Thursday, 2 February 2017

ஆடவர் மூடுங் கரும்பு


‘இயற்கையாக நிலத்தில் எங்கெல்லாம் பள்ளம் இருக்கிறதோ அங்கெல்லாம் பெரும்பாலும் நீர்நிலைகளை உண்டாக்குங்கள். நீரும் உணவுமே உயிர்களை வாழ்விக்கும்’ என்று எடுத்துச் சொல்லி, சங்ககாலப் புலவர்கள் அரசர்களை வழி நடத்தியதை சங்க இலக்கியம் பதிவுசெய்து வைத்துள்ளது. அத்தகைய சங்கச் சான்றோரின் சொற்கேட்டு நடந்த அரசர்களும் ஆறு, குளங்களை வெட்டி உழவுத்தொழிலை, பயிர்ச்செய்கையை மேன்மை அடையைச் செய்திருக்கிறார்கள்.

சங்ககாலக் கழனியில் கரும்பும் நெல்லும் விளைந்ததை ஐங்குறுநூறுப் பாடல்கள் சில சொல்கின்றன. தன் தோழியின் தலைவனைப்பற்றி
“பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
கழனி ஊரன்”                            - (ஐங்குறுநூறு: 4: 4 - 5)
என ஐங்குறுநூற்றுத் தோழி சொல்வதாலும் அறியலாம்.

நீர்வளம் மிகுந்ததால் செழிப்புற்று இருந்த வயல்களைச் சூழ கரும்பு வேலியிட்டு பாதுகாத்திருக்கிறார்கள். அந்தக் கரும்பு வேலியும் இக்காலத்தில் நாம் அடைக்கும் வேலிபோல் ஒற்றை வேலி அல்ல. அது கரும்புப் பாத்தி வேலி. அதாவது நெல் வயல்களைச் சூழ பாத்தி அமைத்து கரும்பை விளைவித்திருக்கிறார்கள். அப்பாத்தியில் கரும்பு ஓங்கிவளர்ந்து நெல்வயல்களுக்கு வேலியானது. விலங்குகள் வயலிலுள்ள நெற்பயிர்களை உண்ணாது கரும்பின் பாத்தி வேலிகள் தடுத்தன. அந்தப் பாத்தியில் பல மலர்கள் பூத்து வழிந்தன. அதனை கோவூர்க் கிழார்
“வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்தி பன்மலர் பூத்ததும்பின”
                                                 - (புறம்: 386: 10 - 11)  
எனப் புறநானூற்றில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

நீர் நெல்வயலுக்கு மட்டுமல்ல கரும்புக்கும் தேவை. கரும்புப் பாத்தியில் நீர் நிறைந்து இருப்பதை குறுந்தொகையில்
“கரும்பு நடுபாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே”
                                                    - (குறுந்தொகை: 262: 7 - 8)
‘கரும்பு நட்ட பாத்தியைப் போல் பெரிய ஆண்யானையின் அடிச்சுவட்டில் நீர் தங்கி நின்றது’ என்கின்றார் பாலை பாடிய பெருங்கடுங்கோ.

“கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்”
                                                 - (ஐங்குறுநூறு: 65: 1)
என்கின்றார் ஓரம்போக்கியார் என்றழைக்கப்பட்ட சங்ககாலப்புலவர். ஆதலால் கரும்புப் பாத்தியில் பூத்த மலர்கள் - ஆம்பல், அல்லி, குவளை, தாமரை போன்ற நீர் வாழ் தாவரங்களின் மலர்களே என்பதை அறியலாம்.
ஆடவர் மூடும் கரும்பு கணுக்களில் முளைத்தல்

கோவூர்க்கிழார் சொன்ன நெல்வயல். அதைச் சூழ உயர்ந்து வளர்ந்த செங்கரும்புப் பாத்தி வேலி. அந்தப் பாத்தியிலோ பலவகை மலர்கள். அவையும் பலவண்ணத்தில் பூத்துத் ததும்பின. அந்தக் காட்சியை ஒரு கணம் நினைத்துப்பாருங்கள்.  சங்ககாலத் தமிழருக்கு இருந்த அழகுணர்ச்சியை அது காட்டும். 

அழகுணர்ச்சி மட்டும் அவர்களிடம் இருக்கவில்லை. அதற்கும் மேலாக பயிர்ச்செய்கையின் ஆழ அகலங்களை மிக நுண்ணிதாக அறிந்து வைத்திருந்தனர் என்பதையும் மேற்கூறிய புறநானூற்றின் இரு வரிகளும் எடுத்துச் சொல்கின்றன. ஏனெனில் நெல் விளைவதற்கு மண்ணும் நீரும் இருந்தால் மட்டும் போதாது. நிலத்துக்கு நல்ல உரம் இடவேண்டும். கரும்பை அறுவடை செய்தபின் இருக்கும் உலர்ந்த கரும்புத் தோகைகளை சிறுசிறுதுண்டுகளாக வெட்டி, வயல் மண்ணில் கலக்க அவை மக்கி அடுத்த போக நெற்செய்கைக்கு உரமாகும். தத்தமது வயலைச் சூழவே வயலுக்கு வேண்டிய இயற்கை உரத்தையும் பெற்றிருக்கிறார்கள். என்னே அவர்கள் உரத்த சிந்தனை!

அத்துடன் தாமுண்ட சிலவகை உணவுகளையும் மதுக்களையும் பலவகைப் பூக்களால் மணமூட்டியதை சங்க இலக்கியம் சொல்கிறது. பொருநர் ஆற்றுப்படை
“பூக்கமழ் தேறல்”                             -( பொருணர்.ஆ: 157)
என மதுவின் பூமணத்ததைச் சொல்வதால் மணமூட்டத் தேவையான பூக்களையும் கரும்புப் பாத்தியில் பயிரிட்டிருக்கலாம். இயற்கையை எவ்வளவு ஆராய்ந்து அறிந்திருந்தால் இவ்வளவு நேர்த்தியாக நெல், கரும்பு, பூக்கள் எனப் பயிரிட்டிருப்பர்.

பாத்திகளில் நட்டு வளர்த்த கரும்புகளை எந்திரங்களில் இட்டு சாறு பிழியும் சத்தம் என்றும் ஓய்ந்ததில்லையாம் [துஞ்சாக் கம்பலை]. பிழிந்த கரும்பஞ்சாற்றில் இருந்து வெல்லம்[விசயம்] உற்பத்தி செய்ததால் புகைசூழ்ந்தே அந்த ஆலைகள் இருந்ததன. கரும்புச்சாற்றைக் குடிக்க விரும்பியோர் ஆலைகளில் அதனைப் பெற்றுக் குடித்ததையும் பெரும்பாணாற்றுப்படை
“எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
விசயம் அடூஉம் புகைசூழ் ஆலை தொறும்
கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் பெறுமின்”
                                                    - (பெரும்பாண்.ஆ: 260 - 261)
என்று மிக அழகாகச் சொல்கிறது.

அந்த எந்திரங்கள் ஓடிய சத்தம் ஆண் யானை பிளிறலுக்கு எதிர்க்குரல் கொடுப்பது போல இருக்கும் என்பதை
“கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்”
                                                   - (ஐங்குறுநூறு: 55: 1)
என ஐங்குறுநூறு கூறுகின்றது.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே பண்டைத் தமிழர் நெல்லோடு கரும்பையும்  பயிரிட்டுள்ளனர். ஆகையால் தமிழர் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து கரும்பைப் பயிரிட்டு வருகின்றனர்.
மன்மதன் கையில் வில்லாகும் கரும்பு

பெரும்பாலும் கரும்புச்செய்கையில் ஆண்களே ஈடுபடுவர். அவர்கள் கரும்பை நடும்போது மிகவும் விரைவாக மண்ணைத்தோண்டி, கணுக்களில் அரும்புள்ள சிறு துண்டுகளாக வெட்டிய கரும்புத் துண்டை கிடையாகப் போட்டு புதைத்து விடுவார்கள். மண்ணுக்கு மேலே தெரியும்படி கரும்பை நடாது மண்ணுக்குள் போட்டுப் புதைப்பதைக் குற்றாலக் குறவஞ்சிபாடிய திரிகூடராசப்ப கவிராயர் கண்டிருக்கிறார். கரும்பை நடும் ஆண்கள் மிக்க கோபத்துடன் அதைப் புதைப்பது போல் அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆண்களுக்குக் கரும்பின் மேல் கோபம்வரக் காரணம் என்ன? கரும்பு தன் இனிமையைவிட காதலிகளின் பேச்சு இனிமையோ எனக்கூறிப் பழித்ததென்று புதைக்கிறார்களாம். அவர்கள் புதைத்தாலும் கரும்பு மீண்டும் வளர்ந்து அவர்களது காதலிகளை என்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்.

அன்னலார் மொழி தன்னைப் பழித்ததென்று
      ஆடவர் மண்ணில் மூடுங் கரும்பு
துன்னி மீள வளர்ந்து மடந்தையர்ப
      தோளை வென்று சுடர்முத்தம் ஈன்று
பின்னும் ஆங்கவர் மூரலை வென்று
      பிரியுங் காலத்தில் பெண்மையை வெல்லக்
கன்னல் வேளுக்கு வில்லாக ஒக்கும்
      கடவுள் ஆரிய நாடெங்கள் நாடே 
                                                       - (குற்றாலக் குறவஞ்சி: 91)
அழகிய இளம் பெண்களின் இனிய சொற்களைப் பழித்தது என்று கூறி ஆடவர்கள் கரும்புகளை வெட்டி மண்ணில் குழிதோண்டிப் புதைத்து மூடுவர். எனினும் அவை மீண்டும் வளர்ந்து மடந்தையரின் தோள் அழகையும் தமது பொலிவினால் வென்றுவிடும். கரும்பு வெண்முத்து முத்தாகப் பூத்து பெண்களின் பற்களையும் வெற்றி கொள்ளும். பெண்களின் காதலர்கள் பிரிந்து சென்றிருக்கும் காலத்தில் அவர்களின் பெண்மையை வெல்வதற்காக மன்மதனின் வில்லாக இருக்குமாம். அப்படிப்பட்ட கரும்பு வளம் நிறைந்த குற்றால நாதரின் அழகிய நாடே எங்கள் நாடாகும். 

ஆடவர் மூடமூடக் கரும்பும் மீண்டும் மீண்டும் வளர்ந்து இனிமைச்சுவையால் பெண்மையை வெற்றி கொள்கிறதோ!
இனிதே,
தமிழரசி. 

No comments:

Post a Comment