Thursday, 25 August 2016

இறைவன் தோன்றுவான்


இறைவன் என்பது உண்மையா? உண்மையானால் எங்கே? எப்படி இருக்கின்றான்? அவனை அறிவது எப்படி? அதற்கு வழி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை காண முயன்ற அருளாளர்கள் பலராவர். அவர்கள் தத்தமது இறை அநுபவத்தை சொல்லிச் சென்றிருக்கிறார்கள். இருப்பினும் அவரவர் சொன்ன பாங்கு அவர்களது அநுபவத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது. தாம் கண்ட இறை அநுபவத்தை தாய்மையோடு இழைத்துத் தந்தவர் காரைக்கால் அம்மையாரே. அவரின் அடியொற்றி மிக இலகு தமிழில் இறைவனைக் காணும் வழிகளை அடிக்கித் தந்திருப்பவர் திருநாவுக்கரசு நாயனாரே. அவற்றுள் ஒன்றைப் பார்ப்போம்.

இறைவன் எப்படி இருப்பான் என்பதை அறியவேண்டுமா? காய்ந்த மரத்தை வெட்டி, விறகாக்குவோம்.  அதனைக் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருப்போம். அந்த விறகை எரித்து சமைப்போம். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. காய்ந்த மரமாக இருந்த போதும், விறகாக வெட்டிய போதும், விறகுக் கட்டாகாக் கட்டி வைத்திருந்த பொழுதும் பற்றி எரியாத அந்த ‘எரி சக்தி’ விறகினுள் தானே இருந்தது! விறகுக்குள் தீ எப்படி மறைந்து இருந்து எரியும் பொழுது வெளிப்படுகின்றதோ அவ்வாறே உலக இயற்கை எங்கும் வெப்பசக்தி, ஒளிச்சக்கி, மின்சக்தி, ஒலிச்சக்தி எனச் சக்தி வடிவில் இறைவன் மறைந்திருக்கின்றான்.

இறைவனை அறிவது எப்படி? அதற்கு வழி என்ன? பசுவில் இருந்து பாலைக்கறந்து, கறந்த பாலைக் காச்சி, தயிராக்கி, தயிரைக் கடைய வெண்ணெய் வருகிறது. பசுவில் பாலைக் கறந்த போதும், கறந்த பாலைக் காச்சிய பொழுதும், காச்சிய பாலைத் தயிராய் ஆக்கிய வேளையிலும் கண்ணுக்குத் தெரியாதிருந்த வெண்ணெய் தயிரைக் கடையத் தெரிகிறது. பாலுக்குள் வெண்ணெய் எப்படி மறைந்திருந்து கடையும் போது வெளிப்படுகின்றதோ அதுபோல் எமது உள்ளத்துள் - சிந்தையுள் அன்பு என்னும் மத்தை[உறவு கோல்] நட்டு, அதில் உணர்வாகிய கயிற்றறைச் சுற்றி அங்கும்  இங்கும் இழுத்துக் கடைய வெண்ணெய் தெரிவது போல் இறைவன் தோன்றுவான்.

“விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”

என்பது திருநாவுக்கரசு நாயனார் தேவாரம். மத்தால் தயிர்கடையும் போது கையால் முறுகக் கடைதல் ஒருவிதம். மேலே படத்தில் உள்ளது போல் மத்தை நட்டு, அதில் ஒரு கயிற்றைச் சுற்றி அங்கும் இங்கும் இழுத்துக் கடைவது இன்னொருவிதம். இத்தேவாரத்தில் திருநாவுக்கரசு நாயனார் மேலே படத்தில் உள்ளது போன்ற தயிர் கடைதலையே குறிப்பிட்டுள்ளார். 

அன்பின் பிணைப்பாலேயே உறவுகள் ஏற்படுகின்றன. ஒருவரிடம் எமக்கு இருக்கும் அன்பு எத்தகையது என்பதை நம் உணர்வே எமக்கு உணர்த்துகிறது. உறவுக்குக் காரணம் அன்பு ஆதலால் அன்பாகிய கோலை மத்தாக நடச்சொல்கிறார். அன்பாகிய கோலில் உணர்வு என்னும் கயிற்றைச் சுற்றி கடையக் கடைய இறைவன் தோன்றுவான். இறைவனை அறிய திருநாவுக்கரசு நாயனார் சொன்ன வழி மிக நல்ல வழி அல்லவா!
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment