Sunday, 29 January 2017

குறள் அமுது - (129)


குறள்:
“நல்ஆண்மை என்பது ஒருவர்க்குத் தான்பிறந்த
இல்ஆண்மை ஆக்கிக் கொளல்”                      - 1026

பொருள்:
ஒருவர்க்கு நல்ல ஆண்மை சொல்லப்படுவது, தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை உண்டாக்கிக் கொள்ளலேயாகும்.

விளக்கம்:
குடி செயல் வகை என்னும் அதிகாரத்தில் உள்ள ஆறாவது திருக்குறள் இது. தான் பிறந்த குடும்பத்தை மேன்மை அடையச் செய்தலே குடி செயல் வகையாகும். அடிமைப்பட்டு, வறுமையுற்று இருக்கும் குடும்பத்தை உயர்வடையச் செய்யும் கருத்தில் குடிசெயல் வகை சொல்லப்படவில்லை. எவ்வகைக் குடும்பத்திற்கும் இது பொதுவானது. 

இச்செயல் ஆண்மையுடன் தொடர்பு உடையதாயினும் ஆண்மை, நல்ஆண்மை, பேராண்மை மூன்றும் வெவ்வேறானவை. இத்திருக்குறள் நல்ஆண்மை என்று எதனைச் சொல்வர்? எனும் கேள்விக்கு ஏற்ற விடையைத் தருகிறது.

தான் பிறந்த குடியை - குடும்பத்தை அது இருந்த நிலையிலும் பார்க்க முன்னேற்றி, தன்னைச் சேர்ந்தோரை தனது அன்பாலும் பண்பாலும் இனிய பேச்சாலும் தன் வயப்படுத்தலே குடும்பத்தை ஆளும் தன்மையாகும். இன்னொரு வகையில் சொல்வதானால் குடும்பத்தோரின் சுமையை மிகவிருப்புடன் தாங்கி நன்மையிலும் தீமையிலும் கைகொடுத்து வழிநடத்தி குடும்பத்தை தன் கட்டுக்கோப்புக்குள் வைத்திருத்தல். இத்தகைய தன்மை உடையோரே நல்ஆண்மை உள்ளோர் என்பது திருவள்ளுவரின் முடிவாகும். 

எந்நேரமும் கோபப்பட்டு, அடித்து உடைத்து, குடும்பத்தோருக்கு வேண்டியது என்ன என்பதையும் அறியாது காதுகொடுத்து கேட்கமுடியாத சொற்களால் திட்டி, வஞ்சனைப் புகழ்ச்சி செய்து குடும்பத்தை ஆள்வது நல்ஆண்மை ஆகாது. இத்தகைய செயல்கள் ஆண்மைக்கு இழுக்காகும். தான் உழைப்பதை தன் குடும்பத்துக்கும் கொடுக்காது, குடித்து இருப்பதையும் அழித்து குடும்பம் இருந்த நிலையை சீரழிப்பது நல்லாண்மை ஆகுமா? அதனாலேயே வள்ளுவர் ‘இல்ஆண்மை ஆக்கிக் கொளல்’ வேண்டும் என்கின்றார்.


இல் + ஆண்மை = இல்ஆண்மை. இல் - குடி, வீடு, மனைவாழ்க்கை, குடும்பம்; ஆண்மை - ஆளுந்தன்மை. ஆதலால் இல் ஆண்மை என்பது குடும்பத்தை ஆளுந்தன்மையாகும். எவரொருவர் குடும்பத்தை ஆளும் தமையை தன்னில் வளர்த்துக் கொள்கிறாரோ அவரே நல்லாண்மை உள்ளோராவர்.

No comments:

Post a Comment