Wednesday, 28 September 2022

அன்புச்சோறு

 

அன்பு என்பது ஓர் இன்பவூற்று. அதனை யாராலும் தடைபோட முடியாது. அது உலகவுயிர்களை ஒன்றுடன் ஒன்று பிணைக்கும் ஆற்றல் உடையது. அதனால் பண்டைய தமிழர் அன்பைப் போற்றினர். பாலை வனத்தில் பட்டமரம் எப்படி வறண்டு காட்சியளிக்குமோ அப்படி அன்பில்லா நெஞ்சம் இருக்கும் என்பது திருவள்ளுவர் கண்ட முடிவாகும்.

மனிதர் உயிர்வாழ மிகவும் வேண்டியது உணவாகும். அந்த உணவு உடலில் செரிப்பதற்கு அன்பு என்னும் நறுநெய்யும் ஊற்றப்பட வேண்டும். அதனை நாலடியார்ப் பாடல்

பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்

அக்காரம் பலோடு அமரர்கைத்து உண்டலின்

உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு

எக்கலத் தானும் இனிது

- நாலடியார்: 206

என மிக அழகாக எடுத்துச் சொல்கிறது. பொன்னால் செய்த தட்டில் இட்ட புலிநகம் போன்ற வெண்மையான சோற்றை சர்க்கரையும் [அக்காரம்] பாலும் கலந்து அமரர் [தேவர்] போல வாழ்வோரின் கையில் உண்பதைவிட, உப்பு இல்லாத புல்லரிசிக் கஞ்சியை [புற்கை] தன் உயிர் போல் நினைக்கும் அன்புள்ளோரிடம் [கிளைஞர்] எத்தகைய தட்டிலும் உண்பது இனிமையாக இருக்கும்.

அன்புச்சோற்றை உண்பது சிறந்தது எனச்சொல்வதற்கு ஏன் தேவரை இங்கு இழுத்து வந்து காட்டுகிறார். தேவர் தமக்காக வாழ்பவர். தேவர் - அவர்கள் கயவர். 'தேவர் அனையர் கயவர் அவர்கள் நெஞ்சில் அன்பு சுரக்காது வறண்டு போய்யிருக்கும். பகட்டும் அகங்காரமும் காட்சி கொடுக்கும். அவர்களைப்போல் வாழ்வோரிடமும் அன்பைக் காணமுடியாது. அவர்களிடம் உண்ணும் உணவு செரிக்காது.

ஒருவரைப் பார்த்ததும் அல்லது அவர்கள் பெயரைக், குரலைக் கேட்டதும் நம் நெஞ்சில் அன்பினால்  ஒரு கிளர்ச்சி உண்டாகும். அத்தகையோரே கிளைஞர். அவர்கள் எமது உறவினராகவோ, நட்பினராகவோ அல்லது அறியாதோராகக் கூட இருக்கலாம். உயிர்போன்ற அன்புள்ளோரிடம் இருக்கும் உணவு உப்பில்லாக் கஞ்சியானாலும் அதனை ஊற்றி தரும் கலம் சிரட்டையாகவோ, மட்கலமாகவோ, நெளிந்து உடைந்து இருப்பினும் இனிமையாக இருக்கும். அத்தகைய அன்புச்சோறு கிடைத்தால் பசியாற மகிழ்ந்து உண்ணலாம். அந்த அன்புச்சோற்றை எமக்குத் தந்தோர் முகமும் நெஞ்சில் என்றும் இனிமையாக நிலைத்திருக்கும்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment