Wednesday, 1 February 2017

மண்ணின் மைந்தர்கள்

திசாவாவி - அநுராதபுரம்

உலக இயற்கை எதனால் ஆனது என்னும் அறிவியல் உண்மையைச் சங்க இலக்கியப் புலவரான முரஞ்சியூர் முடிநாகனார் கூறுகிறார். அவர் சங்ககாலப் புலவர்களில் காலத்தால் முந்தியவர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் இயற்கையைப் போன்றவன் எனச் சொல்லும் இடத்தில் அதனைச் சொல்கிறார்.
“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல” - (புறம்: 2: 1 - 6) 

“மண் திணிந்த[செறிந்த] நிலனும்
நிலம் ஏந்திய[தாங்கிய] விசும்பும்
விசும்பு[ஆகாயம்] தைவரு[தடவும்] வளியும்
வளி[காற்று] தலைஇய[மேலெழும்] தீயும்
தீ முரணிய[மாறுபட்ட] நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல” 
முரஞ்சியூர் முடிநாகனார், ‘மண்ணைத் திணித்து வைத்திருக்கும் நிலமும் நிலம் ஏந்தி வைத்திருக்கும் ஆகாயமும் ஆகாயத்தைத் தடவிவரும் காற்றும் காற்றால் மேலெழும் தீயும் தீயிற்கு எதிர் மாறான தன்மையுள்ள நீரும் என்கின்ற ஐம்பூதங்களால் ஆன இயற்கையைப் போல்’ என்று இயற்கையின் தன்மையை இருபது சொற்களுக்குள் மிக நுட்பமாக அறிவியலோடு எடுத்துச் சொல்லியிருக்கும் பாங்கு போற்றுதலுக்கு உரியதல்லவா?

தொடர்ந்து நீர் ஊறும் மண்ணும் மண் திணிந்த நிலனுமாய் ஒன்றினுள் ஒன்று தங்கி ஐம்பூதங்களும் இந்த உலகை வழி நடத்துகின்றன. உலக உயிர்களின் உயிர்ப்புக்கு ஐம்பூதங்களும் வேண்டும். எனினும்  மண்ணே எத்தனையோ கோடானுகோடி உயிர்ப் பேதங்களைச் சுமக்கிறது. அத்தகைய மண்ணிற்கு வளம் சேர்ப்பவர்கள் யார்? அவர்களே மண்ணின் மைந்தர்கள்

ஊருக்கு, உலகிற்கு நன்மை செய்பவர்களுக்கு ‘மண்ணின் மைந்தர்’ என்று தமிழர் மதிப்பளிகிறார்களே அந்த மண்ணின் மைந்தர்களைச் சொல்லவில்லை. மதிப்பளிக்கப்படும்  மண்ணின் மைந்தர்களால் அணு அளவுகூட யான் கூறவரும் மண்ணின் மைந்தர்களுடன் போட்டி போடமுடியாது.  இந்த மண்ணின் மைந்தர்களுக்கு உலக உயிர்கள் யாவும் கடப்பாடு உடையன. அதாவது உலக இயற்கை தனக்கெனப் படைத்துக்கொண்ட மண்ணின் மைந்தர்கள் பற்றியே எழுதுகிறேன். இவர்கள் மண்ணில் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மண்ணின் வளத்திற்காகவே தம் வாழ்நாளைச் செலவு செய்பவர்கள். இவர்களால் பூமியிலுள்ள மண்ணின் பௌதிக, இராசயன, உயிரியற் காரணிகள் பேணப்படுகின்றன.

இம்மைந்தர்கள் மண்ணின் வளத்தை மட்டும் பேணவில்லை. அதற்கும் மேலாக தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் மண்ணிலுள்ள பல நுண்ணுயிர்களைக் கொல்லும் நுண்ணுயிர்க் கொல்லிகளாய் வாழ்வதோடு உலக உயிர்களின் வளர்ச்சிக்கு வேண்டிய கனிமச் சுழற்சியைச் செய்வதும் பெருவியப்பே. மிகச்சிறிய அளவில் வாழ்வதால் மனிதர்களால் புறக்கணிக் கப்பட்டாலும் உலக உயிரினங்களின் திடவாழ்வைப் பேணிப் பாதுகாத்து தொழிற்பட வைப்பதால் புவிசார்ந்த உயிரினங்கள் யாவும் இவர்களிலேயே தங்கி இருக்கின்றன. 


எனக்கு மண்ணின் மைந்தர் என்ற சொல்லை முதன்முதலில் சொல்லித் தந்தவர் ஒரு குயவர். தமிழில் ஆசிரியர், மருத்துவர் என்று சொல்வது போல் குயவர் என்பதும் ஒரு தொழிற் பெயரே. நான் சிறுவயதில் அநுராதபுரத்தில் வாழ்ந்த எனது அம்மம்மாவோடு போய் நிற்பேன். அம்மம்மா தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆறியதும் மண்குடத்திலும் மேசையில் இருக்கும் கூசாவிலும் ஊற்றி வைப்பார். நான் கூசா தண்ணீரைக் குடிப்பது வழக்கம். கூசாவில் தண்ணிர் முடிந்தால் குடத்து நீரையும் குடிப்பதுண்டு. எப்படியோ ஒருநாள் குடத்து நீரைவிடக் கூசாவில் இருக்கும் தண்ணீர் குளிர்மையாக இருப்பதைக் கண்டு கொண்டேன். அது ஏன் என்று அம்மம்மாவைக் கேட்டேன். அது அப்படித் தான் என்றவர், சட்டி, பானை வனைபவரைக் கேட்க வேண்டும் என்றார். குயமேடு வெசகிரிய மலைக்கு மற்றப் பக்கத்தில் இருந்தது. அந்தக் குயமேடு இருந்த இடமே  எல்லாள மாமன்னன் துட்டகைமுனுவுடன் யுத்தம் செய்த இடம் என்பர். 

ஒருநாள், வழமையாக எங்கள் வீட்டிற்கு வந்து பசுஞ்சாணம் எடுத்துச் செல்லும் வயதானவர் வந்தார். அவரிடம் அம்மம்மா என்னைக் காட்டி ‘குடத்துத் தண்ணீரைவிட கூசாத் தண்ணீர் ஏன் குளிர்மையாக இருக்கிறது?’ என்று நான் கேட்பதாகச் சொன்னார். அதைக் கேட்டு அந்த முதியவர் மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில் குயவர்களுக்கு என்ன தெரியும்? என எண்ணி, அவர்கள் என்னவெல்லாம் செய்து சட்டி, பானை வனைகிறார்கள் என்பதை யாரும் கேட்டதில்லையாம்.

பொக்குவாய்ச் சிரிப்போடு என்னைப் பார்த்து “குழந்த! நான் சொன்னாப் புரியுமா? அதெல்லாம் மண்ணின் மைந்தர்கள் துணையில்லாமல் செய்யமுடியாது. நம்ம வாழ்வே அவர்கள் கையில் இருக்கிறது” என்றார். அவர் நம்ம வாழ்வு என்று தன் வாழ்க்கையைச் சுட்டவில்லை இந்த உலக உயிரனைத்தையும் சுட்டினார் எனும் கருத்தைப் பின்னாளில் புரிந்து கொண்டேன். அவர்கள் எப்படி மண்ணின் மைந்தர்களின் உதவியுடன் கூசா வனைகிறார்கள் என்பதைக் கேட்டதும் அதை நேரடியாகப் பார்க்க ஆசைப்பட்டேன். குழந்த! அதைப் பார்க்க குயமேட்டிற்கு ஆதிகாலையில் வரவேணுமே என்றார். 

சொன்னால் புரிந்து கொள்ளும் வயதில்லை, பார்த்தால் புரிந்து கொள்வேன் என்று  குயமேட்டிற்கு ஒருநாள் அம்மாவின் தந்தை என்னைக் கூட்டிச் சென்றார். அந்தக் குயவர் ஓடிவந்து குயமேட்டைச் சுற்றிக்காட்டினார். அங்கே பலர் வேலை செய்தனர். மேடுகளில் சட்டி, பானை, குடம், அடுப்பு, பூந்தொட்டி, திருகணி, கூசா என விதம் விதமாக அடுக்கி வைத்திருந்தனர். அவர்கள் கூசா செய்வதற்கு வேண்டிய கனிமமண்ணைப் பெறுவதற்கு மண்ணாலான நீள்சதுரப் பாத்திகள் சிலவற்றை உண்டாக்கியிருந்தனர். அப்பாத்திகள் நான்கு பக்கமும் மரக்கட்டைகளால் அடைக்கப்பட்டிருந்தன.

மரக்கட்டை அடைப்புக்குள் காய்ந்த பொச்சுமட்டைகளைப் பரப்பி அதன் மேல் திசா வாவிக் [Tissa Wewa] செங்களிமண்ணோடு வைக்கோலும் சாணியும் சேர்த்துப் பிசைந்த மண்ணை போட்டு, அவற்றுக்கும் மேலே பழுத்த இலை தழைகளை இட்டு  பசுஞ்சாணத்தை நீரில் கரைத்து தெளித்து மண்ணைத் தூவித் தென்னையின் பச்சை ஓலைக் கிடுகால் மூடிவைத்திருந்தனர். மண்புழுக்களுக்கு [மண்ணின் மைந்தர்] சூரியஒளி படாதிருக்க கிடுகால் மூடி வைத்தனர் போலும். “ஒவ்வொரு நாள் காலையிலும் கிடுகை அகற்றி பசுஞ்சாண நீரை மண்ணின் மைந்தரின் படுக்கைக்குத் தெளிப்பர் எனவும் மேலே போட்ட இலை தழைகள் மைத்துப்போகப் போக கிடுகை அகற்றி மண்ணின் மேலே சிறுசிறு குவியலாக மண்புழு உண்டு கழித்து வைத்திருக்கும் நுழைமண்ணை வாரி எடுப்பர்” என்றும் அம்முதியவர் கூறினார். மண்புழு வாழுமிடங்களில் அதிகாலையில் நிலத்தில் சிறுசிறு குவியலாக குவிந்திருக்கும் மண்ணே நுழைமண்.

எனக்கு பச்சையோலைக் கிடுகை அகற்றி, குவியல் குவியலாக இருந்த நுழைமண்ணை வாரி எடுத்து, மட்பாண்டம் வனையும் மண்ணோடு கலந்து கூசா வனைந்து காட்டினார். மண்புழுவின் நுழைமண்ணே கூசாவில் வைக்கும் நீருக்கு குளிர்மையைக் கொடுக்கிறது என்றார். அவர் “மண்புழுவை நாங்குழுப்புழு எனவும் கூறி அவை கிட்டத்தட்ட ஒருவருடம் வாழும். இருபது நாட்களுக்குள் இன்னொரு புழுவை உண்டாக்கும் என்றும் சொன்னார். மண்ணிலுள்ள தாதுக்கள்[கனிமங்கள்] நுழைமண்ணில் சேரும். அதனால் கூசா நீரைக் குடித்து தொன்னூற்றி எட்டு வயதாகியும் தான் நோயின்றி திடமாக இருப்பதாகக் கூறி, என்னையும் கூசா நீரைக் குடித்து நீண்டகாலம் வாழச்சொன்னார்." அவர்கள் மீண்டும் மீண்டும் அவற்றிற்கு பசுஞ்சாண நீரும், இலை தழை உணவும் கொடுத்துக் கொடுத்து அவற்றை வளர்த்து கூசா செய்யத் தேவையான நுழைமண்ணை எடுப்பதை அறிந்தேன்.

இக்காலத்தில் கூசா வனைவோர் அப்படிச் செய்வதில்லை. ஏனெனில் கூசா நீரைக் குடிக்கும் ஆர்வத்தில் 2015ல் இலங்கை சென்ற போது ஒரு கூசா வாங்கினேன். அதில் ஊற்றி வைத்த நீர் குளிரவில்லை. மட்குடத்தில் வைக்கும் நீரைவிட அது சூடாக இருந்தது. அக்கூசாவுக்கு வெளியே அடித்திருந்த வண்ணத்தின் இரசாயனக் கலவையும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் மண்ணின் மைந்தரின் தேவையை இங்கே எழுதுகிறேன். 


மண்புழுவின் வாயினுள் நுழைந்து வெளிவரும் மண்ணாதலால் நுழைமண் என்று எம் தமிழ் முன்னோர்கள் மண்புழுவின் கழிவைச்[casts - their faeces] சொன்னார்களோ அல்லது நுண்மையான மண் என்ற கருத்தில் கூறினார்களோ தெரியவில்லை. ஏனெனில் நுண்மை என்பதை நுழை என்றும் கூறுவர். மண்ணில் இருக்கும் கனிமங்களை மண்புழுவின் நிறத்தைக் கொண்டு நம் முன்னோர் அறிந்ததை ஒரு தனிப்பாடல்
“நாங்கூழ் மாமை காட்டும் நானிலத்தின் தாதுதன்னை”

மண்புழு[நாங்கூழ்] நிறம்[மாமை] காட்டும் நானிலத்தின் கனிமங்களை[தாதுதன்னை‘குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களிலும் இருக்கும் கனிமங்களை மண்புழுவின் நிறம் காட்டுமாம்’ எனச் சொல்கிறது.

மாணிக்கவாசகரும் நீத்தல் விண்ணப்பத்தில்
“எறும்பிடை நாங்கூழெனப் புலனால் அரிப்புண்டு”
                                                       - ( திருவாசகம்: 6: 25)
என ‘எறும்புகள் பற்றிஇழுத்துச் செல்லும் மண்புழு துடிப்பதைப் போல தானும் ஐம்புலன்களால் அரிப்புண்டு துடிக்கிறார்’ என்றார். தமிழர்கள் மண்புழுவை நாங்கூழ், நாங்குழு, பூநாகம், நாகப்பூச்சி, நிலவேர், நாங்குழுப்புழு, மண்ணுண்ணி, நாங்குழிப்பாம்பு, நாங்குழிப்பூச்சி, மண்ணுண்ணிப்பாம்பு எனப்பல பெயர்களால் அழைத்துள்ளனர்.

உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இனங்கள் மண்புழுவில் இருப்பினும் அவற்றை மூன்று பிரிவினுள் அடக்கலாம்.
1. மண்ணின் மேற்பரப்பில் காணப்படும் மண்புழுக்கள்.
2. மண்ணின் மேலடுக்கில் காணப்படும் மண்புழுக்கள்.
3. மண்ணின் கீழடுக்கில் வாழும் ஆழ்துளை மண்புழுக்கள்.   



1. மண்ணின் மேற்பரப்பில் காணப்படும் மண்புழுக்கள்[Epigeic].
இவ்வகை மண்புழுக்கள் மண்ணின் மேற்பரப்பில் உள்ள சருகுகள், பழுத்த இலைகள் போன்ற தாவரக் கழிவுகளை உண்டு வாழும். இவை 10 செ மீற்றர் அளவு நீளத்தில் இருக்கும். எவ்வித வெப்பநிலைக்கும் ஈரத்தன்மைக்கும் ஏற்றாற்போல தம்மை இசைவாக்கம் செய்து கொள்ளும். சாணக்குவியலுக்குள்ளும் இவற்றைக் காணலாம். ‘மண்புழுஉரம் உண்டாக்க’ இந்தவகை மண்புழு ஏற்றதாகும். 

2. மண்ணின் மேலடுக்கில் காணப்படும் மண்புழுக்கள்[Endogeic]. 
இந்தவகை  மண்புழுக்கள் மண்ணின் மேலடுக்கில் குறுக்காகவும் நெடுக்காகவும் தற்காலிக துளைகளை உண்டாக்கி வாழும். அத்துளைகள் இவற்றின் நுழைமண்ணால் நிரப்பப்படுவதால் அதற்குள் நிரந்தரமாக இவற்றால் வாழமுடியாது. எனவே புதுப்புது துளைகளை உண்டாக்கும். அத்துளைகள் மண்ணின் காற்றோட்டத்திற்கும் நீரோட்டத்திற்கும் உதவுகின்றன. மண்புழு உரம் தயார் செய்ய இவ்வகை மண்புழுக்களும் உகந்தவையே.

3. மண்ணின் கீழடுக்கில் வாழும் ஆழ்துளை மண்புழுக்கள்[Anecic]
இம்மண்புழுக்கள் ஆறடி நீளத்திற்கும் மேலான துளையினுள் நிரந்தரமாக வாழும். இரவில் மண்ணின் மேல் ஊர்ந்து திரிந்து தமது உணவைப் பெறுகின்றன. அவை வாழும் துளை வாயிலை மூடி நுழைமண்ணை வைத்திருக்கும். நம்மவர்கள் இவ்வகை மண்புழுவை மண்வேர் எனவும் பூநாகம் என்றும் அழைத்தனர்.

மண்புழுக்கள்
1. மண்ணின் கீழே உள்ள கனிம வளங்களை மேலே கொண்டு வருகின்றன. 
2. அத்துடன் தாவர வளர்ச்சிக்குத் தேவையான பற்றீரியா, பங்கஸ் போன்றவை வாழ வழி செய்கின்றன. 
3.   காற்றும் மழை நீரும் மண்ணினுள் செல்லத் துணை செய்கின்றன. 
4. மழைநீர் ஓடிச்சென்று கடலினுள் கலப்பதைத் தடைசெய்து, நிலத்தடி நீராகச் சேமிக்கச் செய்கின்றன. 
5. தாவரவேர்கள் கனிமநீரைப் பெற்றுக்கொள்ளவும் சுவாசிக்கவும் உதவுகின்றன.

மண்புழுவின் தேவை  அறிந்தே ஔவையாரும் ஆத்திசூடியில்
“மண் பறித்து உண்ணேல்”                          - (ஆத்திசூடி: 23)
என்று சொன்னார். 

பறித்தல் - தோண்டுதல்; மண் பறித்து - மண்ணைத் தோண்டி; அதாவது மண்ணைத் தோண்டி எடுத்து அதனை விற்று உண்டு உயிர் வாழாதே என்றே கூறியுள்ளார். நிலத்தில் உள்ள மண்ணைப் பறித்து எடுக்க எடுக்க மண்ணை வளமாக்க அரும்பாடுபடும் மண்ணின் மைந்தர்கள் அழிந்து ஒழிந்து போவார்கள். இவர்களின் அழிவு மண்ணின் வளத்தை மட்டுமல்ல உலகப் பௌதிக, இரசாயன, உயிரியற் காரணிகளைத் தாக்குவதால் இயற்கையின் சுழற்சி பாதிக்கப்படும்.

பாருங்கள்! நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததால் மண்புழுவை மண்ணின் மைந்தர் எனப் போற்றி வளர்த்து எதுவித இராசாயனக் கலப்பும் இன்றி நல்ல உணவையும் நீரையும் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். நாமோ வெளிநாட்டு மோகத்தில் மயங்கி செயற்கை உணவு சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டோம். என்னே எங்கள் மதிநுட்பம்!!
இனிதே,
தமிழரசி.

2 comments: