இன்றைய தமிழர்களாகிய நாம் சங்கத் தமிழர் காலணிகள் அணியவில்லை என நினைக்கிறோம். அதனால் சப்பாத்து என்பது போத்துக்கீசச் சொல் அவர்களே தமிழருக்கு கலணிகள் அணியக் கற்றுத்தந்தனர். மேற்கத்தைய நாகரிகத்தால் இன்றைய தமிழர் shoes, sandals, boots என்பவற்றை அணிகிறோம் என்பதே நம்மவர் எண்ணமாக இருக்கிறது. அந்த எண்ணம் சரியானதா?
இயற்கையோடு இசைந்து வாழ்ந்த தமிழர் உலகின் வளர்ச்சிக்கு பலவைகை பொருட்களை கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்றே காலணி எனச் சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் இந்த உலகு கடலும் மலையுமாக [நீரும், நிலமுமாக] இருப்பதைக் கண்டு இரு நிலம் என அழைத்தோர் தமிழரே. இருநிலம் என்று மட்டுமா அழைத்தனர் அதற்கும் ஒருபடி மேலே சென்று குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகுத்தனரே! மற்றைய மொழிகளில் நிலத்தின் தன்மையைக் கொண்டு பெயரிட்டு உலகை அழைத்தனரா?
இருநிலம் என்றசொல்லை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.
குறிஞ்சிப்பாட்டு
“காரிப் பெயல் உருமின் பிளிறி சீர்த்த
இரும்பிணர் தடக்கை இருநிலம் சேர்த்தி”
- (குறிஞ்சிப்பாட்டு: 162 - 163)
எனச் சொல்ல, ஐங்குறுநூறு
“இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்”
- (ஐங்குறுநூறு: 470: 1)
என்று கூறுகிறது.
தமிழர் உலகை இருநிலமாகக் கண்ட பொழுதிலிருந்த காடு, மேடு, மலை, குன்று, எங்கும் அலைந்து திரியாது இருந்தனரா? அதனால் தங்கள் கால்களை கல், முள், பாம்பு, பூச்சி போன்றவற்றில் இருந்து காக்க வேண்டிய தேவை இல்லாது இருந்திருக்குமா? ஏன் நாம் அவற்றைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. shoes, sandals, boots என்பவற்றிற்கு தமிழ்ச்சொல் இருக்கிறதா? செருப்பு மட்டுமே தெரியும். அதுவும் slipper என்ற சொல்லில் இருந்து செருப்பு என்ற சொல்லைப் படைத்துக் கொண்டனர் என ஏளனமாகச் சிரிப்பது ஏன்?
உண்மையில் slipper என்னும் சொல் பழைய ஆங்கிலத்தில் 15ம் நூற்றாண்டு உருவானது என Etymology Dictionary சொல்கிறது. பழைய ஆங்கிலத்தில் slipper என்ற சொல் உருவாவதற்கு பல நூற்றாண்டுகளின் முன்பே சங்க நூல்கள் ‘செருப்பு’ என்னும் சொல்லை பொறித்து வைத்து இருப்பதை காணமுடிகிறது.
செருப்பு
“மிதியல் செருப்பின் பூழியூர் கோவே”
- (பதிற்று: 21: 23)
“செருப்பிடை சிறு பரல் அன்ன”
- (புறநானூறு: 257:1)
“செருப்புடை அடியவர் தெண்சுனை மண்டும்”
- (அகநானூறு: 129: 13)
வைகை ஆற்றில் நீராடப் புறப்பட்ட மக்கள் மிக மென்மையான நூலால் செய்யப்பட்ட காலுக்கு இதமான தாளிதம் [தாள்+இதம்] அணிந்ததை பரிபாடலின் பத்தாவது பாடல் எடுத்துச் சொல்கிறது.
“தாளித நொய்ந்நூற் சரணத்தார்”
- (பரிபாடல்: 10: 11)
பண்டைத் தமிழர் செருப்பு என்ற ஒருவகைக் காலணியை மட்டும் அணியவில்லை. தேவைக்கு ஏற்ப இடத்துக்கு இடம் பலவகையான காலணிகளை அணிந்திருந்ததற்கு சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. செருப்பு, மிதியல், மிதியடி, தாளிதம், தொடுதோல், அடிபுதை தொடுதோல், தோல்புதை, அடிபுதை அரணம், அடையல் என வெவ்வோறு பெயர்களில் அணிந்து தமது கால்களை மிகவும் மென்மையாகப் பேணியிருக்கின்றனர். இரண்டாயிர ஆண்டுகளாக இத்தனை வகை காலணியை நம் தமிழ் முன்னோர் அணிந்திருந்தும் slipper, shoes, sandals, boots என்பவற்றுக்கு என்ன தமிழ்ச்சொல் இருக்கிறது என மலைக்கிறோம்.
முல்லைநில மக்களாகிய இடையர்கள் அணிந்திருந்த அடிபுதை தொடுதோலை மாமூலனார்
“அடிபுதை தொடுதோல் பறைய ஏகி
கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்”
- (அகநானூறு: 101: 9 - 10)
எனக்காட்சிப்படுத்துகிறார். கால்த்தடம் தெரியாதிருக்க கால் புதையும் தொடுதோலை அணிந்து அது ஒலியெழுப்பச் சென்று காவல் மிகுந்த தொழுவத்திலுள்ள கன்றுகளுடன் கூடிய பசுக்கூட்டங்களைக் கொள்ளையிடுவர். பாருங்கள் கொள்ளை அடிக்கப்போவோர் கூட கால்புதைய காலணி அணிந்து சென்றுள்ளனர்.
முல்லைநில வேட்டுவர் அணிந்திருந்த காலணியை மதுரை மருதன் இளநாகனார்
“தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன
இருதிரி மருப்பின் அண்ணல் இரலை”
- (அகநானூறு: 34: 3 - 4)
என்கிறார். தொடுதோல் என்ற காலணியை அணிந்திருந்த வேடன் கவையுள்ள தடியை வைத்திருப்பது போல பெரிய முறுகிய கொம்புடைய ஆண்மான்கள் திரியுமாம்.
தொடுதோல்
குறிஞ்சி நிலத்தில் கானவர் பயிரை அறுவடை செய்து சூடு அடித்த பின்னர் சூடுவைத்திருந்த நிலத்தை கொழுத்தினர். எரித்த நிலம் சுடாதிருக்க காலணி அணிந்திருந்ததை மதுரை மருதன் இளநாகனாரே
“தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து”
- (அகநானூறு: 368: 1 - 2)
எனச் சொல்கிறார். தொடுதோலை அணிந்து அணிந்து ஆழமான வடுவந்த அடியுடன் திரிந்தவரின் அடியை
“தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி”
- (பெரும்பாணாற்றுப்படை: 169)
பெரும்பாணாற்றுப்படை படமெடுத்துக் காட்டுகிறது.
உப்புவிக்கும் நெய்தல் நில உமணர் அணிந்த காலணியை ஓரோடகத்துக் கந்தரத்தனார் எனும் சங்க காலப்புலவர்
“தோல்புதை சிரற்று அடி கோலுடை உமணர்”
- (அகநானூறு: 191: 4)
என எடுத்துக்காட்டுகிறார்.
அரச கட்டளைப்படி வழிப்போக்கர் கொண்டு செல்லும் பொருட்களை கொள்ளைக்காரர் கொள்ளையடிக்காது பாதுகாத்துச் செல்லுகின் காவற்காரன் அடிபுதை அரணம் என்னும் காலணி அணிந்திருந்ததை பெரும்பாணாற்றுப்படையில்
“அடி புதை அரணம் எய்தி படம் புக்கு”
- (பெரும்பாணாற்றுப்படை: 69)
என கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகிறார்.
தமிழர் தெய்வமான முருகன் ‘அடையல்’ என்ற காலணி போட்டிருந்ததை இருபத்தொறாவது பரிபாடல் தருகிறது. அக்காலணி சிவப்பு நிறம் ஊட்டப்பட்டு மயிற்பீலிகளால் அழங்கரிக்கப்பட்டு இருந்ததாம். முருகன் அணிந்திருந்த அடையல் என்ற அக்காலணியை எப்படி செய்தார்கள் என்பதையும் அப்பாடல் மிகத்தெளிவாகக் கூறுகிறது.
தொட்டதை[அணிந்ததை],
“தைப்பமை சருமத்தின் தாளியை தாமரை
துப்பமை துவர்நீர்த் துறைமறை யழுத்திய
வெரிநத் தோலொடு முழுமயிர் மிடைந்த
வரிமலி அரவுரி வள்புகண் டன்ன
புரிமென் பீலிப் போழ்புனை அடையல்”
- (பரிபாடல்: 21: 3-7)
தைப்பதற்கு ஏற்றவாறு அமைந்த தோலின் மேற்புறத்தை தாமரைமலரின் செந்நிற நீரால் நிறைந்த துறையில் அழுத்திப் பதப்படுத்துவர். அத்தோலின் முதுகுப்புறத்தே உள்ள மயிர்களிடையே கோடுகள் நிறைந்த[மலி] பாம்புத் தோலை பிளந்தது போல இருக்கும் மயிர்ப்பீலியின் அழகிய மென்மையான பிளவுகளால் அழகுபடுத்துவர். அந்த அடையல் காலணியை அணிந்தவனே! என்கின்றது பரிபாடல்.
சிறுபிள்ளைகள், பெண்கள் அணியும் மிதியல், மிதியடி போன்றவற்றில் சிறிய சலங்கைகளை தொங்கவிட்டு இருந்தனர். சலங்கையின் ஒலி எலி, பாம்பு பூச்சி என்பன அவர்களைத் தீண்டாது காத்தது. தொடுதோல், அடிபுதை தொடுதோல், தோல்புதை என பலவகை இருந்தன. விலங்குகளின் தோலால் செய்யப்பட்டு தோல் வாரால் கட்டப்பட்டிருந்தன.
அடையல்
அவை மரத்தாலும், பட்டையாலும், பட்டினாலும், பஞ்சினாலும், புற்களாலும், நாரினாலும், வாரினாலும் ஓலையாலும் காலணிகள் செய்யப்பட்டன. கால மாற்றத்திற்கு ஏற்ப இடத்திற்கும் செய்யும் தொழிலுக்கும் தகுந்தவாறு காலணிகளை செய்து அணிந்தது பண்டைத்தமிழரின் நிறைந்த வாழ்வைக் காட்டுகிறது. காலணிகளின் பண்டைத் தமிழ்ச்சொற்களை இனிமேலாது உரத்துச் சொல்வோமா?
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment