“மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை” - 345
பொருள்:
பிறப்பைப் போக்க முற்படுவோருக்கு இந்த உடம்பும் அதிகமகும். வேறு தொடர்புகள் எதற்கு?
விளக்கம்:
இத்திருக்குறள் துறவு எனும் அதிகாரத்திலுள்ள ஐந்தாவது குறளாகும். உலகப் பற்றுக்களில் இருந்து விடுபடுதலே துறவாகும். எமது வாழ்க்கைப் பயணத்தில் எது? எப்போது? எங்கே? எப்படி? நடக்கும் என்று எவரும் அறுதியிட்டுக் கூறமுடியாது. இவ்விதி உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது. செல்வச்செழிப்பில் மிதந்தோர் வறுமையில் வாடுவதும், நேற்று இருந்தோர் இன்று இல்லாது போதலும், நோயற்று வாழ்ந்தவர் நோயில் வீழ்வதும், மாடமாளிகைகள் இடிந்து மண்ணாவதும் அன்றாடம் காணும் துன்பக் காட்சிகளே.
அக்காட்சிகள் மனிதனுக்கு வாழ்க்கையின் நிலையில்லாத் தன்மையை உணர்த்தியது. நிலைமாறுகின்ற இந்த உலக இயற்கையை இயக்குவது எதுவோ அது நிலைத்த பொருளாக இருக்கவேண்டும். அந்த நிலைத்த பொருளை அடைந்தால் பிறப்பால் வரும் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என மனித அறிவு கூறிற்று. அதற்கு வழி என்ன? உலக ஆசைகளைப் பற்றுக்களை நீக்கினால் பிறப்பால் வரும் துன்பத்தை அறுக்கலாம் எனக் கண்டனர்.
அப்படி பிறப்பை அறுக்கும் - பிறப்பை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டோருக்கு அதை நீக்குவதற்குத் துணையாக இருக்கும் உடம்பும் கூடுதலானதே. ஏனெனில் உலகப் பற்றுக்களில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வோருக்கு தமது உடம்பின் மீதான பற்றும் நீங்கிப் போகும். உண்மையான துறவறத்தை மேற்கொள்வோரின் மனம் தமது பிறவித்துன்பத்தை நீக்குவதிலேயே குறியாக இருக்கும். அத்தகையோருக்கு உலகதில் இருக்கும் வேறு தொடர்புகள் எதற்கு?
இல்வாழ்வைத் துறந்து துறவறத்தை மேற்கொண்ட சுவாமிமார்கள் பட்டும் பீதாம்பரமும் வைடூரிய நகையும் பாதபூசையும் கனகாபிஷேகமும் கிரீடமுமாக விலைமதிப்பில்லாக் கார்களில் பவனி வந்து பட்டுமெத்தையில் பகல் நித்திரை கொள்கிறார்கள். அரசியல், களியாட்டங்கள், வேடிக்கைகள், விருந்துகள், மாலை, மரியாதை என்று உலகை வலம் வருகிறார்கள். பற்றுக்களைத் துறந்தோம் எனக்கூறித் துறவறம் போனோருக்கு இந்தத் தொடர்பாடுகள் தேவையா? என்பதே திருவள்ளுவரின் கேள்வியாகும்.
துறவறத்தைக் கடைப்பிடிப்போர் உலகத்தோடு வேறு தொடர்புகளை வைத்திருத்தல் சரியற்ற செயலாகும். ஏனெனில் அவர்களுக்கு அவர்களது உடலுடன் ஆன தொடர்புகூட வேண்டத்தகாத ஒன்றாகும். உடம்புடன் உள்ள பற்று அறும்பொழுதே பிறப்பை அறுக்க முடியும்.
No comments:
Post a Comment