர். பல்வகைப்பட்ட வாள்களை பண்டைத் தமிழர் பயன்படுத்தியதை சங்க இலக்கியங்கள் எடுத்துச் சொல்கின்றன.
தமிழ் நிகண்டுகள் வாளின் பெயர்களை நவிர், ஏதி, நாட்டம், கடுத்தலை, நாந்தகம், வசி, கட்கம், கூன்வாள் [கோணம்], முறுக்கு வாள், ஈர்வாள், சிறுவாள் [முசுண்டி], சுடர் வாள், வரிவாள், அரிவாள், கொடுவாள் [புள்ளம்], உடைவாள் [குறும்பிடி], கைவாள் [குறுக்கை], நெளிவாள், நெடுவசி என நீண்ட பட்டியல் இடுகின்றன.
நவிர் அடி அகன்று நுனி ஊசிபோல் கூரான வாள்.
கூன்வாளை வளைவாள் என்றும் கூறுவர், அது வளைந்திருக்கும்.
ஈர்வாள் சிறுசிறு பற்கள் உள்ள வாள்.
சுடர்வாள் முள் போன்ற பற்கள் வாளின் இருபக்கமும் இருக்கும் வாள்.
நெடுவசி என்பது நீண்ட வாளாகும். ஆளளவு உயராமாக இருக்கும்.
நெடுவசியை மலைபடுகடாம்
“கொழுநர் மார்பின் நெடுவசி விழுப்புண்”
- (மலைபடுகடாம்: 303)
என்கிறது.
‘ஈழவாள்’ என்றொரு வாள் இருந்திருக்கிறது. அதனை இரட்டைக்கத்தி, குத்துக்கத்தி என்ற பெயர்களாலும் அழைப்பர். வன்னிப்பகுதியில் ‘சுருள் வாள்’ என்றும் ஒரு வாள் வைத்திருந்தனர். தமிழகத்தில் அத்தகைய வாள் உண்டா என்பதை அறியமுடியவில்லை. ஒன்றரை அங்குல அகலத்தில் மிக மெல்லிய 6’ - 9’ அடித்தகடு சுருண்டிருக்கும். கைபிடியில் பிடித்துக் கொண்டு விரைவாக வீசினால் சுருள் தகடு நீண்டு எதிரியை வெட்டும். அதேவேளை விலங்கின் காலை சுற்றிப்பிடிக்கவும் செய்யும். வன்னிக் காட்டில் வேட்டைக்கு செல்வோர் அந்நாளில் சுருள் வாளைக் கொண்டு செல்வர். எதிர் பாராத இடத்தில் தாக்கவரும் யானையின் துதிக்கையை புலி, கரடி, பன்றி போன்ற விலங்குகளின் கால்களை காயப்படுத்த சுருள் வாள் உதவியது.
‘வாளொடு முந்தோன்றிய மூத்தகுடி’ எனச்சொல்வதற்கு வகை வகையாக வாட்களை வைத்திருந்தால் மாட்டும் போதுமா? இத்தகைய வாட்களை தமிழர் செய்தனரா? ஆதாரம் வேறு வேண்டாமா?
இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் உரோமாபுரி [Rome] அரசர்கள், அன்றைய தமிழ்நாட்டு சேர அரசர்கள் உற்பத்தி செய்த எஃகு வாளுக்கு [உருக்கு வாள் - Wootz Sword] காத்துக்கிடந்தனர் என்ற கருத்தை கொடுமணல் ஆய்வு உறுதி செய்துள்ளது. கொடுமணலில் இரும்பு உருக்கு ஆலை இருந்திருக்கிறது. கி மு 500 ஆண்டுக்கும் முந்திய தமிழ் எழுத்துப் பொறித்த உடைந்த பானை ஓடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன. அந்நாளில் கொடுமணல் சேர அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. கொடுமணல் மட்டும் அல்ல இலங்கையையும் சேர அரசர்களே ஆண்டனர். அதனை சங்க இலக்கியங்கள் மட்டுமல்ல இலங்கையின் பண்டைய பெயர்களில் ஒன்றான ‘சேரன் தீவு’ என்னும் பெயர் அன்றிலிருந்து இன்றுவரையும் நிலைபெற்று இருந்து பறையறைந்து கொண்டே இருக்கிறது. கி மு 200 ஆண்டில் இலங்கையில் உள்ள அநுராதபுரம், திஸ்ஸமாரகம [அம்பாந்தோட்டை] போன்ற இடங்களில் உருக்கு உற்பத்தி நடந்திருக்கிறது. அந்நாளில் தமிழர் வாழ்ந்த இடங்களே அவை.
சங்ககாலத்தில் உருக்கு[எஃகு] வாளை, ‘எஃகு’ என அழைத்ததை
“எஃகு விளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி”
- (புறநானூறு: 61: 13)
எனப் புறநானூறு அரசனின் கையில் இருந்த வாளை ‘எஃகு’ எனச் சொல்வதால் சங்ககாலத் தமிழர் வாளை ‘எஃகு’ என்றும் அழைத்ததை அறியலாம். இங்கு எஃகு என்பது உருக்கால்[wootz steel] செய்த வாளைச் சுட்டுகிறது. அந்நாளில் உருக்கை எஃகு என்றனர். அதனால் எஃகால் செய்த வாளை ‘எஃகு’ என்றே அழைத்தனர் போலும்.
அரசனை ஏன் ‘எஃகு விளங்கு தடக்கை’ எனப் புகழவேண்டும்? எஃகு என்னும் சொல் உறுதியானது என்பதை மட்டும் குறிக்கவில்லை. அதன் வளையும் தன்மையையும் சேர்த்தே சொல்கிறது. எஃகு, எக்கு என்பன வளைதலைக் குறிக்கும் சொற்களாகும். வயிற்றை எக்கு என்று சொல்வோம். வயிற்றை உள்வளைத்தலே எக்குதல். இரும்புடன் கரிமம் குரோமியம் போன்ற கனிமங்கள் சேர்த்தே உருக்கு செய்யப்படுகின்றது. இரும்பு எஃகு ஆகும் பொழுது உண்டாகும் Iron carbide உறுதியான வெட்டும் தன்மையையும் Carbide வளையும் தன்மையையும் கொடுத்து வாளின் தரத்தை உயர்த்துகிறது. துருப்பிடிப்பதையும் தடுக்கிறது. இரும்பு வாட்களைவிடவும் எஃகு வாட்கள் சிறந்து விளங்கின. அதனால் அரசன் எஃகு விளங்கு தடக்கையை உடையவன் எனப்புகழப்பட்டான்.
சேர அரசர்களின் புகழ் பாடும் பதிற்றுப்பத்து
“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்”
- (பதிற்றுப்பத்து: 74: 5)
என்று கொடுமணலைக் குறிக்கும் அதே பாடலில்
“எஃகுடை இரும்பின் உள்ளமைத்து வல்லோன்
சூடுநிலை உற்றுச் சுடர்விடு தோற்றம்
விசும்பாடு மரபின் பருந்தூறு அளப்ப”
- (பதிற்றுப்பத்து: 74: 13 - 15)
என்று ஒரு காட்சியைக் காட்டுகின்றது. வாள் செய்வதில் வல்லவன் உருக்காக மாற்றுகின்ற இரும்பு சூடேறி [சூடுநிலை] சிவந்து தகதகக்கும் [சுடர்விடு] தோற்றம் வானத்தில் பறந்து திரியும் பருந்துக் கூட்டத்தை இறைச்சித் துண்டு என நினைந்து வட்டமிட்டுச் சுற்றித் திரிய வைத்துள்ளது.
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்பே எஃகு வாட்களை செய்த தமிழ்குடி வாளொடு முந்தோன்றிய மூத்தகுடி என்பது உண்மையே.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment